Thursday, August 6, 2015

சாப்பிட வாங்க!

கடந்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து என் பங்கின் பங்குத்தந்தையும், உதவிப்பங்குத்தந்தையும் விடுமுறைக்குச் சென்றுவிட்டனர். 'நானே ராஜா! நானே மந்திரி!' என்று இருக்கிறேன் இப்போது. சமைக்க வரும் உதவியாளருக்கும் விடுமுறை.

மதியம் 12 மணி ஆனவுடன் புதிய கவலை ஒன்று வந்துவிடுகிறது: 

'என்ன சாப்பிடுவது?'

ரொம்ப சிம்ப்பிள்.

அடுப்பறைக்குப் போகணும்.

ஒரு கிளாஸ் அரிசி வேகவைப்பதற்கேற்ற பாத்திரம் ஒன்றைத் தேடி எடுக்கணும்.

மறுபடியும் ரூமுக்கு வரணும்.

பங்களாதேஷ் கடைஒன்றில் வாங்கி வைத்த பாஸ்மதி அரிசியை எடுத்துக்கொண்டு போகணும்.

ஒரு கிளாஸில் முக்கா கிளாஸ் அரிசி.

ஒரு பருக்கை குறைந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம்! 
ஆனால் ஒரு பருக்கை மிஞ்சிவிடக்கூடாது!
இதுதான் ஃபுட் மேனேஜ்மெண்ட்.

ஒரு கிளாஸ் அரிசிக்கு ரெண்டு கிளாஸ் தண்ணி!

இது எங்க அம்மா ஃபோனில் சொன்ன சமையல்குறிப்பு.

ஒரு நாள் மறந்துபோய் ரெண்டு கிளாஸ் அரிசியும், ஒரு கிளாஸ் தண்ணியும் ஊற்றிவிட்டேன்.

தண்ணி ஊத்தியாச்சு.

அடுப்புல வச்சாச்சு.

கொஞ்சம் உப்பு.

கொஞ்சம் சீரகம்.

உலை கொதிக்கும் நேரம், மறுபடியும் ரூமுக்கு வந்து அரிசி பாக்கெட்டை வைக்க வேண்டும்.

இடையில் கொஞ்சம் டிவியில் இத்தாலியின் நியுஸ்.

அவர் இவரைக் கொன்றார்.

இவர் அவரைக் கொன்றார்.

போதைப் பொருள் கடத்தல்.

விமானநிலையத்தில் தீ.

ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டம்.

வாட்டும் வெயில்.

கடற்கரையில் கூட்டம்.

ஒரே செய்திகளைத்தான் தினமும் வேறு வேறு பெயர்களில் சொல்வார்கள்.

ஒரு கண் டிவியில், மறு கண் அடுப்பில் இருக்க வேண்டும்.

பொங்கிவரும் தண்ணீரைக் கட்டுப்படுத்த

கேஸ் ரெகுலேட்டரை கூட்டிக் குறைக்க வேண்டும்.

வெந்தவுடன் ஸிம்மர் மோட்.

கொஞ்சம் பட்டர்.

இரண்டு கரண்டி பருப்பு பொடி.

கலக்கினால் பருப்பு சாதம் ரெடி.

'வெறும் சாதம் சாப்பிட்டா கார்ப்ஸ். ஒரு முட்டை சேர்த்துக்கொள்.'

இது அம்மாவின் புதிய பாடம்.

முட்டையைத் தேடி கண்டுபிடித்தாயிற்று.

முட்டை நல்லதா, கெட்டதா என்று பார்க்க இரண்டு வழிகள்:

ஒன்று குலுக்கிப் பார்க்க வேண்டும். 'க்ளுக்' என்ற சத்தம் கேட்டால் அது கெட்டுவிட்டது.

இரண்டு தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட வேண்டும். தண்ணீரில் மிதந்தால் அது கெட்டுவிட்டது.

நான் கையில் எடுத்த முட்டை ரெண்டு டெஸ்டிலும் தோற்றுவிட்டது.

ஆம், கெட்டுவிட்டது.

வெளியில் போய் முட்டை வாங்கவா?

வெயிலும் ரொம்ப இருக்கு!

ஷார்ட்ஸ்ல போகவும் கூச்சமா இருக்கு!

யாரோ வாங்கி, என்றோ மிச்சம் வைச்ச சிப்ஸ் பாக்கெட்டின்

'எக்ஸ்பைரி டேட்' பார்த்து,

'சாப்பிடலாம்' என எனக்கு நானே தரச்சான்று கொடுத்து,

அழகிய தட்டு,

நடுவில் பருப்பு சாதம்,

சுற்றிலும் சிப்ஸ்.

இனிதே நிகழ்ந்தேறியது மதிய உணவு.

சாப்பிட்டாயிற்று!

இனி பாத்திரங்களை யார் கழுவுவார்?


2 comments:

  1. அரிசியையும் தண்ணீரையும் கலந்து அடுப்பில் வைத்தால் வரக்கூடியது ' சாதம்' மட்டுமே! இந்த அறிவியல் சித்தாந்தத்தை இத்தனை கவிதையாக வெளிப்படுத்திய தந்தைக்கு ஒரு சபாஷ்! ஆனாலும் ஒரு விஷயத்தைப்பாராட்டியே தீரவேண்டும்.திருமணம் முடிந்து 30, 35 வருடங்களாகியும் சமையலறைப் பக்கம் எட்டிப்பார்க்காத ஆண்களும் இருக்கிறார்கள் என எண்ணும்போது தந்தை படைத்தது ஒரு 'சாதனை' என்பதை அடித்துச்சொல்லலாம்.நீங்கள் மட்டும் இப்போ,இங்கே இருந்திருந்தால் கண்டிப்பாகத் திருஷ்டி சுற்றிப் போட்டிருப்பேன்!!!

    ReplyDelete
  2. Dear Fr Y K:
    Your virgin preparation of rice ["sAtham"] makes a great reading. Mrs Philo Aro complements your endeavour as, "sAthanai". I suppose when a Catholic Priest prepares "sAtham", it indeed is quite a "sAthanai" - rhymes well.

    ReplyDelete