Monday, August 24, 2015

சர்க்கரை அளவு

ஒரு வணிக நிறுவனம் தன் பொருட்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு எண்ணற்ற வழிகளைக் கடைப்பிடிக்கிறது. அவற்றில் ஒன்று 'போதனை' (Canvassing). அதாவது, தன் நிறுவனத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட ஒருவரை நுகர்வோரின் முன் நேரிடையாகவோ, ஊடகம் வழியாகவும் நிறுத்தி, தன் பொருளைப் பற்றி அவரைப் போதிக்கச் செய்கிறது. போதிக்கும் நபர் நுகர்வோருக்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும். அல்லது நுகர்வோரைக் கவர்ந்திழுப்பவராக இருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கும், நுகர்வோருக்கும், தாங்கள் 'போதிக்கும்' பொருளுக்கும்கூட எந்த தொடர்பும் இல்லை. ஆக, இவர்களின் போதனை இவர்களைப் பாதிக்கவில்லையென்றாலும் இவர்கள் விளம்பரம் செய்யும் நிறுவனத்தை ஒருபடி முன்னால் எடுத்துச்செல்கின்றது. மேலும், இந்தப் போதனை அல்லது போதிக்கும் நபர், நிறுவனத்திற்கும், நுகர்வோருக்கும் இடையே ஒரு இணைப்புக் கோடாக செயல்படுகின்றார்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். 1 தெச 2:1-8) தூய பவுலின் போதனை பற்றியும், நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 23:23-26) பரிசேயர் மற்றும் சதுசேயரின் போதனை பற்றியும் வாசிக்கின்றோம்.

எதற்காக பரிசேயர்கள் அல்லது சதுசேயர்களோ அல்லது பவுலோ போதிக்க வேண்டும்?

மதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மேக்ஸ் வேபர் ஒரு கோட்பாட்டைச் சொல்கின்றார்: Routinization of charisma. இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு மதத்தை நிறுவும் நிறுவனர் இருக்கும் வரை, மதம் அந்த நிறுவனரின் 'அருள்;கொடை' (charism)யால் மக்களை ஈர்க்கிறது. அவர் இறந்தவுடன் அல்லது மறைந்தவுடன் அவரின் இடத்தைப் பெறும் மற்றவரின் 'அருள்கொடையை' நோக்கி மக்கள் வருவதில்லை. ஆக, முதல் நிறுவனரின் அருள்கொடை உடனடியாக ஒரு 'தொடர் கருத்தியலாக' (routine cult or doctrine) மாற்றப்படுகிறது. இந்தக் கருத்தியல் நிறுவனரின் சீடர்களால் போதனையாகத் தரப்படுகிறது.

இப்போது இந்தச் சீடரின் மேல் இரண்டு சுமை ஏற்றப்படுகிறது. ஒன்று, இவர் தன் நிறுவனரின் உள்ளத்தைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு, நிறுவனர் இல்லாத குறை ஏற்படாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சீடத்துவம் படிப்படியாக குருத்துவமாக அல்லது பக்தியாக மாறுவது இந்த இடத்தில்தான்.

இயேசுவுக்கு முதலில் சீடர்கள் இருந்தார்கள். ஆனால் படிப்படியாக சீடர்கள் மறைந்து இன்று வெறும் பக்தர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். சீடராக இருப்பதை விட பக்தராக இருப்பது ரொம்ப எளிதுதானே! இது இயேசுவுக்கு மட்டுமல்ல. எல்லா பெரிய மனிதர்களுக்கும் பொருந்தும். நாட்டையே தன் பின்னால் வைத்திருந்த மகாத்மா காந்தி என்று அக்டோபர் 2 மட்டும் அஞ்சலி செலுத்தப்படுகின்றார்.

இந்த நிலை உருவானதற்குக் காரணம் என்ன?

போதிப்பவர்கள் தங்கள் நிறுவனரின் அருட்கொடையை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல், வெறும் மேலோட்டமான சட்ட, திட்டங்களைப் பேசுவதால்தான். இதைத்தான் இயேசு பரிசேயர்களிடம் சாடுகின்றார்: 'நீங்கள் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை போதிக்காமல் அல்லது கடைப்பிடிக்காமல், வெறும் புதினா, சீரகம், சோம்பு பற்றி போதிக்கிறீர்கள்!' நீதி, இரக்கம், நம்பிக்கை எல்லாம் கடைப்பிடிக்க கடினமானது. ஆக, இந்த மதிப்பீடுகளோடு சமரசம் செய்து கொள்ளும் பரிசேயர்கள் மக்களை வருடிக்கொடுக்கும் இதமான ஆன்மீகத்தை முன்வைக்க விரும்புகின்றனர்.

ஆனால், ஆன்மீகம் என்பது ஒரு மருத்துவரின் கத்தி போல. அது உடலில் பட்டால் வலிக்கத்தான் செய்யும். ஆனால், உடலில் அது பட்டால்தான் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் புற்றுநோய்க்கட்டியை அது வெளியே எடுக்கும். மற்றொரு பக்கம் இன்று எல்லாரும் 'வலிக்காத' ஆன்மீகத்தையே விரும்புகின்றோம். பாவம், நரகம், மோட்சம், உத்தரிக்கிற நிலை பற்றிப் பேசும் அருட்பணியாளர்கள் இன்றைய ஆன்மீக மார்க்கெட்டில் விலைபோவதில்லை. 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்!' என்ற புத்தரின் போதனை நமக்கு வலித்தது. ஆனால் 'அத்தனைக்கும் ஆசைப்படு!' என்ற ஜத்குருவின் போதனை நமக்கு இனிக்கிறதே! அப்படித்தான்!

நாளைய முதல் வாசகத்தில் பவுல் தெசலோனிக்க நகர திருச்சபைக்கு தான் போதித்த விதம் பற்றி எழுதுகின்றார். 'தாய் தன் குழந்தையை பேணி வளர்ப்பதுபோல!' என்ற அவரின் உருவகம் பவுல் தன் திருச்சபையின்மேல் கொண்டிருந்து பற்றை நன்றாக படம்பிடித்துக்காட்டுகிறது.

இன்று நான் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்கிறேன்:

1. என் ஆன்மீகத்தின் சர்க்கரை அளவு என்ன?
2. நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஆன்மீகத்தின் சர்க்கரை அளவு என்ன?

அளவான சர்க்கரை! நலமான வாழ்வு!

2 comments:

  1. நம் அன்றாட நடைமுறை வாழ்வில் நமக்குப் பழக்கப்பட்ட விஷயங்களை எடுத்துச்சொல்லி நமக்குப்புதிதான விஷயங்களைப் புரிய வைப்பதில் தந்தைக்கு நிகர் அவர்தான்.இயேசுவும்,அவருக்குப்பின் வந்தவர்களும் தங்களின் உயிருக்கிணையாக நினைத்த ஆன்மீகத்தை தற்கால மதவாதிகள் ஒரு வருடிக்கொடுக்கும் ஆன்மீகமாக மாற்றியிருப்பது சாபக்கேடுதான்.இந்தக் கருத்துக்கு இன்னும் உயிர் தருவது போல் உள்ளன அடுத்து வரும் வரிகள்: " ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரை மறந்து அத்தனைக்கும் ஆசைப்படு" எனும் ஜத்குருவைக் கொண்டாடுகிறோம். இருவரின் கூற்றுமே சரிதான் எனினும் அவற்றின் அர்த்தம்நமக்கு சரியாக விளக்கப்படவில்லை என்பதே காரணம். யாரை நம்புவது நம் ஆன்மீகத்தை சரி செய்ய? நம் ஆன்மீகத்தின் சர்க்கரை அளவை அளக்க நம் மனசாட்சியை விட ஒரு கருவி தேவையா என்ன? அளக்கும் கருவி சரியாயிருப்பின் நம்'ஆன்மீகமும்'தானே சரியாகி விடுமே! அதை முதலாக சரி செய்வோமா ??

    ReplyDelete
  2. ஆன்மீகம் என்பது ஒரு மருத்துவரின் கத்தி போல. அது உடலில் பட்டால் வலிக்கத்தான் செய்யும். ஆனால், உடலில் அது பட்டால்தான் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் புற்றுநோய்க்கட்டியை அது வெளியே எடுக்கும். மற்றொரு பக்கம் இன்று எல்லாரும் 'வலிக்காத' ஆன்மீகத்தையே விரும்புகின்றோம். ஆன்மீகத்தை பற்றி மிக அழகாகவும், ஆழமாகவும் மற்றும் வலியுடனும் கூறியிருக்கும் என் பாச தந்தைக்கு நன்றிகள் !உங்கள் வலியுடன் கூடிய போதனை இன்றைய சூழ்நிலையில் நியாயமானதே.

    ReplyDelete