Saturday, August 29, 2015

முயற்சி திருவினையாக்கும்

'வாழ்க்கை மிக குறுகியது. காதல் கொள்ளுங்கள்!' (Life is short. Have an affair) என்ற கவர்ந்திழுக்கும் முதற்பக்கத்துடன் இயங்கிவந்த 'ஆஷ்லி மேடிசன்' (Ashley Madison) என்ற 'காதல்' வலைதளம் கடந்த வாரம் சில தொழில்நுட்ப கில்லாடிகளால் ஊடுருவப்பட்டது. 'திருமணத்திற்கு வெளியே உறவு கொள்ள' ஒருவர் மற்றவரை நெருக்கமாக்கும் இந்த வலைதளத்தில் தங்கள் விவரங்கள் மற்றும் நிழற்படங்களைப் பதிவு செய்திருந்த பலரையும் இந்த கில்லாடிகள் இப்போது பயமுறுத்தி காசுபார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். 'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' இதில் பதிவு செய்தவர்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் இந்திய நகரங்களில் இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியிலில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம் வேறு.

சரி! இப்போ எதுக்கு இந்த டீடெய்ல்ஸ் எல்லாம்!

நேற்று மதியம் என் நண்பர் ஒருவருடன் வங்கிக்குச் சென்றபோது, உரையாடலில் போகிற போக்கில் அவர், 'இப்ப எல்லாம் யாரு ப்ராமிஸ் எல்லாம் கீப்-அப் பண்ணுறா? நாங்களும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும்போது எல்லார் முன்னிலையிலும் ப்ராமிஸ் கொடுத்தோம். ஆனால், திருப்பலி, விருந்து, அன்பளிப்பு என கொண்டாடி மகிழ்ந்த அந்த நாளை மறந்தது போல கொடுத்த ப்ராமிஸையும் மறந்துவிட்டோம்!' என்றார்.

இதற்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அப்படியே உரையாடல் வேறு தலைப்பிற்கு மாறியது.

இன்று காலை அருட்செல்வியரின் இல்லத்தில் திருப்பலியில் மறையுரை வைத்துக்கொண்டிருந்தபோது ஒரு புதிய ஐடியா வந்தது.

இன்று திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்தைக் கொண்டாடினோம். இன்றைய நற்செய்திப் பகுதியில் மாற்கு நற்செய்தியாளர் யோவானின் மறைசாட்சியத்தைப் பற்றிப் பதிவு செய்ததை நாம் வாசித்தோம். திருப்பலி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதும் என்னுள் அந்த வசனம் ஓடிக்கொண்டே இருந்தது.

அது என்ன வசனம்?

'இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் (வாக்கு கொடுத்ததால்) அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்.' (மாற்கு 6:26-27)

துரியோதனன் என்றவுடன் நமக்கு அவன் தீயவன் என எப்படித் தோன்றுகிறதோ, அப்படித்தான் ஏரோது என்றவுடன் நான் அவனை தீயவன் என நினைக்கின்றோம். ஆனால் தீயவர்களிடத்திலும் சில நல்ல குணங்கள் இருக்கின்றன. ஏரோதிடம் நான் மூன்று நற்குணங்களைக் காண்கின்றேன்:

1. அவன் ஏரோதியாவைக் கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்திருக்கவில்லை. 'ஏரோது அவனது சகோதரனின் மனைவியை வைத்திருப்பது தவறு' என யோவான் சுட்டிக்காட்டுகின்றார். ஒரு அரசனுக்கு யாருடைய மனைவியையும் வைத்துக்கொள்ள உரிமை இருந்ததை நாம் அறிவோம். அவன் கட்டாயப்படுத்தி ஒருத்தியை மனைவியாக்கினால் அது தவறு. ஆனால், இங்கே ஏரோதியா கட்டாயத்தின் பேரில் ஏரோதிடம் இணையவில்லை (தாவீது செய்ததுபோல!). அவளுக்கும் ஏரோதுவை பிடித்திருக்கிறது.

2. 'ஏரோது யோவானின் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்' (6:21) எனப் பதிவு செய்கிறார் மாற்கு. அதாவது, அவன் ஒரு சந்தர்ப்பக் கைதி. 'நல்லது செய்யக் கூடாது என்பதல்ல. நான் நல்லது செய்யத்தான் நினைக்கிறேன். ஆனால் அதை செய்யத்தான் முடியவில்லை' என்ற பவுலின் போராட்டத்தைத்தான், ஏரோதும் போராடுகிறான். இதுதான் நம் போராட்டமும்கூட. 'இது தவறு! இதை செய்யக்கூடாது!' எனத் தோன்றினாலும், நம்முள் இருக்கும் ஏவாளின் கைவிரல்கள், அந்தத் தவற்றைத் தழுவிக்கொள்ளவே ஆசைப்படுகின்றன.

3. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது! அவன் வாக்கு தவறுவானா? இல்லையா? என்ற கேள்வியை வாசகர் உள்ளத்தில் விதைப்பதற்கு மாற்கு அவனின் வாக்குறுதியை இரண்டுமுறை பதிவு செய்கின்றார்: அ. 'உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்!' ஆ. 'நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்!'

ஏரோதின் இந்த மூன்றாவது குணத்தை மட்டும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்ப்போம்.

யார் வாக்கு கொடுக்கிறார்? ஏரோது.

யாருக்கு? ஏரோதியாவின் மகளுக்கு ('சலோமி' என்பது வரலாறு). இவள் ஏரோதின் சகோதரன் பிலிப்பு வழியாகப் பிறந்தவள். ஆக, ஏரோதுக்கும் இவளுக்கும் நேரடியான இரத்த உறவு கிடையாது.

யார் முன்னிலையில்? விருந்தினர்கள் முன்னிலையில் (அரசவையினர், ஆயிரத்தலைவர், முதன்மைக் குடிமக்கள் - ஆக, எல்லாரும் மனிதர்கள்!)

இந்த விருந்தினர்கள் முன்னிலையில் தான் வாக்குக்கொடுத்துவிட்டோமே என்பதற்காக - அதாவது, அவர்கள் முன் தன் தலை குனிந்துவிடக்கூடாது என்பதற்காக கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறான்.

நாம் நம் படுக்கையருகில் வைக்கும் அலார்ம்கூட நாம் நமக்கு கொடுக்கும் வாக்குறுதியே. இப்படித் தொடங்கி அன்றாடம் நாம் நமக்கும், நாம் பிறருக்கும் கொடுக்கும் வாக்குறுதிகள் ஆயிரமாயிரம். மற்றொரு பக்கம், அரசியலில் ப்ராமிஸ், மதங்களில் ப்ராமிஸ், விளையாட்டில் ப்ராமிஸ் என எல்லா இடத்திலும் 'ப்ராமிஸ்' நிறைந்து கிடக்கிறது. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில்கூட 'I promise to pay the bearer the sum of rupees' என அச்சிடப்பட்டு அதன்கீழ் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பமும் இருக்கிறது.

'ஆஷ்லி மேடிசன்' வழியாக ஒருவர் மற்றவர் தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு தவறு இழைத்தது, அல்லது பிரமாணிக்கத்தை உடைத்தது, 'நல்லதா', 'கெட்டதா' என்ற கலந்தாய்வு இப்போது வேண்டாம். அல்லது அருள்நிலை வாழ்வில் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் எந்த அளவிற்கு தங்கள் வாக்குறுதிகளில் நிலைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வும் வேண்டாம்.

நமக்கு ஏரோது வைக்கும் சின்ன கேள்வி இதுதான்:

'கொஞ்ச நேரம் தன்னுடன் இருந்த சில வருடங்களில் அழிந்து போகும் மனிதர்களுக்குத் தன் குடிபோதையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சமரசத்திற்கே இடமில்லாமல் நான் முயற்சி செய்தேன் என்றால், என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் கடவுளுக்கு அல்லது கடவுள் முன் நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?'

'முயற்சி திருவினையாக்கும்!'


3 comments:

  1. இன்று தந்தை அவர்கள் மிக அழகாக தனது பதிவில் புனித திருமுழுக்கு யோவானின் தலைவெட்டபட்டதை வித்தியாசமாக பதிவு செய்துள்ளார்கள். இதை நான் முதலில் படிக்கும் போது சற்று குழப்பம் பின்பு தெளிவு .ஏனென்றால் இன்றைய விழா நாயகர் நமக்காக வாழ்ந்து காட்டிய விதத்தை பார்த்தோம் என்றால் தலையே போனாலும் தாழ்வில்லை, என் நேர்மையும், துணிவும் போகாது என்று சொல்லாமல் சொல்லி வாழ்ந்தவர். இன்று புனித திருமுழுக்கு யோவானுக்காக இறைவனைப் போற்றுவோம். பெண்களில் பிறந்தவர்களில் யோவானைவிடப் பெரியவர் எவருமில்லை என்று ஆண்டவர் இயேசுவால் பாராட்டப்பட்டவர் திருமுழுக்கு யோவான். அந்தப் பாராட்டிற்கேற்ப தன் வாழ்விலும், இறப்பிலும் அஞ்சா நெஞ்சராய் வாழ்ந்து இறைவனுக்கு சான்று பகர்ந்தார். தந்தையே நீங்களும் இவரை போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
    என்றும் உங்களுடன் இருக்கும் உங்கள் கடவுளுக்கு அல்லது கடவுள் முன் நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?' இந்த வரிகள் என்னுள் வாளாக ஊடுருவியது. இதை சற்று சிந்தித்து பார்த்தால் இந்த வாக்குறுதியை நாம் தூய்மையான உள்ளத்துடன் பிறரை அன்பு செய்வதிலும் பிறருக்கு சேவை செய்வதிலும் உண்மையை எடுத்துரைபதிலும் இறை வாக்குறுதியை காப்பாற்ற முன் வருவோம்.கண்டிப்பாக தந்தை அவர்கள் கூறியுள்ளவாறு ஒரு நாள் நாம் அனைவரும் முயன்றோம் என்றால் முயற்சி திருவினையாக்கும்! .நன்றிகள் பல, பல!
    மன்றாட்டு :
    நிறைவின் நாயகனே இறைவா, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தூய்மையோடும், நேர்மையோடும், அச்சமின்றியும் பணியாற்ற வேண்டும் என்று அழைத்தீரே, உமக்கு நன்றி. எங்களை உமது தூய ஆவியால் நிரப்பியருளும். எங்கள் அச்சத்தைப் போக்கி, நாங்கள் தூய்மையோடும், நேர்மையோடும் பணி செய்ய ஆற்றல் தாரும்.
    உம்மிடம் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து காப்பாற்ற வரம் தாரும் . உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
    HAPPY FEAST!

    ReplyDelete
  2. [01] I love the superb writing style of Fr. Y. K. The choice of easy words, transparent language which does not require a reader to run for a dictionary, of graphic concepts - he makes the truth stand before my eyes and smile enchantingly..He writes to show, not just to tell!
    [2] From Ashley Madison, a comment on Chennai, visit to the bank, conversation with his friend, Mass @the Convent for sisters, sermons, chewing the text on JB, the martyrdom of JB, Herod, Herodias, Salome, a brief psychoanalysis on the personality of Herod, a loud comment of promises at every level of our lives - what a hop, what a dance!
    A sort of Padmini's repertoire to me a Sivaji...
    [3] The unbroken thread in the entire piece is "PROMISE KEEPING".
    That is where he BEGAN...that is where he ENDS.
    [4] Herod's tortured heart, oscillating between so many commitments is a mirror of what every person inner conflict.
    [5] Our common Mother Eve's fingers... I thought, although, she might have plucked the apple, Father Adam too had equal share in the process. He who sang in ebullient love, "Behold flesh of my flesh and bone of my bone" [Does anyone call his wife, "flesh" and "bone'?] to his spouse [What a love song that is!], how come he gets so silent after that? Could he not ask Mama Eve: How come you have brought this fruit? Perhaps, the replica of total breakdown of communication in human families. Was he not concerned his wife left home for such a long to have a lengthy discourse with Mr. Satan?
    [6] Permit me to take objection to Herod welcoming Herodias into his palace. That sort of aristocracy or oligarchy [be it Herod, any other king, PM, CM, MP, MLA or religious heads in authority] in contrast to ordinary citizen is the downfall of an
    equal opportunity-equally empowered morality. In contrast to the time, he announced, "half of my kingdom" in an drunken status, I suppose he was fully alert, oriented to person, place and time, when Herodias first knocked at his gate and giggled...
    [7] The final section is astoundingly provocative charms me. What matters is not Ashley Madison, not the banks, not the Masses, not the Sermons, not theologies, not Herod, not Herodias, not Salome. None of these. The real reformation is to start from me. Am I loyal to my promise to my Lord and my neighbor, which promise totally remains grounded on Him, and nobody else?



    ReplyDelete
  3. 'நச்' சென்ற ஒரு பதிவுக்காகவும்,எதையுமே வித்தியாசமானதொரு கோணத்தில் பார்த்து ஆய்வு செய்யும் திறனுக்காகவும் தந்தையை எத்துணை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்.ஆம், " அர்ஜுன்னுக்கு வில்; அரசனுக்கு சொல்" என்ற சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன்.ஒரு மனிதனை முழு மனிதனாக்குவது அவன் வாயிலிருந்து உதிறும் சொற்களின் ஸ்திரத் தன்மை வைத்து மட்டும் தான்.ஒருவன் ஒரு வாக்குறுதியைக் கொடுக்கும் முன் எத்துணை முறை வேண்டுமானாலும்,எத்துணை மணித்துளிகள் வேண்டுமானாலும் யோசிக்கலாம்.ஆனால் கொடுத்த பிறகு அதை நிறைவேற்றுவதில் எந்தப் பின்னடைவும் கூடாது.இதை வைத்துப் பார்க்கும் போது ஏரோது கூட அவன் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய வித்த்திற்காகப் போற்றப்பட வேண்டியவனே! மகாபாரத்த்தில் துரியோதன பாஞ்சாலியின் கற்பைப் பணயம் வைத்தது போல ஏரோது அரசனும் ஒரு நல்ல மனிதனின் உயிரை ஒரு சிறு பெண்ணுக்காகப் பணயம் வைத்த வித்த்தில் தான் அவன் 'ஒரு கெட்டவன்' என்ற லேபிள் குத்தப்படுகிறான்.....அவன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய வித்த்தில் நல்லவனாகிவிடுகிறான்.நம்மைச் சுற்றி ஒரு முறை சுற்றிப் பார்த்தால் 'எங்கிருந்து வேண்டுமானாலும் நல்லது கிடைக்கலாம்...நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து."ஏரோது கூறுவதாக உள்ள அந்த இறுதி வரிகள்...".குடிபோதையில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நானே முயற்சித்தேன் என்றால் " உங்கள் கடவுளுக்கு நீங்கள் தரும் வாக்குறுதியைக் காப்பாற்ற எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?".. ...மனதைப் பிசைகின்றன.இந்நேரத்தில் என் செவிகளில் ஒலிக்கும் வரிகள் இவைதான்...திருப்பாடல் 19 ன் இறுதி வரிகள்...." ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாக இருக்கட்டும்!.

    ReplyDelete