Thursday, August 27, 2015

கண்ணீரால் கடவுளை வென்றவர்!

'விழிப்பாய் இருங்கள்!' - எப்படி? திருடன் கன்னமிட்டுத் திருடாதவண்ணம்!

'ஆயத்தமாய் இருங்கள்!' - எப்படி? தலைவன் வரும்போது பணிசெய்து கொண்டிருக்கும் பணியாள் போல!

இப்படி இரண்டு வார்த்தைகளால் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 24:42-51) அறிவுரை சொல்வதற்குப் பதிலாக, 'ஒரு அம்மாவைப் போல இருங்கள்!' என்று இயேசு எளிதாகச் சொல்லியிருக்கலாம்!

ஆம்! தன் பிள்ளைக்காக விழிப்பாய், ஆயத்தமாய் இருப்பவள் ஒரு தாய்மட்டுமே!

நம் வாழ்க்கை என்பது பிள்ளை என்றால் நாம் அனைவரும் அன்னையர்தானே!

'Manichaeism' என்ற தவறான மெய்யியல் போதனை என்னும் திருடன் தன் மகன் அகுஸ்தினாரை திருடிவிடாத வண்ணம் 'விழிப்பாய் இருந்தும்!', மனமாற்றம் என்ற வீட்டுத்தலைவன் தன் மகனின் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என 'ஆயத்தமாய் இருந்தும்!' மாதிரி காட்டியவர்தான் நாளை நம் கொண்டாடும் மோனிக்கம்மாவின் வாழ்க்கைப்பாடம்.

இந்த இரண்டு மதிப்பீடுகளில் மோனிக்கா நமக்கும் அம்மாவே!

மோனிக்கா என்றாலே 'கண்ணீரால் கடவுளை வென்றவர்!' என்று நாம் சொல்ல முடியும்.

'தென்னையை வைத்தா இளநீரு! பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு!' என்ற சொலவடை மோனிக்கம்மாளின் வாழ்வில் 'கல்யாணம் முடிச்சால் கண்ணீரு!' என்றும் கசந்து போனதுதான் மிகப்பெரிய சோகம்.

தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தன் கணவன் இளவயதில் இறந்துவிட, தன் மகன் அகுஸ்தினார் 17 வயதில் தப்பறைக் கொள்கை ஒன்றில் மூழ்கி அதில் திளைத்துக் கிடக்க, அவன் மனமாறி கத்தோலிக்க நம்பிக்கையை தழுவமாட்டானா என்று அவனின் 31 வயது வரை கண்ணீர் வடிக்கின்றார் மோனிக்கா.

'உன் மகன் என்றும் உன்னோடு!' 'உன் கண்ணீரின் மகன் அழிந்து போகமாட்டான்!' - இந்த இரண்டும் மோனிக்கம்மாளுக்கு ஒரு தலத்திருஅவை ஆயர் வழியாக இறைவன் சொன்ன வார்த்தைகள்.

கார்த்தேஜிலிருந்து, ரோம், ரோமிலிருந்து மிலான் என தப்பி ஓடிய அகுஸ்தினாரை அவருக்கே தெரியாமல் பின்தொடர்கின்றார் மோனிக்கா.

இறுதியில் வென்றுவிடுகின்றார்! அகுஸ்தினார் தூய அம்புரோசியாரின் திருமுன் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்று திருமுழுக்கு பெறுகின்றார்.

மோனிக்கா மரணப்படுக்கையில் தன்னை நோக்கிப் பேசிய மூன்று வார்த்தைகளை தன் 'உள்ளக்கிடக்கைகளில்' (Confessions) இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார் அகுஸ்தினார்:

1. 'நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றும், நான் இன்னும் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் விரும்பியதெல்லாம் உன்னை ஒருநாள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாகவும், வான்வீட்டின் மகனாகவும் பார்ப்பதுதான். ஆனால் நான் கேட்டதற்கும் மேலாக கடவுள் எனக்குக் கொடுத்துவிட்டார். ஆம்! வாழ்வின் சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நீ எல்லாவற்றையும் விலக்கி உன்னையே அவரின் பணிக்கு ஒப்படைத்துவிட்டாயே! எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?'

2. 'நான் எங்கு புதைக்கப்பட்டால் என்ன, கடவுளின் கைக்கு எதுவும் தூரமா என்ன? அவர் என்னை எழுப்பி என்னைத் தன் கரங்களால் அணைத்துக்கொள்வார்!'

3. 'என் கண்ணீரின் மகனே!'

இன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.

நாளைய முதல்வாசகத்தில் (காண். 1 தெசலோனிக்கர் 3:7-13) தூய பவுலடியார் 'அல்லும் பகலும் ஆர்வமுடன் சிந்தும் மன்றாட்டு' என்னும் கண்ணீரும் அவரின் திருச்சபை என்ற குழந்தையைக் கடவுளை நோக்கித் திருப்புகிறது.

நம் வீட்டின் தலையணைகளுக்கு மட்டும்தான் தெரியும் நம் தாயின் கண்ணீர்!

இந்தத் தாய் ஒரு உன்னதமான பிறவி!

அதிக மகிழ்ச்சி என்றாலும் அழுதுவிடுவாள்! அதிக துக்கம் என்றாலும் அழுதுவிடுவாள்!

இவளே கண்ணீரை நிறுத்தினாலன்றி இவளின் கண்ணீருக்கு யாரும் மடை கட்ட முடியாது!

கண்ணீரால் கண்கள் கலங்கினாலும் இவளின் கண்கள் 'விழிப்பாகவும்', 'ஆயத்தமாகவும்' இருக்கும் எப்போதும்!

2 comments:

  1. புனித மோனிக்கா...பல காரணங்களுக்காக என்னை மிகவும் பாதித்த,என் மனம் கவர்ந்த ஒரு புனிதை.ஒரு தாயின் கண்ணீர் எத்துணை வலிமை மிக்கது என உலகத்துக்கு உரக்கச் சொன்னவர்.தன் கண்ணீரால் கடவுளை மட்டுமின்றி கல்லான இதயம் படைத்த தன் மகனையும் கரைத்தவர். தன் கண்ணீரின் முன் பாதியைத் தன் மகனின் மனமாற்றத்திற்காகவும்,பின் பகுதியை அவரை மனம் மாற்றிய இறைவனின் கருணைக்கு நன்றியாகவும் அர்ப்பணித்தவர்." நான் எங்கு புதைக்கப்பட்டால் என்ன, கடவுளின் கைகளுக்கு எதுவும் தூரமா என்ன? அவர் என்னை எழுப்பித் தன் கரங்களால் என்னைத்தாங்கிக் கொள்வார்.".... இந்த வார்ததைகள் போதாதா இறைவன் மேல் இவருக்கிருந்த விசுவாசத்திற்குக் கட்டியம் கூற? துன்பங்களினால் துவண்டு போகும் தாய்மார்கள் இவரை நினைத்தாலே போதும்...அவர்களின் கண்களின் ஓரம் உள்ள கண்ணீரத் திவலைகள் காய்ந்து விடும்.இத்துணை மேன்மை மிக்க ஒரு புனிதையைத் தாய்மார்களின் 'பாதுகாவலியாக' ஆக்குவதில் என்ன தயக்கம்? பரிசீலனை செய்வீர்களா தந்தையே! பரிந்துரை செய்வீர்களா? நன்றிகள்!!!

    ReplyDelete
  2. நமது கடமையில் நாம் தவறுகிறபோது, மற்றவர்களால் நாம் புறக்கணிக்கப்படுகிறோம். மற்றவர்கள் நம்மை அருவருப்பாகப் பார்க்கிறார்கள். நம்மைப்பார்த்து சிரிக்கிறார்கள். நம்மை ஏளனத்தோடும் இகழ்ச்சியோடும் நோக்குகிறார்கள். அதே கடமையை நாம் முழு ஈடுபாட்டுடன் செய்கிறபோது, நாம் பாராட்டப்படுகிறோம். அதற்கான முழு வெகுமதியையும் பெற்றுக்கொள்கிறோம். வெகுமதிக்காக இல்லையென்றாலும், நமது கடமையின் பொருட்டாவது நாம் நமது பணியை முழுமையோடு செய்ய வேண்டும்.எப்படியோ இருந்த அகஸ்தினராய் நல் வாழ்விற்காக தன கண்ணீரை கடவுளிடம் காணிக்கை ஆக்கியது இதற்காகவே.இன்று உலகம் போற்றும் அளவிற்கு அவர் வாழ்ந்தார்.நாமும் அவரை போல் வாழ்வோம்.
    வாழ்வை ஏனோ தானோவென்று வாழ்கிறவர்கள் நம்மில் அதிகமாகிவிட்டார்கள். வாழ்வின் உண்மையான பயனை அவர்கள் பொருட்படுத்துவதும் கிடையாது. வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ நாம் முயற்சி எடுப்போம், எல்லாச்சூழ்நிலைகளிலும் வாழ்வை மகத்துவத்தை, மகிமையை உணர்ந்து வாழ்வோம்.இதையே இன்று தாய் மோனிக்க வழியாக தந்தை ஏசு அவர்கள் நமக்கு உணர்த்துவது. ஆக இப்படி ஒரு மகனை திருச்சபைக்கு தந்ததற்காக!இன்று நம் ஒவோரோவரின் தாய்க்காக நாம் ஜெபிக்க கடன்பட்டுள்ளோம்.குறிப்பாக தந்தையின் தாய்க்காக ஜெபிப்போம். நன்றிகள் ! Todays reflection takes me to very deep.

    ReplyDelete