Thursday, March 31, 2022

குழப்பமும் தெளிவும்

நாளின் (1 ஏப்ரல் 2022) நற்சொல்

குழப்பமும் தெளிவும்

இயேசுவின் சோதனைகள் பற்றி நாம் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். பாலைநிலத்தில் இயேசுவுக்கு எதிர்கொண்ட மூன்று சோதனைகளை இந்நற்செய்தியாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். இயேசு தன் வாழ்நாள் முழுவதும் சோதனைகளை எதிர்கொண்டார். குறிப்பாக, அவரோடு உடனிருந்தவர்களே அவரை அதிகம் சோதித்தனர். அந்த வகையில், இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், 'நீர் இவ்விடத்தை (கலிலேயாவை) விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காண முடியும். ஏனெனில், பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே!' என்கின்றனர் (காண். யோவா 7:3-4). 

'உம்மை வெளிப்படுத்தும். நாங்கள் நம்புகிறோம்' என்று அவர்கள் இயேசுவைச் சோதிக்கின்றனர். 'நான்தான் மெசியா' என்று இயேசு தன்னை வெளிப்படுத்தியிருந்தால் யாரும் அவரை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். கேலி பேசிவிட்டு நகர்ந்திருப்பார்கள். 

ஒரு பெரிய புதையலைத் தன்னோடு வைத்திருப்பவர் மற்றவர்களிடம், 'என்னிடம் புதையல் இருக்கிறது' என்று சொன்னால் யாரும் அவரை நம்ப மாட்டார்கள். இல்லையா?

இயேசு மறைவாக யூதேயாவுக்கு (எருசலேம்) வருவதையும் அவரை எதிர்கொள்கின்ற மக்கள் அடைகின்ற குழப்பத்தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 7) வாசிக்கின்றோம். 

'இவரை மெசியா என தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ!' எனக் குழம்பி நிற்கும் மக்கள், இயேசு எங்கிருந்து வருகிறார் என்று தங்களுக்குத் தெரியுமே என்று சொல்லி அதைக் குறித்து இடறல்படுகின்றனர். 

நேர்மையாளரின் இருத்தல் பொல்லாருக்கு இடறலாக இருக்கிறது என்கிறார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர் (2:1,12-22). 

இயேசுவை நான் ஏற்றுக்கொள்வதற்கு இடறலாக இருப்பது எது?

இயேசுவைப் பற்றிய என் குழப்பங்கள் என் தனிப்பட்ட அனுபவம் வழியாகவே தீரும் எனில், அவர் அனுபவம் பெற நான் செய்யும் முயற்சிகள் எவை?


3 comments:

  1. இயேசு தான் யாரென்றும்,எங்கிருந்து வந்தவர் என்றும் வெளிப்படையாக சீடர்களிடம் பகிர்ந்து கொள்ளாதது குறித்து அவர்கள் இடறல்படுகின்றனர். இவர் மெசியாதானா? அது தலைவர்களுக்குத் தெரியுமா? போன்ற கேள்விகளாலும், இவரது பிறப்பிடம் தெரிந்திருந்ததாலும், இன்னும் இவர் குறித்த பல கற்பனை விஷயங்களாலும் அவர்களது மூளை ஒரு நண்டு நுழைந்த பாத்திரம் போல் செயல்பட ஆரம்பித்தது. “நேர்மையாளரின் இருத்தல் பொல்லாருக்கு இடைஞ்சல்” என்பது ஊரறிந்த விஷயம்தானே! இதற்கு இயேசுவோடிருந்தவர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?
    இன்று இயேசுவை மட்டுமே நம்பும் நமக்கும் கூட,அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள பல தடைகள்…. பல சஞ்சலங்கள்.நம் வாழ்வின் வளமையான நேரங்களில் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை நம்புவது எளிது.ஆனால் வாழ்வில் கருமேகங்கள் சூழ்ந்த நேரங்களில்….நம்மை நமக்கு வேண்டியவர்களே புரிந்து கொள்ளாதபோது…தள்ளிவைக்கும்போது… நம் செய்கைகள் சரிதானா என்ற குழப்ப ரேகைகள் நம்மை அலைக்கழிக்கும் போது அவரின் உடனிருப்பு கேள்விக்குறியாகிறது.கவலை வேண்டாம்! இம்மாதிரி அலைக்கழிப்புக்கள் தாம் …நம் அனுபவங்கள் தாம் அவரை நம்மில் உறையவைக்கும்; நமக்கு ஊக்கம் தரும் என்று நம்புவோம். எந்த ஒரு விஷயமும்…. அது எதிர்மறையானதாயிருப்பினும் கூட, அது “அவர் அனுபவத்தை” வலுப்படுத்தி,நம் வாழ்வை வளமாக்கவே” என்ற நம்பிக்கையின் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Anonymous4/27/2022

    ஆமென்!

    ReplyDelete
  3. Anonymous4/27/2022

    இறைவன் வாழ்த்தப்பெறுவாராக!

    ReplyDelete