Wednesday, March 16, 2022

கண்டுகொள்ளாமை

நாளின் (17 மார்ச் 2022) நற்சொல்

கண்டுகொள்ளாமை

'என்னை அன்பு செய். அல்லது என்னை வெறுத்து ஒதுக்கு. இரண்டையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், என்னைக் கண்டுகொள்ளாமல் இராதே! அன்பு செய்யும்போதும் வெறுக்கும்போதும் என்னை உனக்குச் சமமாக நடத்துகிறாய். ஆனால், கண்டுகொள்ளாமல் இருக்கும்போது என் இருத்தலை நீ ஒரு பொருட்டாகவே கருதுவது கிடையாது!'

கண்டுகொள்ளாமை ஒரு கொடிய உணர்வாக நம்மைக் காயப்படுத்துகிறது மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ளாதபோது. ஆனால், நாம் மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது நமக்கு நாமே காரணங்களை வரையறுத்துக்கொள்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 16:19-31) பரிசேயர்களை நோக்கி ஓர் எடுத்துக்காட்டைச் சொல்கின்றார் இயேசு. 'செல்வர் மற்றும் ஏழை இலாசர்' எடுத்துக்காட்டில், முந்தைய நிலை தலைகீழாக மாறுகிறது. 

செல்வர் செய்த தவறு என்ன?

அவர் தீய வழியில் பணம் சேர்க்கவில்லை.

ஏழை இலாசருக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை.

தன் பணத்தை தன் நண்பர்களுக்குச் செலவழித்தார்.

அவர் செய்த தவறு ஒன்றே ஒன்றுதான்: ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை.

கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணங்கள் மூன்று:

(அ) அவருடைய செல்வம் கண்ணாடியில் உள்ள வெள்ளிப் பூச்சுபோல அவரைத் தவிர வேறு எதையும் அவருக்குக் காட்டவில்லை.

(ஆ) நாளை பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்டார்.

(இ) இலாசர் என்னும் நபர் தன் வாழ்வில் இல்லை என நினைத்துக்கொண்டார்.

வாழ்க்கை தலைகீழாக மாறும்போது, ஆபிரகாமிடம் அவர் முறையிடுகின்ற போது, செல்வருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

முதல் வாசகத்தில் (எரே 17:5-10), மனிதரில் நம்பிக்கை வைப்போர் மற்றும் ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்னும் இரு குழுவினரைப் பற்றி இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. 

'இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது. அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்?' எனக் கலங்குகின்றார் எரேமியா.



1 comment:

  1. “கண்டுகொள்ளாமை”… இதன் வலியை ஏதோ ஒரு காலகட்டத்தில்…ஏன் அடிக்கடிக்கூட உணர்ந்திருப்போம்.அதுவும் நாம் நேசிப்பவர்களே நம்மைக்கண்டுகொள்ளாதபோது, வலி இன்னொரு மரணமே. அதைத்தான் அனுபவிக்கிறார் செல்வந்தர். எத்தனையோ நல்ல பண்புகள் அவரிடம் இருந்திருந்தும் “இலாசரைக் கண்டு கொள்ளாமல் போனது” அவரை ஒன்றுமில்லாதவராக்கி விட்டது. அதற்கு அவர்கொடுக்கும் விலை தான் இந்த சுட்டெரிக்கும் நரக நெருப்பு.
    “என்னை அன்பு செய்; இல்லை வெறுத்து ஒதுக்கு.ஆனால் கண்டுகொள்ளாமல் போகாதே!” இதைத்தான் விவிலியமும் “ஒன்று சூடாக இரு; இல்லை குளிராக இரு; ஆனால் வெது வெதுப்பு வேண்டாம்” என்கிறது.
    வஞ்சகமிக்க இதயத்தை நம்மால் நலமாக்க முடியாவிட்டாலும்…. நம் கண்களில் படும் அனைவரையும் கண்டுகொள்வோம்; அவர்களின் கலக்கம் துடைப்போம்
    பலரது கடந்தகால அனுபவங்களை மனத்தில் எங்கோ எட்டிப்பார்க்கச் செய்திருக்கும் ஒரு பதிவு! தந்தைககு நன்றிகள்!!!

    ReplyDelete