Friday, March 11, 2022

நிறைவுள்ளவராய்

நாளின் (12 மார்ச் 2022) நற்சொல்

நிறைவுள்ளவராய்

மலைப்பொழிவின் சுருக்கமாக இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் அறிவுரை நிறைவுள்ளவர் ஆதல் (காண். மத் 5:43-48). 'விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள்' என அறிவுறுத்துகிறார் இயேசு. உங்கள் செயல்களைப் பொருத்து உங்கள் இலக்குகளை இறக்கிக் கொள்வதற்குப் பதிலாக, இலக்கை உயர்;த்திக் கொண்டு உங்கள் செயல்களையும் உயர்த்துங்கள் என்பது இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.

பகைவரிடமும் அன்பு கூர்வதும், துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல் செய்வதும் விண்ணகத் தந்தையின் மக்களாக சீடர்களை மாற்றுகிறது. 

மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து கதிரவனும் மழையும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. எல்லார் மேலும் அடிக்கும் வெயிலாக, எல்லார்க்கும் பெய்யும் மழையாகக் கடவுள் நம் மேல் கடந்து செல்கின்றார்.

அப்படி இருக்க, நம் அன்பு மட்டும் ஏன் மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து அமைய வேண்டும்?

பாகுபாடு காட்டாத, பகுத்துப் பார்க்காத, தீர்ப்பிடாத அன்பு இருந்தால் எத்துணை நலம்.

'நிறைவு' என்னும் பதத்தை 'தூய்மை' என மொழிகிறார் மோசே (காண். முதல் வாசகம், இச 26:16-19). ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள் அவரால் உயர்த்தப்படுவர் என்பது மோசேயின் ஆறுதல் மொழியாக இருக்கிறது. 


1 comment:

  1. “நிறைவு”… நாம் காணும் அனைத்திலும் நிறைவு; நாம் செய்வதனைத்திலும் நிறைவு. நாம் தேர்ந்தெடுக்கும் இலக்கு சரியாக இருப்பின் செய்யும் செயல்களும் உயர்ந்தவைகளாகவே இருக்குமெனச் சொல்கின்றன இன்றைய வாசகங்கள். நல்லோர் மேலும் தீயோர் மேலும் சமமாக வெயிலை வீசும் கதிரவன் போல்….குளுமையைத் தரும் வருணபகவான் போல் இல்லாமல், நல்லவரா- கெட்டவரா?, குட்டையா- நெட்டையா?, கருப்பா- சிவப்பா?, செல்வந்தனா- ஏழையா? போன்ற மறைந்துபோகும் விஷயங்களை மட்டுமே ஏன் மனிதன் சகமனிதனுக்குக் காட்டும் அன்பின் அலகாக வைக்க வேண்டும்?
    பாகுபாடு காட்டாத,பகுத்துப்பார்க்காத, தீர்ப்பிடாத அன்பிற்குச் சொந்தக்காரராக இருந்து, அவருடைய கட்டளைகளையும் கருத்தாய் அனுசரிப்பவருக்கு “ ஆண்டவரின் தூய இனமாக” மாறும் வரத்தையும் அவர் தருவார் எனும் மோசேயின் ஆறுதல் மொழிகள் நம் வாழ்வின் இலக்குகளையும் மேல் நோக்கி அழைத்துச் செல்லட்டும். “இலக்குகள் சரியெனில் அனைத்தும் சரியே!” என்னுமொரு பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete