Saturday, March 19, 2022

இல்லம் திரும்ப

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

விடுதலைப் பயணம் 3:1-8அ,13-15 1 கொரிந்தியர் 10:1-6,10-12 லூக்கா 13:1-9

பாலைநிலத்திலிருந்து இல்லம் திரும்ப

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற 'ஆன்மிகப் பயிற்சிகள்' நூலில், 'தெரிதலும் தெரிவுசெய்தலும்' பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: 'ஆறுதல்,' 'வெறுமை.' நம் வாழ்வின் நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலச் செல்லும்போது, அல்லது நமக்கு நடக்கும் எல்லாம் நேர்முகமாகவே நடக்கும்போது, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் நாம் வெற்றி பெறுகிறபோது, நம் உறவுநிலைகள் நமக்கு அமைதி தருவனவாக இருக்கும்போது, நம் உடல்நலம் நன்றாக இருக்கும்போது போன்ற சூழல்களில் நாம் 'ஆறுதல்' கொள்கிறோம். ஆனால், 'ஆறுதல்' மட்டுமே நம் வாழ்வியல் அனுபவமாக இருப்பதில்லை. சில நிகழ்வுகள் நம் எதிர்பார்ப்பிற்கு முரணாக நடந்தேறும். நமக்கு நடக்கும் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும். நம் முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தரும். நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி தராது. நம் உறவுநிலைகளில் அமைதி குலையும். நம் உடல்நலம் குன்றும். இச்சூழல்களில் நாம் அடையும் உணர்வின் பெயர் 'வெறுமை.'

நம் உடல் பசியால், தாகத்தால் வாடுவதுபோல, நம் மூளை புதிய சிந்தனை இல்லாமல் வறண்டு போவதுபோல, நம் இதயம் புதிய உறவுகளைத் தேடுவதுபோல, நம் உள்ளம் அல்லது ஆன்மாவும் வெறுமையை அனுபவிக்கிறது. ஆன்மாவின் ஊற்று சுரப்பது நிற்கும்போது, ஆன்மா என்னும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

தவக்காலத்தின் முதல் வாரத்தில் இயேசுவோடு புறப்பாலைவனத்தில் இருந்து, அவரோடு இணைந்து நம் நம்பிக்கையை அறிக்கையிட்டோம். கடந்த வாரம் அவரோடு உருமாற்ற மலையில் இருந்து நம் வாழ்வின் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டோம். இன்று, நம் ஆன்மிகப் பாலைநிலத்திலிருந்து திரும்புவோம்.

இன்றைய முதல் வாசகம் (காண். விப 3:1-8,13-15) மோசேயின் அழைப்பு நிகழ்வை நமக்குப் படம்பிடித்துக்காட்டுகிறது. 'மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்துவந்தார்' என்ற தொடக்க வசனமே மோசேயின் பாலை அனுபவத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. எகிப்தின் வளம் மிக்க நைல் நதியிலிருந்து 'வெளியே எடுக்கப்பட்டு,' 'எபிரேயத் தாயே தாதியாகப் பாலூட்ட,' 'பாரவோனின் மகளின் அரவணைப்பில்' வாழ்ந்த மோசே, இப்போது, தனக்குச் சொந்தமில்லாத இடத்தில், தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை, தனக்குச் சொந்தமில்லாத நிலத்தில் மேய்த்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக தனக்குத்தானே அந்நியராக நிற்கின்றார் மோசே. இந்த நேரத்தில்தான், முள்புதர் ஒன்று எரிந்துகொண்டிருப்பதையும் அது தீய்ந்துபோகாமல் இருப்பதையும் காண்கின்றார். 'இந்த மாபெரும் காட்சியைக் காண்பதற்காக நான் அப்பக்கமாகத் திரும்புவேன்' என்று மோசே முள்புதர் நோக்கித் திரும்புகின்றார். அவர் அணுகி வருவதைக் கண்டு, 'இந்த இடம் தூய்மையானது. இங்கே அணுகி வராதே. உன் மிதியடிகளை அகற்று' என எச்சரிக்கிறார் கடவுள். கடவுள் தன்னையே, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று மோசேயின் மூதாதையரின் கடவுளாகத் தன்னை முன்வைக்கின்றார். எகிப்தில் தன் மக்கள் படும் துன்பங்களைக் கண்டு தான் இறங்கி வந்திருப்பதாகச் சொல்கின்றார் கடவுள். 

'அவர் பெயர் என்ன?' என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? என முதல் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே. மோசே தன் கடவுள் பற்றியும், தன் மூதாதையர் பற்றியும் அறியாமல் இருக்கிறார். அல்லது அவருடைய இந்த இக்கட்டான நிலையில் கடவுள் தன்னிடம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். 'இருக்கின்றவாக இருக்கின்றவர் நானே' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் கடவுள். 'யிஹ்யே' என்ற இந்த எபிரேயச் சொல்லை, 'இருக்கின்றவராக இருக்கின்றவர்,' 'இருக்கின்றவற்றை இருக்கச் செய்கிறவர்' போன்று பல பொருள்களில் மொழிபெயர்க்கலாம். கடவுளின் பெயர் ஒன்றை மட்டும் நமக்குச் சொல்கிறது. 'இல்லாததை இருக்கச் செய்பவரும்,' 'இருப்பதை இருக்கச் செய்கிறவரும்' இறைவனே. மோசேயின் வெறுமையை நிரப்புகிறவரும், மக்களின் துன்பங்கள் துடைக்கிறவரும் இறைவனே. ஆக, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அடிமைத்தனம் என்னும் பாலைநிலைத்திலிருந்து அவர்களை விடுவிக்க மோசே என்னும் வெறுமையின் பாலைநிலத்தைத் தேர்ந்துகொள்கிறார் கடவுள். எப்படி எரிகின்ற முள்புதர் தீய்ந்துபோகவில்லையோ, அப்படியே கடவுளின் இருத்தல் இஸ்ரயேல் மக்களுக்கு தீர்ந்துபோகவில்லை. இந்த அனுபவத்தையே இன்றைய திருப்பாடலில் (காண். 103) ஆசிரியர், 'ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்' என்று புகழ்கின்றார்.

ஆக, 'ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசே' பாலைநிலத்திலிருந்து எகிப்திற்குத் திரும்புமாறு கடவுளால் அழைக்கப்படுகின்றார். இப்படித் திரும்பும் அவர் தன் கடவுளைக் கண்டுகொள்கின்றார். கடவுளைக் கண்டுகொண்ட அவர் கடவுள் அவருக்குத் தந்த பணியைச் செய்யப் புறப்படுகின்றார். 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:1-6, 10-12), சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணலாமா, வேண்டாமா என்பது பற்றிய அறிவுரையை கொரிந்து நகரத் திருச்சபைக்கு வழங்குகின்றார் பவுலடியார். கொரிந்து நகரத் திருச்சபை ஓர் அறிவுசார் திருச்சபை. எனவே, ஒரு சாரார், 'வேறு எந்தக் கடவுளும் இல்லை' (காண். 1 கொரி 8:4-6) என்ற புரிதலில், எல்லா உணவையும் - அது எந்த ஆலயத்தில் படைக்கப்பட்டாலும் - உண்ணலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மற்றொரு குழுவினர், இச்செயலைச் சிலைவழிபாடு என்று கருதி, மற்றவர்களின் இச்செயல்பாடு குறித்து இடறல்பட்டனர். இது நம்பிக்கையாளர்கள் நடுவே குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டாக்கியது. சிலைகள் கடவுளர்கள் அல்ல என்பதால் அவற்றுக்குப் படைக்கப்பட்ட யாவற்றையும் உண்ணலாம் என்று சொல்கின்ற பவுலடியார், அதே வேளையில், மற்ற நம்பிக்கையாளர்கள் இதைக் குறித்து இடறல் பட்டாலோ அல்லது இச்செயல் பிரிவினையை உண்டாக்கினாலோ, இச்செயல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:7-12, 10:23-30).

இந்தப் பின்புலத்தில், தனது அறிவுரைக்கு வலுசேர்க்கும் வண்ணம், முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்தாளுகின்றார் பவுல். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் கடவுள் ஆற்றிய அரும் பெரும் செயல்களை அறிந்திருந்தாலும், மேகத்தின்கீழ் வழிநடத்தப்பட்டு, கடலைக் கால் நனையாமல் கடந்து, ஒரே ஆன்மிக உணவை உண்டு, ஒரே பாறையின் தண்ணீரைக் குடித்தாலும் அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டும் பவுலடியார், 'இவை யாவும் நமக்கு முன்னடையாளமாய்த் திகழ்ந்தன' என்கிறார். மேலும், கொரிந்து நகர மக்களும் 'ஒரே திருமுழுக்கு பெற்றாலும்,' 'ஒரே ஆன்மிக உணவை' (நற்கருணை) உண்டாலும், சிலைவழிபாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இஸ்ரயேல் மக்களைப் போல கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர். 

ஆக, நம்பிக்கை கொண்ட கொரிந்து நகர மக்கள், சிலைவழிபாடு என்னும் தங்களின் பழைய பாலைநிலத்திலிருந்து, 'தண்ணீர் தரும் ஒரே பாறையாகிய கிறிஸ்துவை' நோக்கித் திரும்ப அவர்களை அழைக்கின்றார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். லூக் 13:1-9) முதல் பகுதி இரண்டு கொடூரமான நிகழ்வுகளோடு தொடங்குகிறது: ஒன்று, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இரண்டு, சீலோவாமிலே கோபுரம் விழுந்து  அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பதினெட்டுப் பேர் இறக்கின்றனர். இப்படி இறந்தவர்கள் எல்லாருமே எதிர்பாராத விதத்தில், இறப்புக்கான எந்தவித முன்தயாரிப்புமின்றி இறக்கின்றனர். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதி, கனி தராத அத்திமரம் ஒன்று தன் தலைவரால் தான் எதிர்கொள்ளவிருக்கின்ற அழிவைப் பதிவு செய்கிறது. இந்நிகழ்வில் இயேசுவின் உருவகமாக வரும் தோட்டக்காரர், தலைவரிடம் அத்திமரத்திற்காக பரிந்து பேசி, கடைசி வாய்ப்பு ஒன்றைக் கெஞ்சிக் கேட்கின்றார். 

மேற்காணும் இரண்டு நிகழ்வுகள் வழியாகவும், காய்க்காத அத்திமரம் உருவகம் வழியாகவும் இயேசு தன் சமகாலத்தவரைத் தங்களின் 'பாலைநிலத்திலிருந்து உடனடியாக திரும்ப' அழைப்பு விடுக்கின்றார். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் இறந்தவர்களைப் பாவிகள் என்று அடையாளப்படுத்தும் போக்கை விடுத்து, தாங்கள் அந்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறப்பு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் உடனடியாக மனம் மாறவும், அந்த மாற்றத்திற்கு உறுதுணையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும். 

ஆக, கனிதராத வாழ்வு என்ற பாலைநிலத்திலிருந்து கனிதருதல் என்ற நிலைக்குத் திரும்ப தம் சமகாலத்தவரை அழைக்கிறார் இயேசு.

நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார், உறவுசார், ஆன்மிகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம் பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மிகம்சார் பாலை. முதல் மூன்றுநிலைப் பாலை அனுபவங்களை நாம் மிக எளிதாக வெற்றிகொள்ள முடியும். ஆனால், நான்காம் பாலை - ஆன்மிகம்சார் பாலைநிலைத்தை - வெற்றிகொள்வது அவ்வளவு எளிதல்ல. மோசேக்கு கடவுளின் பெயர் தேவைப்பட்டது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலின் நினைவூட்டல் தேவைப்பட்டது. இயேசுவின் சமகாலத்தவருக்கு எச்சரிக்கையும் வேகமும் தேவைப்பட்டது.

இன்று நாம் உணரும் ஆன்மிகம்சார் பாலைநில அனுபவம் என்ன? அதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவது? அல்லது பசுமை நோக்கித் திரும்புவது? இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு மூன்று வழிகளைக் கற்பிக்கிறது:

1. இறைவனை அறிதல் வேண்டும்

மோசே இறைவனால் அழைக்கப்படுவதற்கும் அனுப்பப்படுவதற்கும் முன் இறைவனை அவர் அறிந்துகொள்கின்றார். இறைவனின் அழைப்பும் அனுப்பப்படுதலும் மோசேக்கு அவர் எதிர்பாராத இடத்தில், அவர் எதிர்பாராத நேரத்தில், அவர் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்தபோது அருளப்படுகின்றது. இறைவனின் அழைப்பை மோசே இரண்டு நிலைகளில் கண்டுகொள்கின்றார்: ஒன்று, தன் ஆடுகளின் பக்கம் இருந்த தன் முகத்தை எரியும் முள்புதர் பக்கம் திருப்புகின்றார். இரண்டு, இறைவனின் பெயரை அறிந்துகொள்கின்றார். ஆடுகளிலிருந்து கண்களைப் முள்புதர் பக்கம் திரும்புவது எளிதன்று. ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற வேண்டும். மலை என்னும் பாதுகாப்பின்மையை நோக்கிச் செல்ல வேண்டும். தன் மிதியடிகளைக் கழற்ற வேண்டும். சில நேரங்களில் நம் மனம் பாலை அனுபவத்தில் இருக்கும்போது, விரக்தியை அனுபவிக்கும்போது, நாம் நம் ஆடுகளை விட்டுவிடத் தயாராக இருப்பதில்லை. நம் பாதுகாப்பின்மையை அல்லது வலுவின்மையை ஏற்றுக்கொள்ளத் தயராhக இருப்பதில்லை. அந்நேரங்களில், 'இது என்ன? வித்தியாசமாக இருக்கிறதே! எனக்குள் வெறுமையும் இருக்கிறது. அதே வேளையில் நான் உயிரோடும் இருக்கின்றேனே!' என்று நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட்டுக் கொண்டால் அங்கே இறைவனை அறிதல் சாத்தியமாகும். அங்கே, ஒன்றும் 'இல்லாமையில்,' 'இருக்கின்ற இறைவன்' எல்லாவற்றையும் இருக்கச் செய்வார். இழந்ததையும் திரும்ப அளிப்பார். நாம் விட்டுவிட்டு ஓடிவந்த எகிப்திற்கே நம்மை புதிய பணிக்காக அனுப்புவார்.

2. அதீத நம்பிக்கை அகற்ற வேண்டும்

பிரபலமான டைட்டானிக் கப்பல் தன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை எடுத்துக்கொள்ளவில்லை. 'இறைவன் தங்களோடு இருக்கிறார்' என்ற அதீத நம்பிக்கையே, இஸ்ரயேல் மக்களை, 'நாங்கள் என்ன செய்தாலும் ஆண்டவர் அன்பு செலுத்துவார்' என்று நினைக்கத் தூண்டியது. ஆகையால்தான், அவர்கள் சிலைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினர். 'சிலைவழிபாட்டு உணவை விட வேண்டும்' என்ற எச்சரிக்கையையும் கொரிந்து நகர மக்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. ஆக, ஆன்மிகப் பாலை அனுபவம் சில நேரங்களில் நம் அதீத நம்பிக்கையாலும், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துவதாலும் வரலாம். 

3. செயல் மாற்றம் வாழ்வு மாற்றம்

சில நேரங்களில் நாம் பயம் அல்லது விரக்தி உணர்வுகளால் அல்லது எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும்போது என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் இரண்டு விடயங்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்: (அ) இதுவரை செய்யாத ஒன்றைச் செய்வது - அத்திமரத்தை தலைவர் வெட்டப்போகிறார் என்று முடிவெடுத்தவுடன் தோட்டக்காரர் உடனடியாக மரத்திற்கு உரம் போட ஆரம்பிக்கிறார். இதுவரை செய்யாத ஒன்றை இவர் செய்ய ஆரம்பிக்கிறார். (ஆ) செயலை மாற்றுவதன் வழியாக உணர்வை மாற்றுவது - இது முந்தைய விடயத்தின் நீட்சியே. 

இவ்வாறாக, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நம் ஆன்மிகப் பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே வர அழைக்கிறது. ஆறுதலும், வெறுமையும் மாறி மாறி வரும் வாழ்வியல் அலைகள். வெறுமையில் கொஞ்சம் அண்ணாந்து பார்த்தால், அங்கே 'இருக்கின்ற அவர் இருக்கின்றவராக இருப்பார்' - இன்றும் என்றும்!


1 comment:

  1. தவக்காலம் 3ம் ஞாயிறுக்கான மறையுரை!நம் அன்றாட வாழ்வில் நம்மைச்சுற்றி நடக்கும்….நம்மைத்தாக்கும் நேர்மறை- எதிர்மறை விஷயங்கள் ஆறுதலையும்,வெறுமையையும் மாறி மாறித்தருவது ஒருபுறமிருக்க…நம் உடலும்,இதயமும் ஏன் நம் ஆன்மாவும் கூட வெறுமையை உணருகின்றன. ஆன்மா எனும் கிணறு வற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை நமக்கு எடுத்துச் சொல்லும் இன்றைய வாசகங்கள், இன்று நம்மை நம் பாலைநிலத்தினின்று வெளிக்கொணர்கின்றன.
    வளம் மிக்க நைல் ந்தியிலிருந்து தனக்குச் சொந்தமில்லாத ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு…இன்னொரு சொந்தமில்லாத ஒருவரால் வளர்க்ப்பட்ட்டு…. தனக்குச் சொந்தமில்லாத ஆடுகளை மேய்த்துக் கொண்டு,தனக்குத்தானே அந்நியராக நின்ற மோசேக்கு எரியும் முட்புதர் நடுவே தோன்றும் கடவுள் தன்னை “:இருக்கின்றவராக இருக்கிறவர் நானே” என வெளிப்படுத்தும் முதல் வாசகம்….

    சிலை வழிபாடு மற்றும் சிலைகளுக்குப் படைத்ததை உண்ணலாமா வேண்டாமா என்ற சந்தேகங்களுக்குத் பவுல் தன் பதிலை முன் வைக்கிறார்.எகிப்தில் இஸ்ரேல் மக்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டபோது கடலைக் கால் நனையாமல் நடந்து…ஒரே உணவை உண்டு…ஒரே பாறையின் நீரைக்குடித்தாலும் சிலை வழிபாட்டில் ஈடுபட்டு,கடவுளை நோக்கி முணுமுணுத்த அவர்களின் செயல் இறைவனுக்கு சினமூட்டியது என எடுத்துக்கூறுவது மட்டுமின்றி,ஒரே திருமுழுக்கு பெற்று, ஒரே உணவை உண்பது மட்டுமே கொரிந்து நகர மக்களை சிலைவழிபாட்டிலிருந்து விடுவிக்காது என அடித்துக்கூறும் பவுலின் வார்த்தைகளைக் கொண்ட இரண்டாம் வாசகம்…..

    கொடூரமான கொலைச்சாவுகளையும், கோபுரம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சாவுகள்…அத்தனையும் முன் தயாரிப்பின்றி ஏற்பட்ட சாவுகள்…இதே சோகத்தைத் தழுவி நிற்கும் காய்க்காத அத்திமரத்தின் முடிவு.அந்த அத்திமரத்திற்காகப் பரிந்து பேச தோட்டக்காரர் வடிவில் வரும் இயேசு.கனிதராதரபாலைநிலத்திலிருந்து கனி தருதல் நிலைக்குத் திரும்ப அழைக்கும் வார்த்தைகளைக் கொண்ட நற்செய்தி வாசகம்…..

    கனிதராத பாலை நில வாழ்விலிருந்து கனிதரும் சமநிலவாழ்வு நிலைக்குத் திரும்ப வழி சொல்கின்றன இன்றைய வாசகங்கள்.உடல்சார்,அறிவுசார்,உறவுசார் பாலைநிலங்களைக் கடப்பது ஓரளவு முடிந்த விஷயமெனினும், ஆன்மீகம் சார் பாலையைக்கடப்பது அ்த்தனை எளிதல்ல என்பதால் அதைக்கடக்கும் வழி சொல்ல வருகின்றன இறுதிவரிகள்.தான் எதிர்பாராத இடத்தில் ,எதிர்பாரா நேரத்தில்,எதிர்பாரா இறைவனால் அழைக்கப்பட்ட மோசே போன்று, தன் கண்களை ஆடுகளின் மேல் பதிப்பதை விட்டு முட்புதரில் பதியவைத்தது போல் நாமும் நம் வலுவின்மையை ஏற்றுக்கொண்டால் நம் இல்லாமையில் இருக்கிற இறைவன் நமக்காக அனைத்தையும் செய்வார்..நாம் இழந்ததையும் தருவார் என்ற அறிதலும்…..
    நாம் என்ன செய்தாலும்…எந்த நிலையில் இருந்தாலும் இறைவன் நமக்கு நல்லதே செய்வார் எனும் குருட்டு நம்பிக்கையைக் கைவிட்டு நம் கண்களை அவரை நோக்கிப் பதிய வைத்தலும்….
    விரக்தி எனும் எதிர்மறை உணர்வு நம்மில் ஓங்கி நிற்கையில் இதுவரை செய்யாத ஒரு செயலைச் செய்யவும்…செய்து கொண்டிருக்கும் செயலை மாற்றலும் நம் ஆன்மீகப்பாலைவனத்திலிருந்து நம்மை வெளியே கொண்டுவரும் சாலைகள்….
    எந்நேரத்திலும் “இருக்கின்றவரான இறைவன்” நம்மைவிட்டுப் பிரியாத தருணங்களே நம்மை இந்தப் பாலைவனத்தைவிட்டுப் பிரிய உதவுபவை என்ற எண்ணம் நமக்குத்துணை வரட்டும்.ஆறுதல் மறைந்து…வெறுமை வெளிச்சம் போட்டு நிற்கையில் அண்ணாந்து பார்ப்போம்…அங்கே “இருக்கின்ற அவர் இருக்கின்றவராகவே இருப்பார்” எனும் நம்பிக்கையைத் தரும் மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்…ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete