Monday, March 28, 2022

எழுந்து செல்லும்

நாளின் (29 மார்ச் 2022) நற்சொல்

எழுந்து செல்லும்

பாலஸ்தீனம் ஒரு பாலைவனப் பகுதி. பாலைநிலத்தில் வாழ்வோருக்குத் தண்ணீர் முதன்மையான தேவை. தண்ணீர் அவர்களுக்கும் அவர்களுடைய நிலத்துக்கும் உயிரும் ஊக்கமும் தருகிறது. தண்ணீர் பெருகும் இடத்தில் வாழ்வு பெருகும் என்பது அவர்களுடைய வாழ்வியல் அனுபவம்.

இந்தப் பின்புலத்தில் நாம் இன்றைய முதல் வாசகத்தை (எசே 47:1-9,12) புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோது அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய கடவுளும் நகரை விட்டு வெளியேறுகின்றார். எருசலேம் ஆலயமும் தீக்கிரையாக்கப்படுகிறது. புதிய ஆலயத்தைக் காட்சியில் காண்கின்ற எசேக்கியேல், அந்தக் காட்சியில் ஆலயத்தின் மேன்மையையும், அதில் குடியிருக்கும் கடவுளின் மாட்சியையும் காண்கின்றார். எருசலேம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வழிந்தோடும் தண்ணீர் தான் பாயும் இடத்தில் வாழ்வையும் உயிரையும் பரப்பி அனைவருக்கும் நலம் தருகிறது.

நற்செய்தி வாசகத்தில் (யோவா 5:1-3,5-16) தண்ணீரில் இறங்கி நலம் பெறுவதற்காகக் காத்திருந்த உடல்நலமற்ற ஒருவருக்கு நலம் தருகின்றார் இயேசு. இந்த நிகழ்வு 'ஆட்டு வாயில்' எனப்படும் வாயிலுக்கு அருகே நடக்கிறது. எருசலேமைச் சுற்றி 12 வாயில்கள் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் ஆட்டு வாயில். இறங்கிச் செல்லக் காத்திருந்த நபரிடம், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்!' என்று சொல்வதன் வழியாக தானே வாழ்வுதரும் தண்ணீர் என மறைமுகமாக முன்மொழிகிறார் இயேசு.

வாழ்வு தரும் தண்ணீராகிய இயேசுவை அனுபவித்துணர்ந்துள்ள நாம் நலமும் வளமும் கொண்டவர்களாக வாழ்கின்றோமா?


1 comment:

  1. தண்ணீர்த் திவளைகள் தலையில் விழுந்து தெறிப்பது போல் சில்லென்ற உணர்வைத்தரும் ஒரு பதிவு. தண்ணீரைக் கண்டால் மலராத முகங்கள் இல்லை. தண்ணீர் ஒரு இடத்தின் செழிப்பின் அடையாளம். இதைத்தான் காட்சியாகக் காண்கிறார் எசக்கியேல்.பழைய ஆலயம் தீக்கிரையாக்கப்பட்ட போதும், புது ஆலயத்தின் மாட்சியைத் தண்ணீருடன் இணைத்தே பார்க்கிறார்.
    ஆட்டுவாயிலுக்கருகே தனக்கு உதவிசெய்ய யாருமில்லா நிலையில், முடக்குவாதமுற்ற நபரைப் பார்த்து “ எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்!” என மொழியும் இயேசு, தானே வாழ்வுதரும் தண்ணீர் என மறைமுகமாகச் சொல்கிறார்.ஒருபுறம் அவரின் செய்கையை வியக்கும் நிலையில் மறுபுறம் இப்படி ஒரு முடவனையும் துள்ளிக்குதித்து ஓடச்செய்யும் அதிகாரம் அவருக்கு எப்படி, எங்கிருந்து வந்தது என்பதையும் வியந்து பார்க்க வைக்கிறது.
    ஆரம்பித்து விட்டது வறுத்தெடுக்கும் வெயில். இந்நேரத்தில் “இயேசு எனும் தண்ணீர், தான் பாயுமிடமெல்லாம் வாழ்வைப்பெருக்கும் வலிமை பெற்றது” என்ற உண்மை சில்லென்று நம் நெஞ்சில் பாய்கிறது.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete