இரக்கமுள்ளவராய்
மத்தேயு நற்செய்தியாளரின் மலைப்பொழிவின்படி, அறிவுரைப் பகுதியில் இயேசு, 'உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள்' என மொழிகின்றார். 'நிறைவு' என்பதை 'இரக்கம்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். லூக் 6:36-38)
லூக்கா நற்செய்தியாளர் கடவுளின் முகத்தை இரக்கத்தின் முகமாகவே பதிவு செய்கின்றார். 'நிறைவு' என்று சொல்லும்போது அதில் அதிகக் கடினத்தன்மையும், எதிர்பார்ப்பும், நிறைவை அடைய இயலாத குற்றவுணர்வும், நிறைவை அடைந்து விடுவோமா என்ற பயமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், 'இரக்கம்' என்று சொல்லும்போது அங்கே எந்தவிதமான பயம், குற்றவுணர்வு ஆகியவற்றுக்கோ, எதிர்மறை உணர்வுகளுக்கோ இடமில்லை.
இரக்கம் மூன்று நிலைகளில் வெளிப்பட வேண்டும் என உரைக்கின்றார் இயேசு:
ஒன்று, 'பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்காத' மனப்பாங்கில். 'இவர் இப்படித்தான்' என்று நம் மனத்தில் தீர்ப்பு எழுதிவிட்டால் வேறு எந்தச் செயல்பாட்டுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.
இரண்டு, 'பிறரை மன்னியுங்கள்.' நமக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை, அல்லது நமக்குத் தீங்கு நினைப்பவர்களை மன்னித்தல். நமக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு நாம் சற்றே புன்னகைத்தால், அநீதி இழைத்தவர்மேல் நமக்கு கோபம் வருவதற்குப் பதிலாக, பரிதாபம் அல்லது இரக்கமே வருகிறது. அவருடைய அறியாமை நமக்கு வியப்பாக இருக்கிறது. அறிந்துகொள்ள இயலாத அவருடைய உறைந்த உள்ளம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.
மூன்று, 'கொடுங்கள்.' 'கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும்' என்பதை வியாபார நோக்கில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. காணாமல் போன மகன் எடுத்துக்காட்டில் (லூக் 15:11-32) தந்தை இரு மகன்களுக்கும் இரக்கத்தைக் கொடுக்கின்றார். அந்த இரு மகன்களும் தந்தைக்கு எதையும் கொடுக்கவில்லை என்றாலும், தந்தை தன்னகத்தே மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்கிறார். ஆக, பிறருக்குக் கொடுக்க நினைக்கும் நம் உள்ளமே நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்கிறது.
முதல் வாசகத்தில் (காண். தானி 9:4-11), இறைவாக்கினர் தானியேல் இறைவனிடம் சராணகதி அடைகின்றார். இறைவனின் இரக்கத்தைத் தன் நாட்டுக்குப் பெற்றுத்தர விழைகின்றார்.
“ இரக்கம்” தமிழை விட ஆங்கிலத்தில் ‘‘mercy” என்று உச்சரிக்கப்படுகையில் ஏதோ இனம் புரியா ஒரு மெல்லிய உணர்வை உணரமுடிகிறது.இரக்கம்….அனைவராலும் விரும்ப ப்படும் ஒரு சொல்…அவரவர் தனக்குத் தேவை என நினைக்கும் சொல்….கணக்குப் பாராமல் நம் அயலானுக்கு அள்ளித்தர வேண்டிய ஒரு சொல்.பயமோ,குற்றவுணர்வோ இச்சொல்லுக்கருகே வரமுடியாது என்கிறார் தந்தை. ஒருவரைக் குற்றவாளி என நம் மனம் தீர்ப்பெழுதும் நேரம்…அதே சூழ்நிலையில் என்னை நானே வைத்துப்பார்ப்பதும்; நமக்குத் தீங்கு செய்தவர்களை “அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவே” என்ற நினைப்போடு, எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஒரு புன்னகையோடு மன்னிப்பதும்; பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் உள்ளத்து மகிழ்ச்சியை எனக்கு நானே ஒரு வரையறையின்றி கொடுத்துக்கொள்வதும்…. இவையனைத்தும் ‘இரக்கம்’ எனும் ஊற்று நம் உள்ளத்திலிருந்து பீறிட்டெழ, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகள். அத்தனை எளிதா? நடக்கக் கூடியவை தானா இவையனைத்தும்!? உள்ளத்தின் ஆழத்தில் கேள்வி எழாமல் இல்லை. நம் கேள்விக்குப் பதிலாக நிற்கிறார்…தான் செய்யாத தவறுக்காக தன்னைச்சிலுவையில் அறைந்த பேதைகளைப் பார்த்து “ பிதாவே! இவர்களை மன்னியும்! தாங்கள் செய்வது இன்னதென அறியாமல் செய்கிறார்கள்!” என்று வாய்மலர்ந்த இயேசு.
ReplyDelete“இரக்கம் காட்டுபவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்!”
தேவையிலிருப்போருக்கு நம்மை முழுவதும் கொடுக்க வில்லையெனினும், நம்மிடம் உள்ளதையாவது அள்ளித்தருவோம். தவக்காலத்திற்கேற்ற தொரு சிந்தனை தந்த தந்தைக்கு நன்றிகள்!!!