உம் மகன் பிழைத்திருப்பான்
சாகும் தறுவாயிலிருந்த தன் மகனுக்கு நலம் வேண்டி வருகிறார் அரச அலுவலர்.
'என் மகன் இறக்குமுன் வாரும்' என இயேசுவை அவர் அழைக்கிறார்.
மெசியாவின் வருகையின்போது வாழ்வு மட்டுமே இருக்கும் என இறைவாக்குரைக்கின்ற எசாயா இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 65:17-21), 'இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது!' என இறைவாக்குரைக்கின்றார்.
'உம் மகன் பிழைத்திருப்பான்' என்னும் இயேசுவின் சொற்களை நம்பிப் புறப்பட்டுச் செல்கின்ற அரச அலுவலர் தன் மகன் நலமாயிருக்கக் கண்டு மகிழ்கின்றார்.
இந்த நிகழ்வு நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம் என்ன?
'என் மகன் இறக்கப் போகிறான்' என அந்த அரச அலுவலர் கூறியது போல நாமும் பல நேரங்களில், வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும், அல்லது இனி நமக்கு நல்லது எதுவும் நடக்காது என்றும், அல்லது எல்லாம் முடிந்து போகும் என்றும் சொல்லிப் பதற்றப்படுகிறோம்.
வாழ்வோரின் கடவுள் நம் நடுவில் இருக்க, நாம் இறப்பைப் பற்றி அஞ்சத் தேவையில்லை என்பதை மறந்துவிடுகின்றோம்.
நம்மைச் சுற்றி நிகழ்பவை எதிர்மறையாகத் தெரிந்தாலும் நம் நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் வரத்தை இன்றைய நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.
மிக நேர்மறையான….மனத்துக்கு இதமான ஒரு பதிவு. இறைவன் நம் கரம் பற்றி நிற்கையில் சாவு நமக்கு ஒரு விஷயமே இல்லை என்று சொல்லும் நற்செய்தி.இயேசுவை நேருக்கு நேர் பார்த்த பின்பும் தன் மகன் பிழைப்பானா…மாட்டானா எனும் சந்தேகத்தின் விளிம்பில் அரசு அலுவலர். அவர் மட்டுமா… நாமும் கூடத்தான் நம்முடனான இயேசுவின் பிரசன்னத்தை மறந்து பல நேரங்களில் பதறுகிறோம்…பரிதவிக்கிறோம்.நம்மைச் சுற்றி நிகழ்பவை எதிர்மறையாக இருப்பினும் கூட, வாழ்வோரின் கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என நம்புவோம்.” நம்பிக்கை” நம்மிடமிருப்பின் வேறு யார் கையும் தேவையில்லை என்று சொல்லும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete