Friday, March 18, 2022

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்

இன்றைய (19 மார்ச் 2022) திருநாள்

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்

யோசேப்பு நமக்குக் கற்றுத் தரும் வாழ்வியல் பாடங்களை நற்செய்தி நூல் பதிவுகளின் பின்புலத்தில் காண்போம்.

(1) எதையும் உறுதியாக்கிக் கொள்ள வேண்டாம்!

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பெரிய சவால் அனைத்தையும் உறுதிப்படுத்த விரும்புவது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணித வாய்ப்பாடு போல வாழ்க்கையும், வாழ்க்கை நிகழ்வுகளும், நம் உறவுநிலைகளும், பணிகளும் அமைய வேண்டும் என நினைத்து அனைத்தையும் உறுதியாக்கிக் கொள்ள நினைக்கிறோம். நாம் வளர்ந்தபின் நம்மைத் தொற்றிக் கொள்ளும் நோய் இது. குழந்தைப் பருவத்தில் நாம் எதையும் உறுதியாக்கிக் கொள்ள நினைக்கவில்லை. நாம் உண்ணும் உணவு வாயின் ஓரத்தில் வழிந்து சட்டையில் வழிந்தோடினாலும் சிரித்துக் கொண்டோம். ஆனால், வாயின் ஓரத்திலும் சட்டையிலும் எந்தக் கறையும் பட்டுவிடக் கூடாது என்று இப்போது மிகக் கவனமாக இருக்கிறோம். தன் வாழ்வில் இது இப்படி, அது அப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்ற யோசேப்பு மரியாவை மறைவாக விலக்கிவிடத் திட்டம் தீட்டுகின்றார். இப்படியாக அனைத்தையும் உறுதியாக்கிக் கொள்ள நினைக்கின்றார். ஆனால், இறுதியில் தன் திட்டம் அல்ல, மாறாக இறைத்திட்டமே வெற்றி பெறுகிறது என்பதை உணர்;ந்து சரணாகதி அடைகின்றார்.

(2) சொற்கள் அல்ல, செயல்களே பேசட்டும்!

யோசேப்பு யாதொன்றும் பேசவில்லை - எப்போதும். அவர் பேசிய சொற்கள் எதையும் நற்செய்தியாளர்கள் பதிவு செய்யவில்லை. வாழ்வின் முதன்மையானவை சொற்களால் அல்ல, மாறாக, செயல்களாலேயே பேசப்படுகின்றன என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். கனவில் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்குத் தன் செயலால் பதிலிறுப்பு செய்கின்றார்.

(3) வாழ்க்கை இன்னொருவருக்காகவே!

முதல் ஏற்பாட்டில் 'யோசேப்பு' என்னும் பெயர் வழங்கப்படும் இடத்தில், 'யோசேப்பு' என்றால் 'அவர் சேர்ப்பார்,' '(கடவுள்) சேர்த்துக் கொடுப்பார்' என்று பொருள் தரப்படுகின்றது. கடவுள் தன்னை இன்னொருவருக்காகக் கொடுத்தார் என்பதை நம் யோசேப்பு நன்கு உணர்ந்திருந்தார். ஆகையால்தான், ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியையும், தொடர்ந்து குழந்தையையும் ஏற்றுக்கொள்கின்றார். தனக்காக வாழ்வோர் தன் வாழ்வை இழந்துவிடுவர் என்பதன் பொருளை நன்கு அறிந்தவராக இருந்தார் யோசேப்பு. கடவுள் வாழ்க்கை என்னும் கொடையை நமக்கு சேர்த்து அளித்துள்ளார். நம்மையும் இன்னொருவருக்காக அதைச் சேர்த்து வழங்கியுள்ளார்.

(4) இரண்டாம் விழிப்பு அவசியம்!

யோசேப்பு இன்றைய நற்செய்திப் பகுதியில் (மத் 1:16-24) இரு முறை விழித்திருக்கின்றார். முதல் முறை அவர் விழித்திருக்கும்போது அவருடைய மூளை அதிகமாகச் சிந்திக்கிறது. இரண்டாம் முறை அவர் (தூக்கத்திலிருந்து) விழிக்கும்போது மூளையின் செயல்பாடு குறைந்து இதயத்தின் செயல்பாடு தொடங்குகிறது. ஆகையால்தான், அவரால் மரியாவை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இரண்டாம் விழிப்பு நம் வாழ்வில் மிக அவசியம். அகுஸ்தினார் இரண்டாம் விழிப்பு பெற்றார். மனம் மாறினார். இரண்டாம் விழிப்பு நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுகிறது. இரண்டாம் விழிப்பில் நாம் மூளையின் செயல்பாட்டைக் குறைத்து மனம் அல்லது இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கின்றோம்.

(5) கட்டுப்பாடு இழக்காதே!

மாற்கு அவுரேலியு, 'சிந்தனைகள்' என்னும் தன் நூலில், ஓர் ஆண்மகன் போற்ற வேண்டிய நான்கு திறன்களை முன்மொழிகின்றார்: (அ) திட்டமிடும் திறன், (ஆ) கட்டுப்பாட்டுத் திறன், (இ) உறவுத் திறன், மற்றும் (ஈ) வளம்ஈட்டும் திறன். இவற்றில், 'கட்டுப்பாட்டுத் திறன்' மிகவும் அவசியம். வாழ்வின் எந்தச் சூழலிலும் தன்னைக் குலைய விடாமல் காத்துக்கொள்ள உதவுவதே கட்டுப்பாட்டுத் திறன். இந்தத் திறன் உடையவர்கள் வெற்றி கண்டு மகிழ்வதும் இல்லை, தோல்வி கண்டு சோர்வதும் இல்லை. யோசேப்பு அனைத்து வாழ்வியல் நிகழ்வுகளிலும் தன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தன் எதிர்பார்ப்பின் படி எதுவும் நிகழவில்லை என்றாலும், தன் உணர்வுகள் தன்னைப் பிறழ்வுபடுத்தாவண்ணம் தன்னைக் காத்துக்கொள்கின்றார். சத்திரத்தில் இடம் இல்லை என்ற சொல் கேட்டு மௌனமாக இருக்கிறார். எகிப்துக்கு ஓடு என்றால் ஓடுகிறார். திரும்பிச் செல் என்றால் செல்கிறார். 

(6) தூங்கிவிடுதல் நலம்!

வாழ்வின் நிகழ்வுகள் நம்மைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது தூங்கிவிடுதல் நலம். இறந்த இலாசர் உயிர்பெறும் நிகழ்வில், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலம் பெறுவார்' எனச் சொல்கின்றனர் சீடர்கள்(காண். யோவா 11:12). தூக்கம் இறைவனின் இயங்குதளமாக இருக்கிறது. அன்பு செய்யப்படுபவர் அயர்ந்து தூங்குவார் என்பது செல்டிக் பழமொழி. தூக்கம் ஒரு பெரிய வரம். இரவில் கட்டிலில் பிணம் போல விழ வேண்டும் என்கிறார் பட்டினத்தார். பகலின் நல்ல வேலை இரவில் நல்ல தூக்கத்தைத் தருவது போல, வாழ்வில் நல்ல உழைப்பு நல்ல இறப்பைத் தருகிறது என்பது லெயோனார்டோ டாவின்சியின் வாக்கு. இன்று நமக்குத் தேவையான முக்கியமான உடற்பயிற்சி தூக்கம். நம் பிறழ்வான உணவுப் பழக்கம், அதீத சிந்தனை, கணினி, செயல்திறன் பேசிகள் இவற்றால் நம் தூக்கம் குறைந்துகொண்டே வருகின்றது. வாழ்வின் எதார்த்தங்கள் புரியாத போது, அடுத்து என்ன செய்வது என மனம் பதறும்போது தூங்கி விடுதல் நலம். தூக்கக் குறைவு என்பது உழைப்புக் குறைவே!

புனித யோசேப்பு என்றும் நமக்காகப் பரிந்து பேசுவாராக!


1 comment:

  1. “புனித யோசேப்பு” …. இறைவனுடைய சிறப்பான படைப்பான இந்த யோசேப்பு என்னளவில்…எனக்குத் தெரிந்த அனைவருக்குமே நெருக்கமானவர். காரணம் அவர் குழந்தை இயேசுவின் வளர்ப்புத் தகப்பன் என்பதைத் தாண்டி, இவரை நேசிக்கும் அனைவரையும் உச்சத்திற்குத் தூக்கி விடுபவர் என்பதே உண்மை. அதீத நெருக்கத்துடன் இவரைப் பார்ப்பவர்களுக்கு இன்றையப் பதிவு எடுத்து வைக்கும் அவருடைய அனைத்து குணாதிசயங்களும் உண்மையே என்ற புரிதலைத் தரும்.
    நம் வாழ்வின் வளத்திற்குத் திட்டம் தீட்டுவதை விடுத்து, இறைத்திட்டம் புரிந்து…தெளிந்து அதை வாழ்வாக்குவதும், தனக்குச் சொல்லப்பட்ட விஷயங்கள் கனவின் மூலமே எனினும், அவ்விஷயங்களை வாழ்வாக்குவதில் தீவிரம் காட்டிய யோசேப்பு போல் நம் வாழ்விற்கு செயல்கள் வழியே அர்த்தம் சேர்ப்பதும்,” தனக்காக வாழ்வோர் அதை இழந்து விடுவர்” எனும் உண்மை உணர்ந்து, நம் வாழ்க்கையை அடுத்தவருக்கான அர்ப்பண உணர்வோடு வாழ்வதும், வெற்றியும்,தோல்வியும் நம் வாழ்வைப்பாதிப்பதை விடுத்து நம்மை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் நாம் கொண்டாடும் யோசேப்பு நமக்கு வழிகாட்டும் விஷயங்கள்.
    இன்றையப் பதிவின் அந்த “இரண்டாம் முறை விழிப்பது” என்பது என்னைக் கவர்ந்த ஒரு விஷயம்.காரணம் இரண்டாம் விழிப்பில் தான் நம் மூளையின் செயல்பாடு குறைந்து, இதயம் செயல்படத் தொடங்குகிறது என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அழகான விஷயம்.
    அந்த இறுதிப்பகுதி என்னை மிகவும் பாதுத்து விட்டது என்பது உண்மை! காரணம் இன்று நமக்குத் தேவையான உடற்பயிற்சியான தூக்கம் எனக்கு ஒரு குறையே என்பதுதான். “வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது தூங்கி விடுதல் நலம்” என்கிறார் தந்தை. ஆனால் அந்தத் தூக்கமே கைக்கெட்டாத கனி எனும்போது யார் எனககுத் துணை வரமுடியும்? வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது… அடுத்து என்ன செய்வது என மனம் பதறும்போது தூங்க முடிந்தால் எத்துணை நலம்! தந்தையின் “ தூக்கக் குறைவு என்பது உழைப்புக்குறைவே” என்பது உண்மை எனத் தோன்றினாலும் என்னளவில் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லை. இந்த விஷயத்தில் என் உதவிக்கு வர புனித யோசேப்பை அழைக்கலாம் என்ற ஒரு யோசனை தந்தமைக்காக தந்தைக்கு நன்றிகள்! புனித யோசேப்பு கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கள் என்ற பயணத்தில் நான் சிறிது பாதை மாறிச்சென்றிடினும் , “அவர் நமக்காகப் பரிந்து பேசுவாராக!” எனும் வேண்டுதலில் தந்தையோடு இணைகிறேன்.
    தந்தைக்கும்….அனைவருக்கும் புனித யோசேப்பின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete