Thursday, March 17, 2022

வெறுப்பு வேண்டாம்!

நாளின் (18 மார்ச் 2022) நற்சொல்

வெறுப்பு வேண்டாம்!

இந்து இறையியலில் 'அரிஷத்வர்கா' என்ற கருத்துரு உண்டு. அதாவது, மூளையின் அல்லது மனத்தின் ஆறு விருப்ப நிலைகள் என முன்வைக்கப்படுபவையே அரிஷத்வர்கா. அவையாவன, 'காமம்' (இன்ப விருப்பம்), 'க்ரோதாம்' (கோபம்), 'லோபம்' (பேராசை), 'மோகம்' (பிணைப்பு), 'மதம் அல்லது அகங்காரம்' (ஆணவம்), மற்றும் 'மத்ஸர்யம்' (பொறாமை). இந்த ஆறு விருப்ப நிலைகளும் தனிமனிதரை மோட்சம் அல்லது நிர்வாணா நிலையை அடைவதற்குத் தடையாக இருக்கின்றன. மேலும், இவை கலிகாலத்தில் மேலோங்கி இருக்கும் என்றும் இறையியல் முன்வைக்கிறது.

இவற்றுக்கெல்லாம் மாற்றாக இருப்பது 'தர்மம்'. அதாவது, தர்மம் நிலைநாட்டப்படும்போது மேற்காணும் விருப்ப நிலைகள் மறைந்துவிடுகின்றன.

நாம் தவக்காலத்தில் பயன்படுத்தும் திருப்பலி தொடக்கவுரை எண் 4இல் நாம் பின்வருமாறு செபிக்கின்றோம்:

'எங்கள் உண்ணா நோன்பின் வழியாக 

நீர் எங்கள் தீய நாட்டங்களை அடக்குகின்றீர்.

மனதை மேலே எழுப்புகின்றீர்.

நற்பண்புகளையும் அவற்றுக்கான பரிசுகளையும்

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகப் பெருகச் செய்கிறீர்.'

இன்றைய நாளில் நாம் மேற்கொள்ளும் நோன்பு நம் தீய நாட்டங்களை அடக்கவும், நம் மனதை மேலே எழுப்பவும் பயன்படுவதாக.

இயேசுவின் பாடுகள் வரலாற்றை வாசிக்கும்போது, வெறுப்பு என்னும் உணர்வு நிகழ்வுகள் முழுவதும் இழையோடிக் கிடப்பதைக் காண முடிகிறது. மனிதர்கள் ஏன் தங்கள் சக மனிதர்களைக் கொல்ல வேண்டும்? கொல்லத் துணியும் அளவுக்கு ஏன் வெறுப்பு கொள்ள வேண்டும்? ஒருவர் மற்றவர்மேல் ஏன் நாம் போர்தொடுக்க வேண்டும்? 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 37:3-4,12-13,17-28) இளவல் யோசேப்பின்மேல் அவருடைய சகோதரர்கள் வெறுப்பு காட்டுகிறார்கள். விளைவு, அவர் ஏறக்குறைய சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு, அந்நியர்கள் கைகளில் விற்கப்படுகின்றார். 'விற்கப்படுதல்' என்பது ஏறக்குறைய கொல்லப்படுதலுக்குச் சமம். 

நற்செய்தி வாசகத்தில் (மத் 21:33-43,45-46) தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் எதிர்கொள்கின்ற இயேசு, பொல்லாத திராட்சைத் தோட்டக் குத்தகைதாரர்கள் எடுத்துக்காட்டின் வழியாக, அவர்கள் தன்மேல் கொண்டிருக்கின்ற வெறுப்பைத் தோலுரித்துக் காட்டுகின்றார். விளைவு, அவர்கள் இயேசுவைப் பிடிக்க வழிதேடுகின்றனர்.

நாம் கொண்டிருக்கும் வெறுப்பு கோபம், எரிச்சல், பதற்றம், பொறாமை, பழிச்சொல் எனப் பல நிலைகளில் வெளிப்படுகின்றது. வெறுப்பு ஓர் எதிர்மறை உணர்வாக இருக்கும்போதே அதை அழித்துவிடுதல் நலம். அது செயலாக மாறத் தொடங்கிவிட்டால் நிறுத்துவது கடினம். ஏனெனில், நம் செயல்களுக்கு நாமே நியாயம் கற்பிக்கத் தொடங்குவோம்.

நாம் யாரும் யாருக்கும் உயிரைக் கொடுக்க முடியாது என்பதால், யாரும் யார் உயிரையும் எடுக்கவும் கூடாது. உயிரைக் கொல்லும் வெறுப்பு உறவுகளையும் கொல்கின்றது.

1 comment:

  1. தனிமனிதன் முத்தியடையத் தடையாக இருக்கும் காமம்,கோபம்,மோகம், பேராசை,அகங்காரம் பொறாமை……இத்தனைக்கும் மாறாக இருப்பது….இவைகளை இருப்பிலிருந்து மறையச் செய்வது “ தர்மம்”. கொடுப்பது மட்டுமின்றி மனிதனைத் தெய்வமாக மாற்றக்கூடிய ஒரு விஷயம். தர்மம் நிலைக்க….நம் தீயநாட்டங்களை அடக்கி நம் மனத்தை மேலே எழுப்பக் கூடிய ஒரு நல்ல விஷயம்….. தவக்காலம் மட்டுமின்றி,எல்லாக் காலங்களிலுமே நம் உடம்பை சுருக்கி, மனத்தை விண்ணை நோக்கிப் பயணம் செய்யத் துணை நிற்கும் “ நோன்பு” எனும் உண்டி சுருக்குதல்.
    விருப்ப நிலைகளையெல்லாம் தாண்டி…கிட்டத்தட்ட ஒரு கொலை செய்யுமளவிற்கு நம்மைத் தூண்டும் ஒரு எதிர்மறை உணர்வே “ வெறுப்பு” எனும் ஒரு அரக்க குணம் என்று சொல்ல வருகின்றன இன்றைய வாசகங்கள்.
    கிட்டத்தட்ட கொலைபாதகத்திற்கு சமமான ஒரு செயல்…. யோசேப்பை ….உடன்பிறந்த இரத்தமும்,சதையுமானவன் என்றுகூடப் பாராமல், அவனை விற்றுவிடத்துடிக்கும், சகோதரர்களின் வெறுப்பு பற்றிக்கூறும் முதல் வாசகம்…
    தலைமைகுருக்களும்,மூப்பர்களும் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்காக இயேசுவின் மீது காட்டப்படும் வெறுப்பு பற்றிக்கூறும் நற்செய்தி வாசகம்….
    வெறுப்பு எனும் தீ கனலாக இருககும்போதே பொறுமை எனும் நீர் ஊற்றி அணைக்காவிட்டால்… அது கொழுந்துவிட்டெரியும் நெருப்பாக மாறி நம்மையே அழித்துவிடும். உயிரையும்…உறவுகளையும் கொல்லும் வெறுப்பை நாமும் வெறுப்போம்!
    காலத்திற்கேற்றதொரு பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete