Wednesday, March 2, 2022

உன் கையில் வாழ்க்கை

நாளின் (3 மார்ச் 2022) நற்சொல்

உன் கையில் வாழ்க்கை

நம் வாழ்க்கையில் எல்லாம் விதித்துள்ளபடிதான் நடக்கிறதா, அல்லது நாமாகவே நம் கையை நீட்டி நமக்கு வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாமா என்ற குழப்பம் நமக்கு எப்போதும் நீடிக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில், இணைச்சட்ட நூல் ஆசிரியரின் கூற்றுப்படி, நமக்கு முன் வாழ்வும் நன்மையும், சாவும் தீமையும் உள்ளன. நாமாகவே விரும்பி அவற்றில் ஒன்றைத் தெரிவுசெய்துகொள்ள முடியும்.நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சாவை முன்னுரைக்கின்றார். அதாவது, மானிட மகன் பாடுகள் படுவதும் இறப்பதும் உயிர்ப்பதும் நடக்க வேண்டியவை என முன்னுரைக்கின்றார். 

ஆக, ஒரு பக்கம் நமக்கு விருப்புரிமை இருக்கிறது. இன்னொரு பக்கம், எது நடக்க வேண்டுமோ அது நடந்தேறுகிறது.

இந்த உறுதியற்ற நிலையில் பயணம் செய்வதுதான் ஒறுத்தல்.

'உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரது குரலுக்குச் செவிகொடு. அவரே உன் வாழ்வு' என்று ஆண்டவர்பால் மனத்தைத் திருப்புமாறு அழைக்கின்றார் மோசே. தன்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தன்னலம் மறந்து தன் சிலுவையைத் தூக்க வேண்டும் எனக் கற்பிக்கின்றார் இயேசு.

ஆக, வாழ்வும் சீடத்துவமும் நம் தெரிவால் மட்டுமே சாத்தியம்.

அனைத்தையும் தெரிந்துகொண்டு, வாழ்வை இழந்து விட்டால் அதனால் என்ன பயன்?

அதாவது, அனைத்தையும் தெரிந்துகொண்டு ஆண்டவரை விட்டால் என்ன பயன்?

பதிலுரைப் பாடல் (திபா 1), ஆண்டவர்மேல் நம்பிக்கை கொள்ளுமாறு நம்மை அழைக்கிறது. ஆண்டவர்மேல் கொள்ளும் நம்பிக்கை ஒருவரை நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல வளரச் செய்கிறது. அவர் தான் செய்வதனைத்திலும் வெற்றி பெறுகிறார்.

இன்று நாம் மேற்கொள்ளும் தெரிவு எப்படி இருக்கிறது?

நம் வாழ்வில் நடக்க வேண்டியவை நடந்தே தீரும் என்ற நிலை இருந்தாலும், இன்னொரு பக்கம், நம் கையருகில்தான் வாழ்வும் சாவும் இருக்கின்றன. சாவை மறுத்து, வாழ்வைப் பற்றிக்கொள்தல் துன்பம் தருவதாக இருந்தாலும் அதைப் பற்றிக் கொள்தல் நலம்.

ஏனெனில், நம் தலைவரும் சகோதருமான இயேசு அதையே செய்தார்.

3 comments:

  1. நாம் ஒன்றை விரும்புகிறோம்; அது நம் கையை விட்டு நழுவுகிறது. “இது எதற்கு?” என ஒதுக்குகிறோம்.ஆனால் வலுக்கட்டாயமாக நம்மிடம் திணிக்கப்படுகிறது. “நாம் ஒன்று நினைக்க தெய்வம் நினைப்பது வேறு ஒன்று” நாம் அடிக்கடி சொல்லியும்,கேட்டும் சலிப்பு தட்டும் வார்த்தைகள்! இந்த உறுதியற்ற நிலைப்பயணம் செய்வதே ஒறுத்தலெனில்,அத்துடன் இணைந்ததுவே நம் வாழ்வும்,சீடத்துவமும் என்கிறது இன்றையப்பதிவு.நம் வாழ்வில் நாம் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் வாழ்வின் வெற்றியும்,தோல்வியும் என்று மோசே போன்றவர்கள் நமக்கு வாழ்ந்து காட்டிச்சென்றுள்ளனர்.நம் முன்னே உள்ளது வாழ்வும்,சாவும்; காயும்,கனியும். எதைத்தெரிவு செய்யப்போகிறோம்? இன்றைய உலகில் வாழ்தல் என்பது கடினமே! ஆயினும் ஆண்டவர் மேல் வைத்து நாம் வாழும் வாழ்க்கை நம்மை நீரோடையோரம் நட்ட மரம் போல் வளரச்செய்வது மட்டுமின்றி,நாம் செய்வதனைத்திலும் வெற்றிபெறச்செய்கிறது.ஆகவே வாழும் வழி தேடுவோம்; அதை அவர்மீது வைத்த நம்பிக்கையில் வாழ்ந்து காட்டுவோம்….அது சிலுவையைத் தூக்கிக்கொண்டு பயணிக்கும் வாழ்வாக இருப்பினும் கூட.” ஆண்டவரைத் தேடுவோருக்கு அனைத்தும் நலமே!” என்ற நம்பிக்கை தரும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Todays reflection in comment Section is very meaningful. Thanks

    ReplyDelete