Thursday, March 10, 2022

சிறந்த நெறி

நாளின் (11 மார்ச் 2022) நற்சொல்

சிறந்த நெறி 

தன் சீடர்களின் நெறி மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களின் நெறியை விடச் சிறந்ததாக இருக்க வேண்டும் என முன்மொழியும் இயேசு, முதல் ஏற்பாட்டுச் சட்டம் ஒன்றை எடுத்து அதன் அறத்தை நீட்டுகின்றார். கொலை என்ற செயலை மையமாக வைத்திருந்த சட்டத்தின் பின்புலத்தில் கோபம் கொள்தலை அறவே தவிர்க்குமாறும், எந்நிலையிலும் உறவைத் தக்க வைக்குமாறும் அறிவுறுத்துகின்றார். 

வெளிப்புறத்தில் காணும் செயலை மட்டும் காண்பதை விடுத்து, அதைத் தூண்டுகின்ற காரணி அல்லது மனப்பாங்கை ஆய்வு செய்ய அழைக்கிறது இயேசுவின் அறிவுரை.

நீதி என்னும் வழியை விடுத்து, இரக்கம் என்னும் வழியைப் பற்றிக்கொள்ள அழைக்கின்றார் இயேசு.

வாழ்வின் பல தளங்களில் நாம் நீதியின்படி நடக்க விரும்புகின்றோம். ஆனால், நீதிiயும் மிஞ்சிய இரக்கம் என்னும் அளவுகோல் நம் உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு உதவுகிறது.

இதுவே சிறந்த நெறி.

இதையே திருப்பாடல் ஆசிரியரும், 'ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ... நீரோ மன்னிப்பு அளிப்பவர் ... பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது' (திபா 130) என்று பாடுகின்றார்.

1 comment:

  1. நேற்றைய தின விரித்த கரங்களைப் போல, இன்றைய தினம் இணைக்கத் துடிக்கும் கரங்களும் நமக்கு ஒரு செய்தி சொல்கின்றன.பலியையல்ல…இரக்கத்தையே விரும்புகிறேன் என்றுரைத்த இயேசு ,இரக்கத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்கிறார்.சில சமயங்களில் இரக்கத்தை முன்னெடுத்துச்செல்ல நீதியைக் கொஞ்சம் ஓரங்கட்ட வேண்டியிருக்கிறது. இதனால் தானே
    “ ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலை நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்… ஏனெனில் பேரன்பு உம்மிடமே உள்ளது.”…. என்று நம்மாலும் திருப்பாடலாசிரியரோடு இணைந்து பாட முடிகிறது!?
    யாரோடேனும் கசப்புணர்வு கொண்டிருந்தால் நம் இரக்கத்தின் கரங்களை அவர்களை நோக்கி நீட்ட விடுக்கும் ஒரு அழைப்பு!
    வெள்ளிக்கிழமை! இரக்கத்தின் உணர்வோடு நம்மைத் துயில் களையச் செய்யும் ஒரு பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete