Wednesday, March 9, 2022

கேட்போர் எல்லாரும்

நாளின் (10 மார்ச் 2022) நற்சொல்

கேட்போர் எல்லாரும்

'என் செபத்தை இறைவன் கேட்பதில்லை' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நாமும் சில நேரங்களில் இதையே சொல்கின்றோம். 

'கடவுள் அவருக்கு உரிய நேரத்தில் அதைக் கொடுப்பார்' அல்லது 'கடவுள் காலம் தாழ்த்துகிறார் எனில் அது நம் நன்மைக்காகவே' அல்லது 'கடவுள் உன் நற்செயல்களுக்கு ஏற்றாற்போல்தான் உன் செபத்தைக் கேட்பார்' என்று நிறைய பதில்களையும் நாம் கேட்கின்றோம்.

'கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மிகவும் உறுதியாகக் கூறுகின்றார். 

'கேட்டல்' என்பது 'வேண்டுதல்' அல்ல, மாறாக, 'செவிகொடுத்தல்' என்று சிலர் இதற்கு விளக்கம் தருவதுண்டு.

இயேசுவின் இக்கூற்றை எப்படிப் புரிந்துகொள்வது?

(அ) எது வேண்டும் என்ற தெளிவு உள்ளவர்தான் கேட்க முடியும். அல்லது நாம் ஒன்றை வரையறுத்துக் கேட்கின்ற போது அதைப் பற்றிய தெளிவு கிடைக்கிறது. எனக்கு எது வேண்டும் என்ற வரையறையும் தெளிவும் இல்லாத போது நான் எப்படி இறைவேண்டல் செய்ய முடியும்?

(ஆ) கடவுள் என் தந்தை என்றும், நான் அவருடைய மகன் அல்லது மகள் என்ற நிலையிலும் கேட்க வேண்டும். ஆக, என் உறவுநிலை சரியாக இருக்க வேண்டும்.

(இ) கடவுளின் நன்மைத்தனம் மனிதர்களின் நற்குணத்தை விட மேலானது என்பதை உறுதியுடன் ஏற்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் இளவரசி எஸ்தர் ஆண்டவராகிய கடவுளை நோக்கி மன்றாடுகின்றார். கடவுளும் அவருடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்கின்றார்.

இறைவனிடம் கேட்போம்! இறைவனைக் கேட்போம்! இறைவன்சொல் கேட்போம்! இறைவேண்டலில்!


1 comment:

  1. மேலே படத்தில் தெரியும் விரித்த கரங்களுடன்….திறந்த மனத்துடன்…. ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு நாம் எதைக்கேட்டாலும் முகம் கோணாமல் தருபவரே நம் தந்தை. நமக்கு வேண்டுவதெல்லாம் “ஆதரவற்றவர்களும்,வேறு துணையில்லாதவர்களுமே நாம்” எனும் எஸ்தர் அரசியின் உணர்வு மட்டுமே! சிறிய குப்பியில்,சிறந்த மருந்தாக வருகின்றன தந்தையின் வார்த்தைகள்!
    “ இறைவனிடம் கேட்போம்! இறைவனைக்கேட்போம்! இறைவன் சொல் கேட்போம்! இறைவேண்டலில்!”… அழகு!
    இந்த வரிகளை என் விரல்கள் தட்டிக்கொணடிருக்கும் நேரம் “ எதை நான் கேட்பின் உனையே தருவாய்?” எனும் திரைப்படப் பாடலின் அர்த்தமுள்ள வரிகள் என் செவிகளை வருடுகின்றன. நேரத்தின் தேவையறிந்த வரிகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete