செயல்கள்
நம் சொற்கள் அல்ல, மாறாக, நம் செயல்களே நம் முதன்மைகளைக் குறித்துக்காட்டுகின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் (மத் 23:1-12), செயல்கள் பற்றிய இரண்டு கருத்துகளை முன்மொழிகின்றது: ஒன்று, சொற்கள் அல்ல, மாறாக, செயல்களே முதன்மையானவை. இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் தங்கள் சொற்கள் ஒன்று, செயல்கள் வேறு என்று இருந்தனர். இரண்டு, அவர்களுடைய செயல்கள் வெளிப்புற மதிப்பு மற்றும் ஏற்பு ஆகியவற்றை மையப்படுத்தியதாக இருந்தது. அல்லது, தங்கள் செயல்களால் வெற்று ஆடம்பரம் செய்தனர்.
இவ்விரண்டு கருத்துகளும் வேறு வேறு என்றாலும் கவனித்துப் பார்த்தால், இவை இரண்டும் ஒரே குவிமையம் கொண்டிருக்கின்றன.
அது என்ன?
மனிதர்களின் வாழ்வில் செயல்கள் முதன்மையானவை. வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். செயல்காள சொற்கள் மிளிராத வரை அவை வெறும் சொற்களே. தங்கள் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடைவெளி உள்ளவர்கள் அதை மறைப்பதற்காக, ஆடம்பரமான மற்றும் ஆரவாரமான செயல்களில் ஈடுபட்டு மற்றவர்களின் கவனத்தைப் பெறுவர்.
இந்த நாள் தரும் செய்தி என்ன?
சொற்களுக்கும் செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்போதுதான் ஒருவர் முதிர்ச்சி அடைகிறார், அல்லது வளர்கிறார். ஒவ்வொரு மனிதரிலும் ஒரு குழந்தை இருக்கிறார், ஒரு வளர்ந்தவர் இருக்கிறார். வெறும் சொற்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர் குழந்தை. செயல்களாகத் தன் சொற்களை மாற்றுகிறவரே வளர்ந்தவர்.
இன்று நான் எந்த அளவிற்கு வளர்ந்தவராக இருக்கிறேன்? என்று நம்மையே கேட்டுப் பார்ப்போம்.
முதல் வாசகத்தில் (எசா 1:10,16-20), 'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார் இறைவாக்கினர் எசாயா. அதாவது, நன்மை செய்தல் என்னும் செயல் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அதாவது, ஒருவர் அதற்கென நேரத்தையும் ஆற்றலையும் திறனையும் செலவிட வேண்டும்.
நம் சொற்கள் செயல்களாக மாறட்டும்.
அப்படி மாறும் நம் செயல்கள் நன்மை தரட்டும்.
நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்வோம்!
ஒரு மனிதன் எப்படிப்பட்டவர் என்பதை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது அவர் பேசும் பேச்சும்,அவர் செய்யும் செயல்களுமே! இதில் “சொற்களைவிட, நம் கூட பயணிப்பவரின் மனத்தில் நிலைத்து நிற்பது நம் செயல்களே!” என்று கூறுகின்றன இன்றைய வாசகங்கள். செயலற்ற ஓசைகள் வெறும் ஓலங்களின் தாளங்களே! ஒருவர் அமர்ந்திருக்கும் இடம் விட்டு நகராமலே தன் வார்த்தைப் பிரவாகத்தைப் பிதற்ற முடியும்.ஆனால் ஒரு செயலில் இறங்க…அதுவும் நற்செயலில் இறங்க ஒரு நல்லெண்ணம் தேவைப்படுகிறது. பின் அது முயற்சியாகி, செயல்வடிவம் பெற கொஞ்சம் கால அவகாசம், ஆற்றல்,திறன் முதலியவை தேவைப்படுகின்றன. இத்தனை விஷயங்களின் கலவையான ஒரு செயல் ஒரு நன்மையைத்தான் பெற்றெடுக்கும்.ஆகவே சொற்களுக்கும்,செயல்களுக்குமான இடைவெளி குறையட்டும். இந்த உலகம் நற்செயல்களின் வீரர்களால் நிரம்பி வழியட்டும்! நம்மால் இயன்ற ஒரு விஷயத்தை முயற்சிக்க நம்மை ஊக்குவிக்கும் ஒரு பதிவு. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
ReplyDelete