மோசே உங்கள்மேல்
இயேசுவின் சமகாலத்து யூதர்கள் தங்களுடைய பழைய காலத்து மேன்மையும் மேட்டிமையும் தங்களுக்கு விடுதலையையும் மீட்பையும் பெற்றுத்தரும் என்று நம்பினர். பழைய காலத்து மேன்மை ஒருபோதும் ஆட்டோமேடிக்காக விடுதலை பெற்றுத் தராது எனக் கற்றுத் தருகின்றார் இயேசு.
விடுதலைப் பயண நூலில் இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபடும் நிகழ்வில், மோசே ஆண்டவராகிய கடவுளிடம் பரிந்து பேசி, மக்கள்மேல் அவர் கொண்டுவரவிருந்த ஆபத்திலிருந்து அவர்களை விடுவிக்கின்றார். இந்தவொரு பின்புலத்தில் தாங்கள் எந்த நிலையில் இருந்தாலும், தாங்கள் உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாக இல்லாமல் இருந்தாலும் தங்களுக்காகப் பரிந்துபேசுவதற்காக மோசே இருக்கிறார் என நம்பினர் யூதர்கள்.
இதே பின்புலத்தில்தான் இயேசுவை நம்புவதற்குக் கடின உள்ளம் கொண்டிருப்பதுடன், மறைநூல் இயேசுவுக்குச் சான்று பகர்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவருக்கு எதிராகவும் பேசுகின்றனர்.
நம் பழைய மேன்மையும் மேட்டிமையும் ஒருபோதும் நமக்கு விடுதலை பெற்றுத் தருவதில்லை. நான் தந்தை-மகன்-தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு பெற்றுவிட்டேன். அந்தத் திருமுழுக்கே எனக்குப் போதும் எனச் சொல்லும் போது நாம் பழையை மேன்மையையே பற்றிக்கொள்கின்றோம். ஆனால், இன்று, இப்போது இயேசுவுக்கு நான் என்ன பதிலிறுப்பு செய்கிறேன் என்பதில்தான் என் விடுதலை அடங்கியுள்ளது.
பழைய பெருமையையே பாடிக் காலத்தைக்கழிப்பவர்களை நம் வாழ்விலும் எதிர்கொண்டிருப்போம். அப்படிப் பெருமை பேசுபவர்களைப்பின்புலத்தில் வைத்தே வருகிறது இன்றையப்பதிவு. கானான் தேசம் நோக்கிய தங்கள் பயணத்தில், இறைவன் தங்கள் கூடவே பயணிப்பதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளாத இஸ்ரேல் மக்கள், அவரை மறந்து, பொன்னாலான ஒரு கன்றுக்குட்டியைத் தெய்வமாக வழிபட, கோபம் கொண்ட இறைவனிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார் மோசே. பல நேரங்களில் நமக்கு நல்லது நினைக்கும் நல்ல உள்ளங்களின் மதிப்பை நாம் உணராமல், எப்பொழுதுமே நமக்காக..நம்மோடு நடக்க ஒரு மோசே வருவார் எனும் எதிர்பார்ப்பில் நாமிருக்கும் பொழுதுகளுண்டு.நாம் கடந்துவந்த காலங்களில் நாம் செய்த அரிய- பெரிய செயல்கள் அல்லது நம் மூதாதையரின் நற்செயல்கள் நம்மை எல்லாத் தீங்கிலிருந்தும் காத்துக்கொள்ளும் என்ற கனவில் மிதக்கிறோம்….இன்று…இப்பொழுது எனக்குள் உறையும் இயேசுவை உணராமல் கடந்த கால சுகத்தில் மனத்தை மிதக்கவிடுகிறோம்.காலம் கடந்துவிடவில்லை. நமக்கு இன்று கிடைத்துள்ள நன்மைகளையும்,நம்மோடு பயணிக்கும் இயேசுவின் உடனிருப்பையும் உணர ஆரம்பிப்போம். நாமும் நம் வாழ்வுப்பயணத்தில் கூட வரும் சகமனிதருக்கு மோசேக்களாக நின்று இறைவனின் இரக்கத்தைப் பெற்றுத்தருவோம். தவக்காலப் பயணத்திற்கேற்றதொரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete