உற்றார் எதிர்ப்பு
தவக்காலப் பயணத்தின் பாதி வழியைக் கடக்க இருக்கும் வேளையில், இயேசு தன் வாழ்வில் சந்தித்த எதிர்ப்புகள் பற்றிப் பேசத் தொடங்குகின்றன இனி வரும் வாசகங்கள்.
இயேசுவின் சிலுவை, பாடுகள், மற்றும் இறப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய நிகழ்வுகள் இல்லை. தன் பிறப்பு முதல் இயேசு, சிலுவையின் நிழலில்தான் இருந்தார்.
இயேசுவை முதலில் அவருடைய உற்றார், மற்றும் சொந்த ஊரார் எதிர்க்கின்றனர். இந்த நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 4:24-30) வாசிக்கின்றோம். இயேசு தன் சொந்த ஊரில் பணியைத் தொடங்குகின்றார். தொழுகைக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டிலிருந்து வாசிக்கின்றார். அவருடைய போதனையைக் கேட்கின்ற ஊரார் முதலில் அவரைப் பாராட்டிப் புகழ்கின்றனர். ஆனால், அவருடைய எளிய பின்புலம் கண்டு அவரைக் குறித்து இடறல்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியைத்தான் இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.
யூதர்களின் கடவுளாகிய ஆண்டவர் யூதர்களுக்கு அல்ல, புறவினத்தாருக்கே நலன்கள் புரிந்தார், ஏனெனில், அவர்கள் அவரை நம்பினர் என்று இயேசு சொன்னதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. யூதச் சமூகம் தன்னையே தூய்மையான சமூகமாகக் கருதியது. கடவுள் தங்களுக்கு மட்டுமே அவரை வெளிப்படுத்தியதாக அவர்கள் நம்பினர். மேலும், புறவினத்தாரை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.
இந்த நேரத்தில், இரு எடுத்துக்காட்டுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் இயேசு: ஒன்று, சாரிபாத்து நகர் கைம்பெண். இரண்டு, தொழுநோய் பிடித்த நாமான். இவர்கள் வெறும் புறவினத்தார்கள் மட்டுமல்ல. மாறாக, புறவினத்துப் பெண்ணாகவும், கைம்பெண்ணாகவும், தொழுநோய் பீடித்தவராகவும் இருக்கின்றனர்.
இந்த எடுத்துக்காட்டுகளைக் கேட்டவுடன் கோபத்தால் ஊராரின் கண்கள் சிவக்கின்றன. புறவினத்தாரின் நம்பிக்கையைத் தங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறிவிட்டாரே என அவரைத் தங்கள் ஊரிலிருந்தும் வாழ்விலிருந்தும் வெளியேற்றத் துடிக்கின்றனர்.
முதல் வாசகத்தில் (காண். 2 அர 5:1-15) நாமான் நலம் பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்.
சாரிபாத்துக் கைம்பெண் எலியாவின் கடவுளை உடனடியாக நம்புகிறார்.
நாமான் தன் மனைவியுடைய பணிப்பெண் சிறுமியின் சொல் கேட்டுப் புறப்படுகின்றார்.
தூரத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை தூரத்தில் உள்ள கடவுளையும் பக்கத்தில் கொண்டு வருகின்றது.
பக்கத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையின்மை பக்கத்தில் உள்ள கடவுளையும் தூரத்துக்குத் தள்ளிவிடுகிறது.
“நம்பிக்கை” என்பது நம் மனத்திலிருந்தால் மட்டுமே போதுமா? போதாது. நாம் மனத்தளவில் நம்புவதை நம் செய்கைகள் ஊருக்கு உரக்கச் சொல்வது அவசியம்.தங்களை மட்டுமே பெரிதாக நம்பிக்கொண்டிருந்த யூதச் சமூகத்திற்கு புறவினத்தாரான நாமான் மற்றும் சாரிபாத்து நகரக் கைம்பெண் பற்றி இயேசு பேசியது அவர்களை எரிச்சல் அடையச் செய்ததே மிச்சம்.
ReplyDeleteஎலியாவின் கடவுளை நம்பிய சாரிபாத் கைம்பெண்ணும்,தன் மனைவியின் பணிப்பெண் வழியே இறைவனின் குரலையேகேட்ட நாமானும் “இறைநம்பிக்கை” என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கென்று பட்டா போட்ட சொத்தல்ல…அது அனைவருக்கும் பொதுவானது என்பதை நமக்குச் சொல்கின்றனர்.உண்மைதான்! தூரத்தில் உள்ளவர்களின் நம்பிக்கை தூரத்தில் உள்ள கடவுளையும் பக்கத்தில் கொண்டு வருகிறது; பக்கத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையின்மை பக்கத்தில் உள்ள கடவுளையும் தூரத்துக்குத் தள்ளி விடுகிறது.நாம் சாய்ந்து கொண்டிருப்பது யார் பக்கம்? தூரத்தில் உள்ள நம்பிக்கையாளரா? இல்லை பக்கத்தில் உள்ள நம்பிக்கையற்றவரா? யோசிப்போம்! யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!