Tuesday, June 1, 2021

இரு புலம்பல்கள்

இன்றைய (2 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபித்து 3:1-11,16-17)

இரு புலம்பல்கள்

தன் மனைவியால் கடிந்துகொள்ளப்பட்ட தோபித்து முற்றத்தில் அமர்ந்தவாறே கடவுளை நோக்கிப் புலம்புகின்றார். ஏனெனில், மற்றவர்களின் பழிச்சொல்லை அவர் கேட்க வேண்டியிருக்கின்றது. இதற்கிடையே ஆசிரியர் நம்மை இன்னொரு வீட்டில் நடக்கும் நிகழ்வுக்கு எடுத்துச் செல்கின்றார். மேதியா நாட்டில் வாழ்ந்த இகுவேலின் மகள் சாரா தன் பணிப்பெண்ணின் பழிச்சொல் கேட்டு மாடிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள முயல்கின்றார். பின் மனத்தை மாற்றிக்கொண்டு கீழே இறங்கி வருகின்றார். அங்கே என்ன பிரச்சினை? சாராவுக்குத் திருமணம் நிகழும். ஆனால், அவள் தன் கணவருடன் கூடும்போது கணவன் இறந்து போவான். இப்படியே ஏழு கணவர்கள் இறந்து போகின்றனர். இது என்ன கணவர்களுக்கு வந்த சோதனை! இதைப் பார்க்கின்ற பணிப்பெண், 'நீ ஏழு கணவர்களைக் கொன்றவள். நீயும் அவர்களிடம் போ!' எனப் பழிக்கின்றார். 'நீ இறந்துபோ!' என்று நாம் ஒருவர் மற்றவரைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள் மிகவும் கொடுமையானவை. ஆனால், மற்றவர்கள் சொல்வதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்கின்றார் சாரா. ஏனெனில், பணிப்பெண் பேசுகிறார் என்றால் ஊருக்குள் பேசுகிறார்கள் என்று பொருள்.

தோபித்து முற்றத்தில் அமர்ந்து புலம்புகின்றார்.

சாரா மாடிக்குச் சென்று புலம்புகின்றார்.

இப்போது வாசகருக்கு இரு கேள்விகள் எழுகின்றன: 'தோபித்துக்கு பார்வை கிடைக்குமா?' 'சாராவுக்குத் திருமணம் நிகழுமா?'

தோபித்து மற்றும் சாரா ஆகியோரின் புலம்பல்கள் இறைவேண்டல்களாக மாறுகின்ற அந்த நொடியே, ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது வாசகருக்குப் புலப்படுகின்றது.

'தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இகுவேலின் மகள் சாராவை மணம் முடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும் அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார்' என்று ஆசிரியர் பதிவு செய்கின்றார்.

'இரபேல்' என்றால் 'கடவுள் நலம் தருகின்றார்' அல்லது 'கடவுளே நலம்' என்பது பொருள்.

தோபித்து வீட்டிற்குள் திரும்புகின்றார்.

சாரா மாடியிலிருந்து இறங்குகின்றாள்.

இருவருமே புதிய வாழ்க்கைக்குத் தயாராகின்றனர். தங்கள் இறைவேண்டல்கள் கேட்கப்பட்டதாக தங்கள் நுண்ணறிவால் அறிகின்றனர்.

நம் புலம்பல்களை இறைவேண்டல்களாக மாற்றும்போது கடவுள் நமக்கென ஒரு தூதரை அனுப்புகின்றார். அந்த தூதர் நம்மை நோக்கி வருகின்றார் எனில், நாமும் நம் முற்றத்திலிருந்தும் மாடியிலிருந்தும் வீட்டுக்குள் செல்வது அவசியம்.

புலம்பல் மனநிலையிலிருந்து நம்பிக்கை மனநிலைக்குக் கடந்து போக வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்ப்பு, வானதூதர், மற்றும் மறுவுலக வாழ்வு ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளாத சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வருகின்றனர்: 'ஒரு பெண்ணும் ஏழு கணவர்களும் கதையாடல்.' இந்தக் கதையாடல் தோபித்து நூலின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அங்கேயும் சாரா என்ற பெண்ணும் ஏழு கணவர்களும் இருக்கின்றனர். அல்லது உயிர்த்தல் பற்றிய நம்பிக்கையை கேலி செய்வதற்காக சதுசேயர்களே அக்கதையை உருவாக்கியிருக்கலாம்.

சதுசேயர்களின் கதை மூன்று நிலைகளில் உயிர்ப்பு மற்றும் மறுவாழ்வைக் கேள்விக்குட்படுத்துகின்றது: (அ) உயிர்ப்பில் நமக்கு உடல் இருந்தால் அந்த உடல் திருமணம் செய்துகொள்ளத் துடிக்குமா? அதாவது, இங்கிருப்பது போல அங்கும் நமக்கு உணர்வுகள் இருக்குமா? (ஆ) உயிர்த்த உடலை ஒருவர் மற்றவர் அடையாளம் கண்டுகொள்ள இயலுமா? (இ) நேரமும் இடமும் இங்கே இருக்குமா?

இயேசு மூன்று நிலைகளில் அவர்களுக்குச் சவால் விடுகின்றார்: (அ) அவர்கள் மறைநூலை அறியவில்லை – விப நூலில் (ஐநூல்களை மட்டுமே சதுசேயர்கள் ஏற்றுக்கொண்டனர் – கடவுள் தன்னை இருக்கிறவராக வெளிப்படுத்துகின்றார். அதாவது, கடவுளைப் பொருத்தவரையும் நேற்றும் நாளையும் கிடையாது. அவர் முன்னிலையில் எல்லாமே நிகழ்காலம்தான். (ஆ) கடவுளின் வல்லமையை அவர்கள் அறியவில்லை. (இ) வானதூதர்கள் போல இருப்பார்கள் - விருப்பங்கள் இன்றி இருப்பார்கள் எனப் புரிந்துகொள்வோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள், வாழ்வோரின் கடவுள்.

தோபித்தும் சாராவும் தங்கள் கடவுளை வாழ்வோரின் கடவுளாகக் கண்டனர். வாழ்வைத் தேர்ந்துகொண்டனர். அதே கடவுள்மேல் நம்பிக்கை கொள்கின்ற நாம் ஒவ்வொரு நொடியிலும் வாழ்வைத் தெரிந்துகொள்தல் நலம்.

இன்றைய நம் புலம்பல்கள் இறைவேண்டல்களாக மாறுவனவாக!


1 comment:

  1. தோபித்து- சாராவின் வாழ்க்கைப் பின்னனியில் நமக்குச் சொல்லப்படும் விஷயம்.... “நமது புலம்பல்கள் இறைவேண்டல்களாக மாறும்பொழுது கடவுள் நமக்கென ஒரு தூதரை அனுப்புகிறார்.அந்தத் தூதர் நம்மை நோக்கி வருகையில் நாமும் முற்றத்திலிருந்து இறங்கி வரவேண்டும்.
    நமது புலம்பல் நம்பிக்கையாக மாற வேண்டும்... வாழ்க்கைப்பாடம்.

    நற்செய்தி நமக்குச் சொல்லும் செய்தி இன்னும் உயர்வானது... “ நம் கடவுள் வாழ்வோரின் கடவுள்.” வாழ்வோரின் கடவுளைக் காண்பவர்கள் மட்டுமே நம் வாழ்வைத் தேர்ந்து தெளிந்து வாழமுடியும்.

    என் வாழ்விலும் நான் கேளாமலேயே அடிக்கடி இறைவன் “ ரஃபேல்” களை அனுப்புகிறார்.நான் முற்றத்திலிருந்து/ மாடியிலிருந்து இறங்குகிறேனா?

    “வாழ்வோரின் கடவுளை” நோக்கி நாம் அனுப்பும் புலம்பல்கள் இறைவேண்டல்களாக மாறட்டும்! நாமும் நமக்க்குக் கொடையாகக் கிடைத்த வாழ்வில் ஒரு சிலருக்கேனும் “ரஃபேல்” களாக செயல்படுவோம்! நாம் உணரும் முன்னரே நம் புலம்பல்கள் இறைவண்டல்களாக மாறும் என்ற ஆரூடம் சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete