Monday, June 28, 2021

திருத்தூதர்கள் பேதுரு-பவுல்

இன்றைய (29 ஜூன் 2021) திருநாள்

திருத்தூதர்கள் பேதுரு-பவுல்

உரோமைத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.

இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:

(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்

நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். 'ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!' என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. 'ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்' என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.

(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்

பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், 'உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.

(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்

தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, 'இயேசுவே இறைமகன்' என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.

புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின.

நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.


2 comments:

  1. திருஅவையின் இருபெரும் தூண்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் இவர்களின் நினைவைக் கொண்டாடும் திருநாள்.முன்னவர் “ ஆண்டவரே! உமக்குத்தான் எல்லாம் தெரியுமே!” என்ற சரணாகதி மனநிலையோடு இயேசுவின் பக்கம் இணைந்தாரெனில்,அடுத்தவர் “ வாழ்வது நானல்ல; என்னில் வாழ்வது கிறிஸ்துவே!” என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவில் கண்டவர்.இவர்கள் கடந்து வந்த பாதை ஒரு இருண்ட காலம் என்றபோதிலும், இயேசுவைக் கண்டவுடன் தங்கள் பாதையை மாற்றிக் கொண்டனர் என்பதும்,இயேசு பற்றிய நற்செய்தி நம் செவிகளுக்கு எட்டுவதற்கு இவர்களே காரணம் என்பதும் இன்றைய வாசகம் நமக்கு எடுத்துவைக்கும் விஷயங்கள்.

    வலுவற்ற இந்த இரு துருவங்களும் இயேசுவின் கரம்பட்டவுடன் வலுவான தூண்களாகின என்பது மட்டுமில்லை இன்றைய நற்செய்தி ….நம் கடந்த காலம் ஏற்று, நிகழ்காலம் வாழ்ந்து, நம் இறைநம்பிக்கை எனும் துடுப்பை இறுகப் பற்றிக்கொண்டால்
    துரும்பான நானும் தூணாவேன் என்பதும் கூடத்தான்!

    புனித பேதுரு, பவுல் வழியில் தந்தையும் திருஅவையின் ஒரு தூணாக மாற இறையருள் துணைநிற்கட்டும்! திருவிழா வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!

    ReplyDelete
  2. இயேசு விடுக்கும் சீடத்துவத்துக்கான அழைப்பு அனைவருக்கும் பொதுவானது.
    // அதை சொல்லுங்க சாமி..

    ReplyDelete