Wednesday, June 16, 2021

நீங்கள் மன்னீப்பர்களானால்

இன்றைய (17 ஜூன் 2021) நற்செய்தி (மத் 6:7-15)

நீங்கள் மன்னீப்பர்களானால்

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் இயேசு, 'நீங்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுங்கள்' என்று அவர்களுக்கு இறைவேண்டல் ஒன்றைக் கற்பிக்கின்றார். தொடர்ந்து, 'மற்ற மனிதர்கள் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்' என்று அறிவுறுத்துகின்றார்.

இரண்டாம் பிரிவை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'நீங்கள் மன்னித்தால் உங்கள் தந்தை உங்களை மன்னிப்பார்' என்று இயேசு சொல்கிறாரே! அப்படி என்றால் கடவுளின் மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? – என்று வகுப்பில் மாணவர் ஒருவர் கேட்டார்.

கடவுள் நம்மை நிபந்தனையற்ற நிலையில் மன்னிக்கின்றார் என்பது மறுக்க முடியாத ஒன்று. இளைய மகன் எடுத்துக்காட்டில் வருகின்ற தந்தை, தன் மகனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த நிகழ்வு மன்னிப்பு பற்றியது அல்ல என்றாலும், தந்தையின் பரிவு மகனுடைய பழைய வாழ்க்கையை அப்படியே மறந்துவிடுகிறது என்பதால், மன்னிப்பு என எடுத்துக்கொள்வோம். 'என்னை உங்கள் பணியாளனாக எடுத்துக்கொள்ளுங்கள்!' என இளைய மகன் நிபந்தனை விதித்தாலும் தந்தை அதைப் புறந்தள்ளி அவனைத் தழுவிக்கொள்கின்றார்.

இரண்டாவதாக, கடவுளின் மன்னிப்பை நாம் உணர வேண்டுமெனில், நாம் ஒருவர் மற்றவரை மன்னித்தல் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்தியத் திருஅவையிடம் மனம் திறக்கின்ற பவுல், தான் அந்தக் குழுமத்தால் ஒருவகையில் புறக்கணிக்கப்பட்டதையும், அவர்கள் புதிய நற்செய்தி ஒன்றை ஏற்றுக்கொண்டதையும் எண்ணி வருந்துகின்றார். ஆனால், அதற்காக அவர் அவர்களை வெறுக்கவில்லை.

நாம் அதிகமாக அறிந்த ஒன்றை அல்லது ஒருவரை மன்னித்தல் எளிதன்று என்பது என் வாழ்க்கை அனுபவம். அல்லது அதிகம் புரியும் ஒன்றை நாம் மன்னிக்க இயலாது.

இருந்தாலும் மன்னித்தல் நலம்.

'மறப்போம், மன்னிப்போம்' என்றும் சிலர் சொல்வர். ஆம், நம்மால் மன்னிக்க இயலாதபோது அந்த நபரையே மறந்துவிட்டால் மன்னித்தல் அங்கே எளிதாகிவிடுகிறது.

இந்தப் புரிதலும் சில நேரங்களில் நலம் பயக்கும்.


2 comments:

  1. “மன்னித்தல்”… இறைகுணம். மன்னிக்கத் தெரிந்த மனிதனும் இறைவனாகிறான். எத்தனை முறை நம் செவிகளில் விழுந்திடினும் “ இளைய மகன்” உவமையில் வரும் தந்தை மன்னித்தலுக்கு நல்லதொரு உதாரணமாக நிற்கிறார். கொரிந்து நகரத் திருச்சபையால் புறக்கணிக்கப்பட்ட போதிலும் பவுல் அவர்களை ஒருபோதும் வெறுக்கவில்லை என்கிறது விவிலியம்.

    நாம் ஒருவரை மன்னிக்க இயலாதபோது அந்த நபரையே மறந்து விட்டால் மன்னித்தல் எளிதாகிறது என்கிறார் தந்தை. எனக்கு அதில் உடன்பாடில்லை. நாம் மறக்க வேண்டியது அந்த நபரின் தீச்செயலையன்றி அந்த நபரையல்ல.

    என்னே ஒரு coincidence!
    “ஒருவர் செய்யும் குற்றங்களை மன்னிக்கவும்…. ஒருவரிடம் தெரியும் குறைகளை மறக்கவும் முடிந்தால் நம் உறவுகள் இன்னும் விரிவடையும்” இன்று நான் முகநூலில் வாசித்தது.

    “மனிதனும் இறைவனாக முடியும் அவனுக்கு மன்னிக்கும் மனமிருந்தால்”…. நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் தந்தைக்கு!!!

    ReplyDelete