Wednesday, June 2, 2021

அன்பே எழுந்திரு

இன்றைய (3 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபி 6,7,8)

அன்பே எழுந்திரு

'தோபித்து பார்வை பெறுவாரா?' 'சாராவுக்குத் திருமணம் நடக்குமா?' என்ற இரு முடிச்சுகள் தோபித்து கதையில் இருந்ததை நேற்று பார்த்தோம்.

தோபித்தின் மகன் தோபியா சாராவின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் இட, கதையின் இரண்டாம் முடிச்சு அவிழ்கிறது.

சாராவுக்குத் திருமணம் நடந்தாயிற்று.

ஆனால், அவர்கள் கூடி வாழ்வார்களா? என்ற அடுத்த கேள்வி எழுகிறது வாசகருக்கு. வாசகருக்குக் கேள்வி எழுகின்ற அதே வேளையில், தோபியாவும் சாராவும் தங்கள் படுக்கையிலிருந்து எழுகின்றனர்:

'அன்பே எழுந்திரு! நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்!' என்று தன் மனைவியை அழைக்கின்ற தோபியா, மிக அழகான ஓர் இறைவேண்டல் செய்கின்றார்.

'என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும். நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்!' - இப்படித்தான் நிறைவுபெறுகிறது தோபியாவின் மன்றாட்டு. தன் மனைவி அருகில் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கிலும் கூட, இளவல் தோபியா மிக அழகாக மன்றாடுகின்றார். தங்களின் இருத்தல் இறைவனின் இரக்கத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார். இதற்கு முன்னால் சாராவைத் தழுவியவர்கள் தங்கள் இச்சையால் தழுவினார்கள். ஆக, அவர்கள் மாண்டு போயினர். தோபியா, இறைவனின் இரக்கத்தால் தழுவுகின்றார். அவர் இறப்பதில்லை.

இந்த திருமண நிகழ்வு நடந்தேற உதவியாக இருப்பவர் வானதூதர் இரபேல். இவரை, 'அசரியா' என்று அழைக்கிறார் தோபியா. 'அசரியா' என்றால் 'இறைவனின் உதவி' அல்லது 'இறைவனின் உதவியாளர்' என்பது பொருள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர்கள் குழுவினர் இயேசுவைச் சோதிக்கின்றனர்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டு வந்தவர்களிடம், 'இறையன்பு, பிறரன்பு' என்னும் கட்டளைகளை எடுத்துச் சொல்கின்றார் இயேசு. இறையன்பையும் பிறரன்பையும் ஒரே தளத்தில் நிறுத்துகின்ற இயேசுவின் அருள்மொழி கேட்ட கேள்வியாளர், இன்னும் ஒரு படி மேலே போய், 'இறையன்பும் பிறரன்பும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது' என்று சொல்லி இடம் நகர்கின்றார். அவரின் இப்பதில்மொழியை இயேசு பாராட்டுகின்றார்.

முதல் வாசகத்தில், 'அன்பே எழுந்திரு!' எனத் தன் மனைவியை அழைக்கிறார் தோபியா. தன் மனைவியின்மேல் அவர் அன்புகொள்ளுமுன் இறைவனின்மேல் தனக்குள்ள அன்பைத் தன் இறைவேண்டல் வழியாக வெளிப்படுத்துகின்றார் அவர்.

இறைவனை அனைத்துக்கும் மேலாகக் பற்றிக்கொள்கின்ற அவர் இறைவனின் இரக்கத்தைப் பெற்றவர் ஆகின்றார்.

இன்றைய பதிலுரைப்பாடலும், திருமண அன்பிற்கான ஆசி ஆண்டவரிடமிருந்தே வருகிறது என எடுத்துரைக்கின்றது (காண். திபா 128).

2 comments:

  1. இன்றைய இளவல்கள் தங்கள் திருமண முதலிரவின் தொடக்கத்தில் இறைவனை நோக்கி எடுத்து வைத்த வேண்டுதலைப் பார்த்தால் என்ன நினைப்பார்களென நான் அடிக்கடி நினைப்பதுண்டு.” அன்பே! எழுந்திரு! நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்!”...” என் மீதும்,இவள் மீதும் இரக்கம் காட்டும்.நாங்கள் இருவரும் முதுமை அடையும் அவரை இணைபிரியாது வாழச்செய்யும்!” மனது பூரா கலக்கத்தில், இந்த கணவனாவது உயிர்பிழைப்பானா? எனும் பயத்தில் அருகில் நின்ற மனைவியோடு இறைவேண்டல் செய்த ஒரு கணவன்! இவர்களுக்கு உதவியாக ‘ அசரியா’ எனும் ‘ இரஃபேல்’. எங்கிருந்து வரும் இவர்களுக்கு இறப்பு?

    காதல் மனைவியே ஆனாலும் இறைவேண்டலுக்குப் பின்தான் எல்லாம்! இறையன்பே தலையாயதாகவும்....அதைத் தொக்கி நிற்கும் பிறரன்பை நம் அணிகலனாகவும் நினைத்து வாழ்பவர்களுக்கு இறைவன் தருவது அவரின் “ பேரிரக்கம்”. இவர்கள் வாழ்க்கையில் பார்ப்பதெல்லாம் “:உறவே” யன்றி “ முறிவு” அல்ல என்று அடித்துச் சொல்லும் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete