Friday, June 18, 2021

கவலைகளும் நினைவுகளும்

இன்றைய (19 ஜூன் 2021) நற்செய்தி (மத் 6:24-34)

கவலைகளும் நினைவுகளும்

'நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

யாருக்குப் பணிவிடை செய்வது? என்ற கேள்வியோடு தொடங்கும் இன்றைய நற்செய்திப் பகுதி, கவலைகளற்ற வாழ்வுக்கு நம்மை அழைக்கிறது.

எது நமக்குக் கவலை தருகிறதோ அதுவே நம் நினைவில் நிற்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் அணியும் ஆடை. அது நம் உடலோடு பொருந்தினால் அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை. அது பொருந்தாவிட்டால் அதைப் பற்றியே நாம் எண்ணுகிறோம். நம் கையில் உள்ள ஐந்து விரல்களில் ஒரு விரலில் அடிபட்டுவிட்டால் அந்த விரல் பற்றிய கவலையே நம் எண்ணத்தில் இருக்கின்றது. ஆக, கவலைகள்தாம் நம் நினைவுகளாக இருக்கின்றன. நாம் எதை அதிகம் நினைக்கின்றோமோ அது நமக்கு கவலை தருகின்றது என்று பொருள்.

செல்வமா? கடவுளா? என்ற கேள்வியைக் கேட்கின்ற இயேசு, தொடர்ந்து நம் பார்வையை வானத்துப் பறவைகளை நோக்கியும், வயல்வெளி மலர்களை நோக்கியும் இட்டுச்செல்கின்றார். 

கடவுளின் பராமரிப்பை சீடர்கள் உணர வேண்டும்.

இதுதான் ஏழையரின் உள்ளம். ஏழையரின் உள்ளம் என்பது அடுத்தவர்களைச் சார்ந்திருக்கின்ற உள்ளம். இன்று நாம் தற்சார்பு பற்றி அதிகம் பேசுகின்றோம். ஏனெனில், பிறரிடமிருந்து நாம் நம்மையே ஒதுக்கிக்கொள்ள நினைக்கின்றோம். 

முதல் வாசகத்தில், தன் உடலில் தைத்த ஒரு முள் பற்றிப் பேசுகின்றார் பவுல். ஆனால், அந்த வலியே இறைவன் செயலாற்றும் தளமாக மாறுகிறது பவுலுக்கு.

நம் வலுவின்மைகள் நமக்குக் கவலை தரலாம். ஆனால், அவை இறைவன் செயலாற்றும் தளங்கள்.

அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அதற்கு ஏற்புடையவற்றையும் நாடினால் கவலைகள் மறையும்.


1 comment:

  1. ‘உடலில் தைத்த முள்’ நம்மில் பலருக்குப் பலவிதமான கவலைகளைத் தருகிறது. ஆனால் அதுதரும் வலியை மட்டுமல்ல….கவலையையும் இறைவன் செயலாற்றும் தளமாக மாற்றலாமென உணர்த்துகிறார் பவுல்.நம் வலுவின்மையையும், கவலைகளையும் இறைவன் செயலாற்றும் தளங்களென நினைக்கும் பட்சத்தில் நம் கவலைகள் மறைந்து நம்மை அவருடைய ஆட்சியையும், அதற்கு ஏற்புடையவற்றையும் நோக்கிச்செல்லும் நம் மனம்.

    தினமும் நமக்கு வரும் சோர்வுகள்..வாட்டும் கவலைகள். இவற்றை கண்ணீர் தடமாக மாற்றாமல்,இறைவன் செயலாற்றும் தளங்களாக மாற்றக் கற்றுத்தரும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete