Friday, June 11, 2021

மரியாவின் மாசற்ற இதயம்

இன்றைய (12 ஜூன் 2021) திருநாள்

மரியாவின் மாசற்ற இதயம்

இயேசுவின் திருஇதயத் திருநாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது மரியாளின் மாசற்ற இதயம். இயேசு தன் அன்பை மனுக்குலத்திற்குக் காட்டியதை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியா இயேசுவையும் இறைத்தந்தையும் அன்பு செய்ததை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியாவின் இதயத்தின் வழியாக நம் அனைவருடைய இதயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இத்திருவிழாவின் நோக்கம்.

லூக்கா நற்செய்தி 2ஆவது பிரிவில், 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்' என இருமுறை வாசிக்கின்றோம். மேலும், மரியாவின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சிமியோன் இறைவாக்குரைக்கின்றார். 'இயேசுவின் சிலுவையின் கீழ் நின்ற மரியா தன் உள்ளத்தால் தன்னையே அவருடன் சிலுவையில் அறைந்துகொண்டார்' என மொழிகின்றார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைத் தன் உடலில் ஏந்தியதை விட, உள்ளத்தில் ஏந்தியதால்தான் வணக்கத்துக்குரியவர் ஆனார் எனத் தொடர்கிறார் அகுஸ்தினார். 

மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவாக மட்டுமே திருச்சபை கொண்டாடுகிறது. சில இடங்களில் இதற்கு விழா அல்லது பெருவிழாவும் எடுக்கப்படுகிறது.

மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம்.

வானதூதரின் வார்த்தை கேட்டு, 'இது எத்தகையதோ?' என்று வியப்பில் கலங்குகிறது இதயம்.

'இது எங்ஙனம் ஆகும்?' என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம்.

'எலிசபெத்துக்கு குழந்தையா?' என்று துள்ளிக் குதித்து உதவ ஓடுகிறது இதயம்.

'சத்திரத்தில் இடமில்லையா?' - பயம் கொள்கிறது இதயம்.

'வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?' - வியப்பு கொள்கிறது இதயம்.

'பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!' - ஆச்சர்யம் கொள்கிறது இதயம்.

'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?' - மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம்.

'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!' - ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம்.

'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!' - இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம்.

'இதோ! உம் மகன்!' - மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம்.

'மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?' - மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.

இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.

காயம்படுவதற்கும், குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.

1 comment:

  1. “ மரியாவின் மாசற்ற இருதயம்” மரியாவின் இதயத்தின் வழியாக நம் அனைவருடைய இதயங்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென்பதே இன்றையத் திருவிழாவின் நோக்கம் என உணர்த்தப்படுகிறோம்.” இதோ ஆண்டவரின் அடிமை” எனத்தன்னையே இறைவனுக்குக் கையளித்த அந்த “ சின்ன” இதயத்துக்குள், அவள் பல்வேறு நிகழ்வுகளில் உணர்ந்த பல்வேறு உணர்ச்சிப் பிளம்புகளைத் தந்தை வார்த்தைகளாக வடித்திருக்கும் விதம் புருவங்களைத் தூக்க வைக்கிறது.தன் மகனுக்காகவே துடித்த அந்த இதயம் களிப்புற்ற நேரங்களைவிட, களைத்துப்போன நேரங்களே அதிகம் என்று எடுத்தியம்புகிறது இன்றையப்பதிவு.

    “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப்பாயும்!” தன் உள்ளம் வாளால் காயம்படத் தன்னைக் கையளித்த அன்னை “ காயம்படுவதற்கும்,குணமாக்குவதற்கும் நமக்கு இதயங்கள் வேண்டுமென” நமக்கு எடுத்துச்சொல்கிறார்.

    நமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவ வேண்டாம்....ஆனால் எனக்கடுத்தவரின் இதயம் வலியால்..... வேதனையால் துடிக்கையில் அதை உணரவும், அவரின் காயம் ஆற்றவும் தயாராகவிருக்கும் “ஒரு இதயத்தை தா! அம்மா!” என நம் அன்னையிடம் கேட்கலாம்.
    மறந்துபோன...மறத்துப்போன உணர்வுகளைச் சுண்டிவிடும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete