Thursday, June 17, 2021

செல்வமும் உள்ளமும்

இன்றைய (18 ஜூன் 2021) நற்செய்தி (மத் 6:19-23)

செல்வமும் உள்ளமும்

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மிடம் இரு கேள்விகளை முன்வைக்கின்றது: 'உன் செல்வம் எங்கே?' 'உன் இதயம் எங்கே?' என்ற கேள்விக்கான விடையே, செல்வம் எங்கே இருக்கிறது என்பதற்கான விடை. ஏனெனில், 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' என்கிறார் இயேசு.

இரண்டாவது கேள்வி, 'உன் பார்வை எங்கே?' – 'உன் கண்கள் எங்கே?' என்பதற்கான விடையே இக்கேள்விக்கான விடை. 'கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்' என்கிறார் இயேசு.

இவ்விரண்டு கேள்விகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருந்தாலும், இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையவை. எப்படி?

தாவீது அரசர் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் உறவு கொண்ட நிகழ்வை எடுத்துக்கொள்வோம். அவருடைய பார்வை முதலில் அந்த இளவல்மேல் இருந்தது. ஆனால், அந்தப் பார்வையை ஆசை மறைத்துவிட்டதால், அவருடைய உடல் ஒளியை இழந்துவிட்டது. இளவல்தான் அவருடைய செல்வமாகத் தெரிந்தார். ஏனெனில், தாவீது அரசரின் உள்ளம் அந்த இளவல்மேல் இருந்தது. ஆக, நான் எதைப் பார்க்கிறேனோ அது என் செல்வமாகிறது. அந்தச் செல்வத்தின்மேல் என் உள்ளம் பதிந்துவிடுகிறது.

யோசுவா நூலில் (அதி. 16) ஒரு நிகழ்வு உண்டு. எரிக்கோ நகருக்கு எதிராக மக்கள் போரிடுகின்றனர். அங்கிருக்கும் அனைத்தையும் அழித்துவிடுமாறு ஆண்டவராகிய கடவுள் அறிவுறுத்துகின்றார். ஆனால், ஆக்கான் என்பவரின் கண்கள் அங்கிருந்த பொன் மற்றும் வெள்ளிமேல் படிகிறது. அவற்றை அவர் எடுத்து மறைத்துவைத்துக் கொள்கின்றார். அவருடைய எண்ணமெல்லாம் மறைத்து வைக்கப்பட்ட பொன் மேல் இருக்கின்றது. விளைவு, ஏய் நகருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோல்வியடைகின்றனர்.

இரு சவால்கள்:

ஒன்று, நம் கண்கள் நலமானதாக இருக்க வேண்டும். அதாவது, பொறாமை, பகைமை, ஆசை, கோபம் கொண்டதாக இருத்தல் கூடாது.

இரண்டு, நம் செல்வம் இறைவனாக வேண்டும். அவரில் நம் இதயம் இருக்க வேண்டும்.


1 comment:

  1. “உன் பார்வை எங்கேயோ அங்கேயே உன் கண்கள்!; உன் செல்வம் எங்கேயோ அங்கேயே உன் உள்ளம்!” இந்த வரிகள் நமக்கு உணர்த்துவது…. நம் கண்கள் பொறாமை, பகைமை, ஆசை , கோபமற்று நலமானதாக இருக்கிறது எனில் அதனால் நாம் புரிந்து கொள்வது நம் செல்வம் இறைவனாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல…நம் இதயம் அவரில் இருக்கிறது என்பதும் கூட., ஆம்! தந்தையின் ஆங்கில எழுத்துக்கள் சொல்வது போல் நம் உடலின் அனைத்துப் பாகங்களுமே ஒரே வட்டத்திற்குள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. அந்த வட்டத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஏற்படும் நல்லதோ..தீயதோ முழு வட்டத்தையுமே பாதிக்கும்.

    ஆகவே நம் உடலின் எந்த பகுதியுமே அணையவிடாமல்…என்றென்றும் ஒளிர்ந்து நிற்க அவரில் நம் “ அனைத்தையும்” ஒப்படைக்க வேண்டும். என்றென்றும் தோல்வி நமக்கில்லை. பழைய இரசத்தை புதுக்கிண்ணத்தில் தந்தை அழகாக ஊற்றித் தந்துள்ளார். நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete