கண்களை மூடி
கடவுளின் ரேகைகள் மனித முகங்கள் எங்கும் பதிந்து கிடக்கின்றன. அந்த முகங்களைப் பார்க்கும்போதெல்லாம், கண்ணுக்குப் புலப்படாத ஒன்றையும் தாண்டிப் பார்த்தால் எத்துணை நலம்!
'வண்டியில் மாம்பழம் விற்பவர்களே! இன்று மாலைப் பொழுதுக்குள் உங்களுக்கு எல்லாம் விற்றுவிடும்!'
'அழுகின்ற குழந்தைகளைக் கைகளில் ஏந்துபவர்களே! இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்கள் குழந்தை சிரிக்கும்!'
'உறவுகளை இழந்து நிற்பவர்களே! உங்கள் உறவுகள் மீண்டும் வரும்!'
'மருந்துக் கடைகளில் ஏக்கமான முகத்துடன் நிற்பவர்களே! உங்கள் நோய் விரைவில் குணமாகும்!'
'வழியில் இரந்து உண்பவர்களே! உங்களுக்கு இரவு உணவு கிடைக்கும்!'
'முதுமையின் தனிமையில் யாரும் இல்லாமல், பால்கணியில் அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களே! நீங்கள் ஆறுதல் பெறுவீர்கள்!'
இயேசுவின் மலைப்பொழிவுகள் ஏறக்குறைய இதே தொனியில்தான் இருக்கின்றன. தன்னைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றார் இயேசு. ஏழையர், துயருறுவோர், கனிவுடையோர், தூய்மையான உள்ளத்தோர், இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறத்தப்படுவோர், மக்களால் இகழ்ந்து பேசப்படுவோர் என எண்ணற்ற நபர்கள் அவரைச் சுற்றி இருக்கின்றனர். கண்களால் அவர்களைப் பார்க்கும் இயேசு, கண்களை மூடிக்கொண்டு அவர்களின் பேறுபெற்ற நிலையைக் காண்கின்றார்.
கண்களை மூடும் எவரும் பேறுபெற்ற நிலையைக் கண்டுகொள்வார்.
ஏனெனில், கண்களை மூடும்போது நம் ஆன்மாவின் கண்கள் திறக்கின்றன. ஆழ்ந்த மறைபொருள்கள் அங்கே வெளிப்படுகின்றன.
இயேசுவின் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை இங்கேயே இப்போதே நிகழக்கூடியவை.
எடுத்துக்காட்டாக, அமைதியை ஏற்படுத்துவோர். இவர்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துபவர்கள் அல்லர். மாறாக, தங்கள் அன்றாட உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, மன்னித்து, ஆறுதல் சொல்லி வாழ்பவர்கள். இவர்கள் பகைமை பாராட்டுவதில்லை. வஞ்சகம் நினைப்பதில்லை. வன்மம் வளர்ப்பதில்லை. காத்திருந்து தாக்குவதில்லை. மாறாக, உடனுக்குடன் அமைதியை ஏற்படுத்த விழைபவர்கள். இவர்கள் கடவுளின் மக்கள். ஏனெனில், தங்களைப் போல மற்றவர்களைப் பார்க்கிறார்கள் இவர்கள். தங்களில் உள்ள கடவுளை மற்றவர்களில் காண்கின்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். வருகின்ற நாள்களில் நாம் இதிலிருந்தே வாசிக்கவிருக்கின்றோம். 'கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்க முடிகிறது' எனச் சொல்கிறார் பவுல். அதாவது, தன் இன்னல் கண்டு வருந்தாமல், மற்றவர்களின் இன்னல்களைப் புரிந்துகொள்ள இது தனக்கு வாய்ப்பளிக்கிறது என்கிறார் பவுல். இத்திருமடல் மிகவும் சோகமானதாகவும், அதே வேளையில் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது. பவுல் தன்னிலை விளக்கக் கடிதமாகவே இதை எழுதுகின்றார்.
கண்களை மூடிக் காண முடிந்தது பவுலால். ஆகையால்தான், இருத்தலில் இல்லாத ஒன்றைக் கண்டு மகிழ்ந்தார்.
நம் கண்களுக்கு எதிரில் உள்ளவை கரடுமுரடாக இருக்கும்போது, சற்றே கண்களை மூடினால் பேறுபெற்ற நிலை தெரியும்.
“ முதுமையின் தனிமையில் யாரும் இல்லாமல்,பால்கனியில் அமர்ந்து சாலையைப்பார்த்துக் கொண்டிருப்பவர்களே! நீங்கள் ஆறுதல் பெறுவீர்கள்.”... இறைவன் என்னைப்பார்த்துக் கூறுவது போல் தோன்றுகிறது.கண்களை மூடிக்கொண்டு என் பேறுபெற்ற நிலையையும் இயேசு காண்பார் என்று நம்புகிறேன்.
ReplyDeleteபேறுபெற்றோரின் இலக்கணம் கூறுகிறார் தந்தை.”அன்றாட உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, மன்னித்து, ஆறுதல் சொல்லி வாழ்பவர்கள்.பகைமை,வஞ்சகம்,வன்மம் இவர்கள் அகராதியில் இல்லை.இப்பேர்ப்பட்ட மக்களுக்கே அவர்களின் இன்னல் அனைத்திலும் ஆறுதல் அளிக்கிறார் கடவுள்” என்று கூறுகிறார் பவுல்.
என் கண்களுக்கு எதிரில் உள்ளவை கரடு முரடாகத் தெரியும்போது, சற்றே என் கண்களை மூடவும், என் பேறுபெற்ற நிலையை உணரவும் அழைப்பு விடுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!
ஆமென்!
ReplyDelete