Thursday, June 3, 2021

என் கண்ணின் ஒளியே

இன்றைய (4 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபி 11:5-17)

என் கண்ணின் ஒளியே

தோபித்து நூலின் கதையின் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிட்டது. சாராவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. வானதூதர் இரபேல் அலகையைக் கட்டிப்போட்டுவிடுகின்றார். தோபியா உயிர் பிழைக்கின்றார். அந்த வீட்டில் விருந்து அரங்கேறுகிறது. விருந்தின் களிப்பு முடிந்தவுடன் தந்தையை நினைவுகூர்கின்றார் தோபியா. உடனடியாகத் தந்தையின் இல்லம் திரும்ப ஏற்பாடுகள் நடக்கின்றன. நிறையப் பரிசுப் பொருள்கள் மற்றும் கடன் தொகையுடன் இல்லம் திரும்புகிறார் தோபியா. சாராவும் பணிப்பெண்களும் ஆடு, மாடுகளும் மெதுவாக வந்து சேர்கின்றன.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் இரபேலின் வார்த்தைகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றார் தோபியா. தன் தந்தையின் கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்க்க, அவர் பார்வை பெறுகின்றார். மீனுக்கும் கண்ணுக்கும் தொடர்பு உண்டு. கண் பார்வை சிறக்க மீன் எண்ணெய் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கண் பார்வை கிடைத்தவுடன், 'என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்!' என உள்ளம் மகிழ்கின்றார் தோபித்து. திருமணம் நிகழ்ந்த செய்தி கேட்டு உடனடியாக நகரின் வாயில் நோக்கிச் செல்கின்றார். அவர் தனியே செல்வதைக் காண்கின்ற ஊரார் வியக்கின்றனர்.

'ஆண்டவர் தன்மேல் இரக்கம் காட்டியுள்ளார்' என அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அறிக்கையிடுகின்றார் தோபித்து.

இதுதான் தோபித்தின் நம்பிக்கைப் பார்வை.

தன் வாழ்வில் நடக்கின்ற அனைத்திலும் கடவுளின் கரத்தைப் பார்க்கின்றார். இப்படிப் பார்ப்பதற்கு அசாத்தியத் துணிவும் நம்பிக்கையும் வேண்டும். நம் மனித உள்ளம் இயல்பாக, நம் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தன்னால்தான் இயன்றது என அறிவித்துக்கொள்ள முயற்சி செய்கின்றது. 'எல்லாம் என் கையால்!' என்ற எண்ணம் தான் பல நேரங்களில் நம் எண்ணமாக இருக்கிறது.

நம்பிக்கைப் பார்வை நமக்கு எளிதாக வருவதில்லை.

தாவீது அரசரின் வாழ்க்கையில் இதைப் பார்க்கின்றோம். தாவீதின் நம்பிக்கைப் பயணத்தை, 'பத்சேபாவுக்கு முன்' 'பத்சேபாவுக்குப் பின்' என்று பிரிக்கலாம். பத்சேபா நிகழ்வுக்கு முன் வரை, அனைத்தும் தன் கையால், அனைத்தும் தனக்கு என்று நினைக்கின்றார் தாவீது. தானே முடிவெடுக்கின்றார். தானே செயல்படுகின்றார். தானே உரியாவைக் கொல்கின்றார். ஆனால், ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தை அனுபவித்த அந்த நொடி முதல் அவருடைய வாழ்க்கை மாறுகிறது. நிறைய சோக நிகழ்வுகள் நடக்கின்றன. சொந்த மகனே அவரைக் கொல்லத் தேடுகின்றான். தன் சொந்த நாட்டிலேயே நாடோடியாக, பித்துப் பிடித்தவராகச் சுற்றித் திரிகின்றார், நிறைய பாலியல் பிறழ்வுகளும் வன்முறை நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. சவுலின் வீட்டார் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர். ஆனாலும், அவர் அனைத்தையும் இறைவனின் செயல் எனப் பார்க்கின்றார்.

எடுத்துக்காட்டாக, சவுலின் உறவினரான சிமயி, தாவீதைப் பழித்துரைக்கும்போது, 'அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில், ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்' என்கிறார்.

தோபித்து தன் மருமகளையும் கண்டு இல்லத்திற்குள் வரவேற்கின்றார். 'நலம், பேறு, மகிழ்ச்சி' ஆகிய அனைத்தும் உன்னோடு வருக! என வரவேற்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தாவீதுக்கும் மெசியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசப்படுகிறது.

தாவீது ஒரே நேரத்தில் மெசியாவின் தந்தையாகவும், மெசியாவின் பணியாளராகவும் இருக்கின்றார்.

இறைவனின் கரத்தின் செயலை நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் கண்டு, அவருடைய இரக்கத்தைப் போற்றவது நலம்.

ஒவ்வொரு நாள் துயில் எழும்போதும் நமக்கு புதியதொரு நாள் கிடைக்கின்றது. அலெக்சாந்தர் அரசரின் பெரும்படை கூட ஒரு நாளுக்கு ஈடாகாது. அந்த நாளில் இறைவனின் இரக்கத்தை காணுதலும், அதே இரக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதும் இன்றைய நம் உறுதிப்பாடாக இருக்கலாம்.


1 comment:

  1. மனத்தைக் கட்டிப்போடும் ஒரு பதிவு.முன்பகுதியில் திருமணம் மற்றும் பிரிந்தவர் சேரும் மகிழ்ச்சியலைகள் பற்றி வாசிக்கும் நாம் பின் பகுதியில் சோகத்தையும் சேர்த்தே பார்க்கிறோம்.தோபித்தின் “ நம்பிக்கைப் பார்வைக்கு” மாறாக இறுமாப்பு கலந்த தாவீதின் பார்வையைப் பார்க்கிறோம்.நம்மைப் சந்திப்பவர்களும் சரி...நாம் சந்திப்பவர்களும் சரி....” நலம்,பேறு,மகிழ்ச்சி” போன்ற வார்த்தைகளை மட்டுமே கேட்டால் எத்துணை நலம்! விழுவதும்....எழுவதும் வாழ்வின் எதார்த்தங்கள் என்று நமக்கு தாவீது அரசரும்,மகா அலெக்சாந்தரும் கற்றுத் தந்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் இறைவனின் இரக்கத்தைக் காணுதலும்...அதே இரக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டுதலும் நம் உறுதிப்பாடாக இருக்க வேண்டுமென கோரும் தந்தையின் உள்ளம் குளிர்விப்போம். தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete