Thursday, June 24, 2021

உமது நோய் நீங்குக!

இன்றைய (25 ஜூன் 2021) நற்செய்தி (மத் 8:1-4)

உமது நோய் நீங்குக!

இயேசுவிடம் நெருங்கி வருகின்ற தொழுநோய் பிடித்தவருக்கு இயேசுவின் ஆற்றல் தெரியும். இருந்தாலும் அவருடைய விருப்பம் பற்றிய தயக்கம் கொள்கின்றார். 'நீர் விரும்பினால் உம் நோய் நீங்குக!' என்கிறார் அவர். இயேசு தன் விருப்பத்தைத் தன் சொல்லாலும் செயலாலும் காட்டுகின்றார். இறைவனை நாடி வருகின்ற நம் வாழ்விலும் சில நேரங்களில் அவருடைய விருப்பம் பற்றிய தயக்கம் இருக்கிறது.

நம் அனைவருடைய வாழ்விலும் தூய்மை பெற வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவருடைய கைகள் நம்மேல் பட நாம் தூய்மை அடைகின்றோம். கடவுளின் வல்ல செயல்கள் பற்றிய பதிவுகளை வாசிக்கும்போதெல்லாம், இறைவனின் ஆற்றலுக்கு நாம் தயாராக இருக்கும்போது அவர் செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.

இயேசுவின் இதய அதிர்வுகளை நாம் இங்கே அறிந்துகொள்ள முடிகிறது. பலர்முன் செய்துகாட்டப்பட்டு, பலரைத் தன்னிடம் ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வல்ல செயலை, இயேசு யாரும் இல்லாத ஒரு நிலையில் தனி நபரிடம் செய்கின்றார். மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர் இறைவனின் தனிக்கவனம் பெறுகின்றார்.

அந்நியப்பட்டுக் கிடந்த நபரை மீண்டும் அவருடைய இல்லத்தின், சமூகத்தின் உறுப்பினர் ஆக்குகின்றார் இயேசு.

தன் வாழ்வில் மாற்றம் வேண்டும் என நினைத்தார் தொழுநோயாளர். நினைத்த அவர் அதை வெறும் எண்ணமாக வைத்துக்கொள்ளாமல் செயலில் இறங்குகின்றார். தன் தயக்கத்தையே இறைவனின் இயங்குதளமாக மாற்றுகின்றார்.

நம் வாழ்வில் நாம் தயக்கத்தினாலும் பயத்தினாலும் முற்சார்பு எண்ணத்தினாலும் நம்மையே அடைத்துக்கொண்டு வாழத் தவறிய பொழுதுகள் எத்தனை? எண்ணங்கள் செயல்களாக மாறவில்லை என்றால் அவை வெறும் எண்ணங்களாகவே மடிந்துவிடும்!

1 comment:

  1. கடவுளின் வல்லமை நம்மில் வெளிப்பட, அவரின் ஆற்றலுக்கு நாம் தயாராக இருப்பது அவசியம் என்கிறார் தந்தை! ஆனால் என்னதான் நாம் தயார் நிலையிலிருப்பினும் சில சமயங்களில் இயேசு ஜெத்செமெனித் தோட்டத்தில் உதிர்த்த வார்த்தைகளும் கூடவே நம்மில் எட்டிப்பார்க்கின்றனவே. அனைத்தையும் படைத்த ஆண்டவனே “ தந்தையே! உமக்குச் “சித்தமானால்” இப்பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது” எனும் போது நானும் நீங்களும் எம்மாத்திரம்? நினைத்த காரியம் கைகூட வேண்டுமெனும் ஆசையோடு கூட, நான் நினைப்பத/ விரும்புவது சரிதானா எனும் எண்ணமும் கூடவே எழுகிறதே!

    இது ஒருபுறம் இருப்பினும்,தன் மனத்தில் இருந்த ஏக்கத்தை வெறும் எண்ணமாக வைத்துக்கொள்ளாமல் ஒருவர் செயலில் இறங்குகையில் அந்த தயக்கத்தையே இயங்குதளமாக மாற்றுகிறார் இறைவன். ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை! நம் வாழ்வின் எண்ணங்களும் செயலாக மாற இன்றையத் தொழு நோயாளி நமக்குத் துணைவருவாராக!

    எண்ணமா? செயலா? எதற்கு வல்லமை அதிகம்? ஒரு பட்டிமன்றத்தில் வைக்கப்பட வேண்டிய தலைப்பு. “இப்படியும் சிந்திக்கலாம்” என்று சிந்தனையின் பல கோணங்களில் ஒன்றை சத்தமாக ஒலிக்கச் செய்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete