Sunday, June 20, 2021

குறை சொல்வதும் களைவதும்

இன்றைய (21 ஜூன் 2021) நற்செய்தி (மத் 7:1-5)

குறை சொல்வதும் களைவதும்

'நம் தவறுகளுக்கு நாம் வழக்கறிஞர்களாகவும், மற்றவர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாகவும் இருக்கிறோம்' என்பதே பல நேரங்களில் நம் வாழ்வியல் எதார்த்தமாக உள்ளது. தவறு என்பது இன்று தனிநபர் சார்ந்தது என்றாகிவிட்டது. இது ஓர் அறநெறிப் பிறழ்வாகவும் மாறிவிட்டது. ஒருவர் கண்ணுக்குத் தவறு எனத் தெரிவது மற்றவரின் கண்ணுக்குச் சரி எனத் தெரிகிறது. நாம் அறியாத குறைகளை நமக்குச் சுட்டிக்காட்டுபவர் நம் உள்ளத்திற்கு அருகில் இருப்பவரே. ஏனெனில், என் முதுகை நானே பார்க்க முடியாது. அதைப் பார்க்க அடுத்தவரின் துணை தேவைப்படுகிறது. நான் அடுத்தவரின் முதுகைப் பார்த்து அவருடைய குறையைச் சுட்டிக்காட்டுமுன், எனக்கும் ஒரு முதுகு இருக்கிறது என்பதையும், அதில் குறை இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்தல் அவசியம். மேலும், நான் அடுத்தவரின் குறையைச் சுட்டிக்காட்டுமுன், சற்றே யோசித்து, அதே அளவை எனக்கும் பயன்படும் என உணர்தல் வேண்டும்.

அடுத்தவரின் குறைகளைச் சுட்டிக்காட்டவே கூடாதா? பெற்றோர் குழந்தைகளைக் கடிந்துகொள்ளக் கூடாதா? ஆசிரியர்கள் மாணவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டக் கூடாதா? குறைகள் சுட்டுதல் அவசியம். நிறைகளையும் கண்டு குறைகளையும் கண்டால் நலம். அடுத்தவரின் குறைகள் அவரின் முத்திரைகளாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறுவதற்குக் காரணம் நாம் இடும் தீர்ப்பே. 'விவாகரத்து பெற்றவர்,' 'பெண்,' 'கொரோனா நோயாளர்,' 'ஆண்,' 'முதியவர்,' 'குழந்தை,' 'நெறி கெட்டவர்,' 'பணமோசடிக்காரர்,' 'ஓரினச் சேர்க்கையாளர்,' 'திருநங்கை,' 'உடல் ஊனமுற்றவர்' என நாம் அடுத்தவரைப் பார்த்து உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு தீர்ப்பே, ஒரு முத்திரையே.

முத்திரைகள் முகத்திரைகளாக மாறிவிட்டால் அடுத்தவரின் முகத்தைக் காண இயலாமற்போய்விடும். தன் இல்லம் வந்த இளைய மகனுக்கு எந்த முத்திரையும் குத்தவில்லை தந்தை. நிறைய இரக்கமும் நிறைய மௌனமும் இருந்தால் இது நமக்கும் சாத்தியம்.


2 comments:

  1. வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ வழி சொல்லும் ஒரு அறிவுரை.” மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற அர்த்தம் செறிந்த ஒரு பழமொழி முந்தைய நாட்களில் பழக்கத்தில் இருந்தது. இப்பொழுது இருக்கிறதா..தெரியவில்லை.ஆனால் அதன் அர்த்தம் ஒன்றேதான்.எனக்கு முன் உள்ளவரின் முதுகில் ஏதேனும் குறை என் கண்களுக்குத் தெரிந்தால் அதைச் சுட்டிக்காட்டுமுன் என் பின்னே எனக்கும் ஒரு முதுகு உண்டு; அதில் குறைகளும் உண்டு என்ற நினைப்பு வருதல் அவசியம்.சுட்டிக்காட்டியே ஆகவேண்டும் எனும் நிலை வரின் அதே அளவை எனக்கும் தேவை என்பதை உறுதி செய்ய வேண்டும். தேவையான அறிவுரை.

    குறைகளைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் நிறைகளும் நம் கண்களை நிறைத்து நிற்க வேண்டும்; அதை வாயார வழங்கவும் வேண்டும்.அதேசமயம். ஒருவர் செய்யும் செயல்களை வைத்தே அவர்களுக்குப் பெயர்வைப்பதும்…அவர்களின் ஜாதி….,இனம்…,செய்யும் வேலை…..,செய்யும் தவறுகள்……உடல் ஊனங்கள் இவற்றை அவர்கள் பெயரோடு இணைப்பதும் நாம் அவர்களைக் குறித்து வைக்கும் ஒரு தீர்ப்பே என்கிறார் தந்தை.நாமும் இதுபோன்ற விஷயங்கள் நம்மைச்சுற்றி நடப்பதைக் கைகளைக் கட்டிக்கொண்டுதான் வேடிக்கை பார்க்கிறோம்.ஒருவரின் முகத்தையே காணாமல் போகச்செய்யக் கூடிய முத்திரைகளைத் தொலைப்போம்.நம் தந்தை இரக்கம் உடையவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவராய் இருப்போம்.இம்மாதிரி நேரங்களில் ‘ மௌனம்’ காப்பது அழகு!

    நம் பார்வையில் கருணை இருப்பின் செய்யும் செயல்களும் காருண்யச்செயல்களே! என்று உணரவைக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. முத்திரைகள் முகத்திரைகளாக மாறிவிட்டால் அடுத்தவரின் முகத்தைக் காண இயலாமற்போய்விடும். தன் இல்லம் வந்த இளைய மகனுக்கு எந்த முத்திரையும் குத்தவில்லை தந்தை. நிறைய இரக்கமும் நிறைய மௌனமும் இருந்தால் இது நமக்கும் சாத்தியம்.

    👌🤝👍

    ReplyDelete