Monday, June 7, 2021

உங்கள் ஒளி

இன்றைய (8 ஜூன் 2021) நற்செய்தி (மத் 5:13-16)

உங்கள் ஒளி

இயேசு தன்னுடைய மலைப்பொழிவின் தொடக்கத்தில், 'பேறுபெற்றவர்கள்' பகுதியைத் தொடர்ந்து, தன் சீடர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகின்றார்: 'உப்பு,' 'ஒளி,' 'மலைமேல் நகரம்.'

இம்மூன்று உருவகங்களும் தரும் பொருள் ஒன்றுதான். சீடர்களுடைய இயல்பு அப்படியே அவர்களுடைய செயல்களில் வெளிப்படுகிறது. அதை அவர்கள் மறைத்து வைக்க முடியாது. ஆனால், இயல்பு குறைந்துவிட்டால் இயக்கம் குறைந்துவிடும்.

ஒளி குறைந்துவிட்டால் இருள் உருவாகிவிடும்.

உவர்ப்பு குறைந்துவிட்டால் உப்பு சாரம் இழந்துவிடும்.

மலைமேல் உள்ள நகரத்திற்கு எதிராக இன்னொரு நகரம் உருவாகிவிட்டால் அது மறைந்துவிடும்.

ஆக, சீடர்கள் தங்களுடைய அகம் மற்றும் புறக்காரணிகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அப்படி எச்சரிக்கையாக இருந்த பின்னர், அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று: 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!'

அந்த ஒளிர்தல் நற்செயல்கள் வழியாக வெளிப்படுகிறது. அதைக் காணுகின்ற அனைவரும் ஒளியின் ஊற்றாகிய வானகத் தந்தையைப் புகழ்வார்கள். ஒருவர் ஒளிர மறுக்கும்போது, நற்செயல்கள் செய்ய மறுக்கிறார். அப்படி மறுத்தல் வானகத்தந்தையை மறுதலிப்பதாகும்.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், கடிதத்தின் பொருளை மிக அழகாகத் தொடங்குகின்றார்: 'நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும், 'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பது போல நான் சொல்வதும் உண்மையே.'

நான் அண்மையில் வாசித்த நூல் ஒன்றின் ஆசிரியர், தன் வாழ்க்கையைப் பற்றி எழுதுகின்றார்: 'வாழ்வின் இளமைக் காலத்தில் நாம் அகல உழுகின்றோம். நிறையப் பேரிடம் உறவாட வேண்டும். நிறையப் பயணம் செய்ய வேண்டும். நிறைய நாடுகளுக்குச் செல்ல வேண்டும். இப்படியாக நாம் அனைத்தையும் பற்றிக்கொள்ள நினைக்கின்றோம். ஆனால், வாழ்வின் மகிழ்ச்சி அகல உழுவதில் அல்ல. மாறாக, ஆழமாக உழுவதில்தான் உள்ளது. நிறையப் பேரிடம் உறவாடுவது விடுத்து ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது. நிறையப் பயணம் விடுத்து ஒரே இடத்தில் தங்குவது. நிறைய நாடுகள் விடுத்து ஒரே கனவு அல்லது பணியைப் பற்றிக்கொள்வது. இப்படிச் செய்வது கடினம். ஏனெனில், ஒன்றை நான் பற்றிக்கொள்ளும்போது இன்னொன்றை நான் விட வேண்டும். ஒரே நேரத்தில் நான் பலவற்றுக்கு, 'ஆம்' என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் நான் ஒன்றுக்கு, 'ஆம்' என்றும், 'இல்லை' என்றும் சொல்லும் நிலையில் இருப்பேன். வாகனத்தில் செல்கிறேன். வலது புறத்திற்கு 'ஆம்' என்றால், இடது புறத்திற்கு 'இல்லை' என்று சொல்ல வேண்டும். ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்ல முற்பட்டால் நான் அதே இடத்தில்தான் நின்றுகொண்டிருப்பேன்.'

பவுல்மீது கொரிந்து நகர மக்கள் வைத்த குற்றச்சாட்டு இதுவே. பவுல் ஒரே நேரத்தில் இரு நற்செய்தியை அறிவித்தார் என்று. ஆக, பவுல் அக்குற்றச்சாட்டை மறுத்து, தன்விளக்கக் கடிதமாக இதை எழுதுகின்றார்.

நாம் வளரத் தொடங்கும்போது, 'இல்லை' எனச் சொல்லிப் பழக வேண்டும்.

ஒளி ஒரே நேரத்தில் ஒளியாகவும் இருளாகவும் இருப்பதில்லை.

உப்பு ஒரே நேரத்தில் உவர்ப்புத்தன்மையோடும் உவர்ப்பற்றும் இருப்பதில்லை.

மலைமேல் நகரம் ஒரே நேரத்தில் மேலேயும் கீழேயும் இருப்பதில்லை.

ஒன்று தன் இயல்பைத் தக்கவைக்க வேண்டுமென்றால், இயல்புக்குப் பொருந்தாததைக் களைய வேண்டும். அதுவே நற்செயல்களின் தொடக்கப்புள்ளி.


1 comment:

  1. உப்பு,ஒளி,மலைமேல் நகரம்...... இவை மூன்றும் தங்களிலேயே தனித்துவம் பெற்றிருந்தால் மட்டும் போதாது....அவற்றின் அருமை- பெருமை மற்றவரையும் சென்றடையுமாறு இருக்க வேண்டும்! இன்றைய வாசகங்கள் தரும் வாழ்க்கைப்பாடம்! அகல உழுவதை விட ஆழ உழுவது எத்தனை பயனுள்ளது என்பது மரத்திற்கு மட்டுமல்ல....மனிதருக்கும் பொருந்தும். நாம் இளமையில் நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து... தெளிந்து கற்கும் கல்வி நம் வாழ்க்கையின் பின்பகுதியை மலைமேல் நிற்கும் நகரமாக ஒளிரச்செய்யும்.

    ஆம்! உண்மைதான்! “ இல்லை” எனும் சொல்லை சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும். மாறாக எல்லோரிடமும்....எல்லாவற்றிற்கும் ‘சரி’ எனத் தலையாட்டுபவர்கள் நாளைக்குத் தலையே இல்லாதவராகிவிடுவர். நாம் வாழ்க்கையில் ஒளிர்ந்து, அடுத்தவருக்கும் ஒளிதர வேண்டுமெனில் நம் இயல்புக்குப் பொருந்தாததைக் களைய வேண்டும். நற்செயல்களின் புள்ளியை நாம் வைப்போமேயானால் வாழ்க்கைக் கோலம் தானாக அழகுற அமைந்து விடும்.தொடக்கப் புள்ளி சரியாக அமைந்திடின் அனைத்து இயக்கமும் அழகுதான் எனும் செய்தி தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete