Tuesday, June 29, 2021

மக்களைப் பிடித்த பேய்

இன்றைய (30 ஜூன் 2021) நற்செய்தி (மத் 8:28-34)

மக்களைப் பிடித்த பேய்

'மறுகரைக்குச் செல்கின்ற' இயேசு கதரேனர் வாழ்ந்த பகுதிக்குச் செல்கின்றார். 'மறுகரைக்குச் செல்தல்' என்பது இயேசுவுக்குப் பிடித்தமான ஒரு செயல். 'மறுகரை' ஒரே நேரத்தில் நமக்கு ஈர்ப்பாகவும், கண்ணியாகவும் இருக்கிறது. நம் முதற்பெற்றோருக்கு விலக்கப்பட்ட கனி ஒரு மறுகரை. மறுகரைக்குச் சென்றவர்களில் மலர்ந்து மணம் வீசியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் முதல் ஏற்பாட்டு யோசேப்பு. அடிமையாகச் சென்ற அவர் ஆளுநராக மாறுகிறார். இளைய மகன் சொத்துகளை எடுத்து மறுகரைக்குச் செல்கின்றார். மீண்டும் தான் புறப்பட்ட மறுகரைக்கே மீண்டும் வருகின்றார்.

மறுகரைக்குச் செல்கின்ற இயேசு, 'பேய் பிடித்த நிலை' என்ற கரையிலிருந்து, 'விடுதலை பெற்ற நிலை' என்ற மறுகரைக்கு இரு இனியவர்களை அனுப்புகின்றார். பேய் பிடித்த இருவரும் இயேசுவைத் தங்களிடமிருந்து விலகுமாறு வேண்டுகின்றனர். பன்றிக் கூட்டத்திற்குள் பேய்கள் அனுப்பப்பட அவர்கள் விடுதலை பெறுகின்றனர். இப்போது மக்கள் கூட்டத்தினர் இயேசுவைத் தங்கள் நகரிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகின்றனர். வெளியேறிய பேய் பன்றிக்கூட்டத்திற்குள் போகவில்லை. மாறாக, ஊருக்குள்தான் சென்றிருக்கிறது.

எதற்காக அவர்கள் இயேசு தங்கள் நகரை விட்டு அகலுமாறு வேண்டினர்?

(அ) மறுகரையில் இருக்கின்ற அவர் தங்கள் கரைக்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லையா?

(ஆ) பன்றிக்கூட்டத்தின் இழப்பைப் போல இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என அஞ்சினார்களா?

(இ) பேய் பிடித்தவர்கள் பேய் பிடித்தவர்களாகவே இருத்தல் நலம் என அவர்கள் விரும்பினார்களா?

'ஏன் இங்கு வந்தீர்?' எனக் கேட்டனர் பேய் பிடித்தவர்கள்.

'எப்போது இங்கிருந்து செல்வீர்?' எனக் கேட்டனர் ஊரார்.

மறுகரைக்குச் சென்ற இயேசு மீண்டும் தன் கரைக்கு வருகின்றார். மறுகரையிலிருந்து பார்த்தால் தன் கரையும் மறுகரையே.

முதல் வாசகத்தில், ஆகாரும் அவருடைய அன்புக் குழந்தையும் சாரா மற்றும் ஆபிரகாம் ஆகியோரால் தங்கள் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கடவுளின் தெரிவு ஈசாக்கு என இருந்தாலும், பச்சிளங் குழந்தையை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நம் மனம் ஏற்க மறுக்கின்றது. ஓர் அப்பத்தையும் தோற்பை நிறையத் தண்ணீரையும் கொடுத்து அவர்களை அனுப்பும் ஆபிரகாமும் நம் பார்வையில் சிறியவராகவே தெரிகிறார். அப்பமும் தண்ணீரும் தீர்ந்துவிட அந்த அபலைப் பெண் ஆண்டவரை நோக்கி அழுகிறார். ஆண்டவரின் தூதர், 'அஞ்சாதே!' என அவரைத் தேற்றி, நீருள்ள கிணற்றை அவருக்குக் காட்டுகின்றார்.

நகரிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியே அனுப்பப்படுகிறவர்கள் அனைவரையும் ஆண்டவரின் தூதர் எதிர்கொள்வதில்லை.

அவர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தொடங்கித் தொடர முயற்சி செய்கின்றனர்.

பேய் என்னவோ இன்னும் எல்லாரையும் பிடித்துக்கொண்டே இருக்கிறது!


2 comments:

  1. நற்செய்தியை மிஞ்சுகிறது முதல் வாசகம் ‘ சோகத்தில்.’ ஆகார் கையில் குழந்தையுடன் வெளியே அனுப்பப் படுகிறார், அபிரகாம் மற்றும் அவர் மனைவி சாராவால். முதுபெரும் தந்தை அபிரகாமா இப்படியொரு இரக்கமற்ற செயலைச் செய்தார்? எனும் கேள்வி எழுகிறது மனதுக்குள். கூடவே தனக்கு வேண்டியவர்களென முடிவு செய்து விட்டவர்களை அவர்கள் எப்படி இருப்பினும் தன் பக்கம் இழுத்துக்கொள்கிறார் இறைவன் என்ற உண்மையும் புரிகிறது. ஆனாலும் அதேசமயத்தில் சாரா போன்ற அபலைகளயும் கைவிடாமல் ‘ அஞ்சாதே!’ எனும் ஆறுதல் வார்த்தை கூறி நீருள்ள கிணற்றை அவர்களுக்குக் காட்டுகிறார்.நமக்கும் ஆகாரின் நிலை போன்ற கையறு நிலை வருகையில் “ அஞ்சாதே!” என்று நம் கரம் பற்ற அவர் உள்ளார் என்று நம்புவோம்!

    ‘ மறுகரை’க்குத் தந்தை தரும் அர்த்தம் புதிதானது.நமக்கும் கூட கண்ணியமாகவும்,ஈர்ப்பாகவும் தெரிகிறது.பல காரணங்களுக்காகக் கட்டாயத்தின் பேரில் நாமும் மறுகரைக்கு அனுப்பப்படும் நேரங்களில் நாம் பார்க்கும் பார்வை தான் மாறுபடுகிறதேயொழிய மறுகரையிலிருந்து பார்த்தால் தன் கரையும் மறுகரையே என்ற உண்மை நமக்கு உந்து சக்தியைத் தரும். இந்த உண்மையைத்தான் முதற்பெற்றோரும்,முதல் ஏற்பாட்டு யோசேப்புவும் நமக்கு எடுத்து வைக்கிறார்கள்.

    பழைய மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து இருவேறு அழகான நிகழ்வுகளை தனக்கேயுரித்தான கோணத்தில் படமாகவும்,பாடமாகவும் தந்துள்ள தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும்

    முதல் பத்தியில் “ சாரா” போன்ற அபலைகளையும் என்பதற்குப் பதில் “ ஆகார்” என,அறு இருந்திருக்க வேண்டும்.தவறுக்கு வருந்துகிறேன்!

    ReplyDelete