Monday, June 21, 2021

மூன்று இயல்பு உணர்வுகள்

இன்றைய (22 ஜூன் 2021) நற்செய்தி (மத் 7:6, 12-14)

மூன்று இயல்பு உணர்வுகள்

உனக்கு மதிப்பு மிக்கது என நீ அறியும் ஒன்றை, அதன் மதிப்பு தெரிந்த ஒருவரிடம் பகிர்தல் வேண்டும். மதிப்பும் நோக்கமும் இணைந்தே செல்கின்றன. எனக்குப் பசி எடுக்கும்போது உணவு என் நோக்கமாக இருக்கிறது. அந்த நேரத்தில் மட்டுமே உணவுக்கு மதிப்பு உண்டு. பசி என்ற நோக்கம் இல்லை என்றால் உணவு என்பது வெறும் சுமையே. முத்துகளால் பன்றிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. தூய்மையானது எதுவும் நாய்களுக்கு மதிப்பாகத் தெரிவதில்லை.

மற்றவர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புவதை நான் செய்வதே திருச்சட்டமும் இறைவாக்கும் என்கிறார் இயேசு. மற்றவர் என்னை மதிப்புடனும் மாண்புடனும் நடத்த வேண்டும் என நான் விரும்பினால் அவர்களையும் நான் அப்படியே நடத்த வேண்டும். என்னை அடுத்தவருடைய இடத்திலும் அடுத்தவரை என்னுடைய இடத்திலும் மாற்றி மாற்றி நிற்க வைத்து நான் வாழ வேண்டும். வழியில் செல்கிறேன். மற்றவர் என்னிடம் பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் அடுத்தவரிடம் பேச முற்படலாமே! மற்றவர் என்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் மற்றவரை மன்னிக்கலாமே!

இடுக்கமான வாயில்! வாயில் உடலுக்கு இடுக்கமானது அல்ல. மாறாக, என் உள்ளத்துக்கு இடுக்கமானது. அதாவது, என் உடல் வாயிலுக்குள் நுழைந்துவிடும். பல நேரங்களில் நிறைய எண்ணங்களால் பிதுங்கி வழியும் என் தலை, என் மூளை, என் மனம் வாயிலுக்குள் நுழைய முடியாது. மிகக் குறுகலான அந்த வழியில் நான் நுழைய வேண்டுமெனில், அதீத எண்ணங்களை நான் விடுத்தல் வேண்டும். என் மூளையில் ஓடும் எண்ணங்கள் குறைந்தால் நான் நுழைந்துவிடலாம்.


1 comment:

  1. எதை எடுப்பது? எதை விடுப்பது? போன்றதொரு பதிவு! அத்தனையும் பொறுக்கி எடுத்து மாலையாய்க் கோர்த்து அணிய வேண்டிய முத்துக்கள்!

    தேவையறிந்து கிடைக்கும் பொருட்களுக்கு மட்டுமே மதிப்புண்டு என்பதும்…..தூய்மையானது எதுவும் நாய்களுக்குத் தெரிவதில்லை என்பதும் முதன்மை பெறுகின்றன.

    அதையும் விட “ மன்னித்தல்”…. நமக்குத்தீங்கிழைத்தவர்களை மன்னித்தல் போதாது…நேசிக்கவும் வேண்டும்! கொஞ்சம் கடினம் தான். மனமுண்டானால் மார்க்கமுண்டு.

    இடுக்கமான வாயில்! இல்லாத…நடக்காத விஷயங்களை, இருந்த…நடந்த விஷயமாக கற்பனைக்குட்படுத்தி நம் உடலையும்,மனத்தையும் வருத்திக்கொள்வது. உண்மையான விஷயங்களேயானாலும் கூட அதில் தேவையற்ற பகுதிகளை வெட்டி,வெளியில் கொட்டிவிடப் பழகிக்கொள்ள வேண்டும். இப்பழக்கங்கள் நம்மை இடுக்கமான வாயிலுக்குள் நுழைய வழி செய்வது மட்டுமின்றி நம்மில் சுரக்கும் தேவையற்ற நச்சுத்திரவங்களைக் குறைத்து…. சமயத்தில் அறவே தவிர்த்து நமக்கு நல்ல உணர்வு,ஊக்கம்,உறக்கம்,பசி, மகிழ்ச்சி போன்ற தேவைகளை நம்மிடம் சேர்க்கிறது. அப்படியெனில் கனி இருக்கக் காயைத் தேடிப்போவதேன்!?

    என் இடத்தில் எனக்கடுத்தவனை வைத்து அவன் தேவைகளையும்,உணர்வுகளையும் என்னுடையதாகப் பார்ப்பது ஞானிகளின் செயல். அவர்களுக்கு மட்டுமே யாருடைய செருப்பும் பொருந்தும்….கடித்துக் காயங்களை ஏற்படுத்தாது.
    சாதாரண விஷயங்களே எனினும் அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தும் விஷயங்கள்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete