Tuesday, June 22, 2021

செயல்கள்

இன்றைய (23 ஜூன் 2021) நற்செய்தி (மத் 7:15-20)

செயல்கள்

எரேமியா நூலில் அனனியா என்னும் போலி இறைவாக்கினர் பற்றி நாம் வாசிக்கின்றோம். பாபிலோனியாவுக்கு யூதா நாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள் என்ற செய்தியை எரேமியா அறிவிக்கின்றார். ஆனால், எரேமியாவின் செய்தி போலியானது என்றும், அவர் பொய் இறைவாக்கினர் என்றும், அரசருக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒன்றும் நடக்காது என்ற தவறான செய்தியை அனனியா உரைக்கின்றார். அனனியாவின் சொற்கள் அரசருக்குப் பிடித்துப் போக, எரேமியாவை கிணற்றில் தூக்கி எறிகின்றார். ஆனால், சில ஆண்டுகளில் எரேமியா சொன்னவாறே பாபிலோனியப் படையெடுப்பு நடந்தேறுகிறது. அந்த நேரத்தில்தான் மக்கள், அனனியாதான் போலி இறைவாக்கினர் என அறிந்துகொள்கின்றனர்.

இங்கே, சொல்கின்ற செய்தியும் நடக்கின்ற செயலும் ஒன்றோடொன்று ஒத்துப் போனால் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய நற்செய்தியில் போலி இறைவாக்கினர்கள் பற்றி எச்சரிக்கின்றார் இயேசு. அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லிவிட்டு, நல்ல மரம், நல்ல கனி என்னும் உருவகத்தைத் தருகின்றார்.

மரத்தின் இயல்பை வெளியில் காட்டுவது கனி. மனிதரின் இயல்பை வெளியில் காட்டுவது அவருடைய சொல்லும் செயலும். மனத்தில் எண்ணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், எண்ணங்கள் சொற்களாகவும் செயல்களாகவும் வெளியில் வரும்போது ஒருவர் யாரென்று நாம் அறிந்துகொள்கின்றோம். நம் உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட நம் இயல்பில் நாம் பேசும் சொற்களும் செய்யும் செயல்களும் நன்மையாகவே வெளிப்படும். அதுபோல நம் வாழ்வில் மாற்றம் வேண்டி நாம் பல முயற்சிகள் செய்கின்றோம். வெறும் செயல்களை மட்டும் மாற்ற முயற்சி செய்கின்றோம். ஆனால், உள்ளார்ந்த இயல்பு மாறினால்தான் வெளிப்புறத்திலும் மாற்றம் இருக்கும். எடுத்துக்காட்டாக, திருடுகின்ற ஒருவர் திருட்டுச் செயலை மட்டும் நிறுத்தினால் போதாது. அப்படி நிறுத்துவது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பேராசை என்ற உள்ளார்ந்த இயல்பு அகற்றப்பட்டால் வெளிப்புறத்தில் மாற்றம் வந்துவிடும் எளிதாக.


2 comments:

  1. மத்தேயு 23:25,26
    “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்.

    ReplyDelete
  2. பல நேரங்களில் போலிகளை நிஜமென ஏற்று, நிஜத்தைப் புறம் தள்ளுவது இவ்வுலகம் காணும் வாடிக்கை……இன்றைய வாசகத்தில் வரும் எரேமியா மற்றும் அனனியா போல.
    சொல்கின்ற சொல்லும் நடக்கின்ற செயலும் ஒத்துப்போனால் அது உண்மையே! ஆனால் அது நடக்காதபோது மனிதனானாலும்…மரமானாலும் அவர்களின்/ அவைகளின் போலித்தன்மை அவர்களையும் மீறி வெளிப்பட்டுவிடுகிறது.உள்ளத்தில் உறுதியோடு நாம் எடுக்கும் எந்தத் தீர்வுகளும் உடலுக்கும்,உலகிற்கும் உரமேற்றும் செயல்களாக நம்மில் வெளிப்படுகின்றன. இல்லையேல் தகதகவென்று மின்னும் ஒரு ஆபரணம் அதன் மேல் ஏற்றப்பட்ட பூச்சு மறைந்தவுடன் பல்லைக்காட்டுவது போன்ற நிலையாகி விடும் நம் நிலமை.மனிதர்கள் நம்மைப்பற்றி எதைப்பேசினாலும்…எப்படிப் பேசினாலும் நம் உள்ளத்தின் இயல்பு மாறாமல் நாம் வெளிப்படுத்தும் விஷயங்கள் நாம் நிஜமா…போலியா என்று இந்த உலகிற்குக் காட்டும் என்ற பாடத்தைத் தரும் ஒரு விவிலியப் பகுதிக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete