Wednesday, June 23, 2021

திருமுழுக்கு யோவான் பிறப்பு

இன்றைய (24 ஜூன் 2021) திருநாள்

திருமுழுக்கு யோவான் பிறப்பு

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ஒரு கருத்தியலின் பெயர் 'ஆன்ட்டிநேடலிசம்'. அதாவது, குழந்தை பிறப்பைத் தவிர்ப்பது. எதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்க்க வேண்டும்? இந்த உலகத்தில் நாம் படும் துன்பத்தை, நாம் எதிர்கொள்ளும் அநீதியை, நம்மை ஏமாற்றும் அரசியல் தலைவர்களை இனி வரும் குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கத் தொடங்கினர் சிலர். ஆர்தர் ஸோப்பன்ஹவர் போன்ற மெய்யியலாளர்கள் இந்தக் கருத்தியலை மிகவும் அதிகமாக ஆதரித்தனர். குழந்தைகள் பிறப்பதை நிறுத்திக்கொள்வது அல்லது அதற்கு முயற்சி செய்வது ஒட்டுமொத்த மனுக்குலம் தற்கொலை செய்வதற்குச் சமம் என இன்னொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குழந்தைகள் இவ்வுலகில் வளர்ந்த பின்னர், அல்லது சிலர் பிறக்கும்போதே பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருந்தாலும், குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் மகிழ்ச்சி தருகின்றது என்பதை நாம் மறுக்க இயலாது.

இன்று நம் தாய்த்திருஅவை புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறது. யோவான், அன்னை கன்னி மரியா, மற்றும் இயேசு என்னும் மூவரின் பிறப்பை பெருவிழாவாக நாம் கொண்டாடுகின்றோம். இயேசுவின் பிறப்போடு தொடர்புடையது என்பதால், யோவான் மற்றும் அன்னை கன்னி மரியாவின் பிறந்த நாள்கள் கொண்டாடப்படுகின்றன.

திருமுழுக்கு யோவான் என்ற நபரின் பிறப்பு தருகின்ற செய்தி மகிழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்தான்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது மகிழ்கின்றார். இவருடைய பிறப்பால் சுற்றத்தார் மகிழ்கின்றனர். மணமகனுக்கு அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்டு மகிழும் நண்பனே தான் எனத் தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார் யோவான்.

ஆக, மகிழ்ச்சி என்பது எதில் அடங்கியுள்ளது என்பதை யோவான் நமக்குக் கற்றுத் தருகின்றார்:

(அ) தாழ்ச்சியில்

'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று ஒரே நேரத்தில் இயேசுவை மணமகனாகவும் (காண். ரூத் 4), தன்னை அடிமையாகவும் முன்வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச அலுவலர்களும் வந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.

(ஆ) அடையாளங்கள் தவிர்ப்பதில்

'வரவிருப்பவர் நீர் தாமே?' என்று தம்மிடம் வந்தவர்களிடம், 'ஆம்! நான்தான்!' என்று சொல்லியிருந்தால், யோவானைக் கொண்டாடியிருப்பார்கள் மக்கள். ஆனால், தன் அடையாளம் எது என்று அறிந்த அவர், மற்ற அடையாளங்களைத் தவிர்க்கின்றார். இல்லாத ஒன்றை தனதாக்க அவர் விரும்பவில்லை.

(இ) குரல் கேட்பதில்

மணமகன் குரல் கேட்பதில் மகிழும் மாப்பிள்ளைத் தோழர் இவர். அவருடைய குரல் கேட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோவான்.

(ஈ) இரண்டாம் இடத்தில் இருப்பதில்

தன் வாழ்க்கை முழுவதும் தன் குழந்தை இரண்டாம் இடத்தில்தான் இருக்கும் என்று சக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் தெரிந்தது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கியிருக்கலாம். ஆனால், இரண்டாம் இடத்தில் இருப்பதில் மகிழ்ந்தார் யோவான்.

(உ) தன் பணியைச் செய்வதில்

எளிமையான உணவுப் பழக்கம், அமைதியான பாலைவனம் என அவருடைய வாழ்க்கை ஒரு சிறுநுகர் வாழ்வாக இருந்தது. அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். வாழ்வு தரும் தண்ணீராக வந்த மெசியாவுக்கே தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார்.

(ஊ) துன்பம் ஏற்பதில்

ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏனெனில், தன் வாழ்க்கையின் இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.

மகிழ்ச்சி என்பது ஒரு மாபெரும் உணர்வு.

நாம் பிறந்தபோதும் நம் பெற்றோர் மகிழ்ந்தனர். நம் உதடுகள் அழகாகச் சிரித்தன. ஆனால், அன்றாட அலுவல்களின் அழுத்தத்திலும், வாழ்வியல் போராட்டத்திலும் நம் சிரிப்பை நாம் மறந்துவிட்டோம்.

இன்று நன்றாகச் சிரிப்போம்! ஏனெனில், 'ஒரு குழந்தை பிறந்துள்ளது!'


1 comment:

  1. எதனாலென்று தெரியவில்லை…முன்பெல்லாம் விட சமீப காலங்களில் ‘திருமுழுக்கு யோவான்’ மீது ஒரு நெருக்கம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன்.கிட்டத்தட்ட இயேசுவிற்கு இணையாக இருந்திருப்பினும், “அவர் இரண்டாம் இடத்திலேயே பார்க்கப்பட்டார்” என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ?

    ஆனால் அந்த இரண்டாம் இடத்திலும் மகிழ்ச்சி கண்டார் இந்த “ மாப்பிள்ளைத் தோழர்” என்று சொல்கிறது இன்றையப் பதிவு. திருமுழுக்கு யோவான் குறித்து “மணமகன் சொல்வதைக்கேட்டு மகிழும் நண்பனே அவர்” எனக்குறிப்பிடும் தந்தை மகிழ்ச்சியின் காரணிகள் எவையென்று திருமுழுக்கு யோவானின் கோணத்திலிருந்து எடுத்து வைக்கிறார்.அதில் அந்த இறுதி வரிகள்….. சிறைத்தண்டனைக்கும்,சாவிற்கும் ஆளானாலும் தன் வாழ்வின் இலக்கான “ மகிழ்ச்சியை” சமரசம் செய்யவே இல்லை இந்த மாமனிதர் என்கிறார் தந்தை. இதே மகிழ்ச்சி உணர்வை நாம் பல காரணங்களுக்காக இழந்து நின்ற போதிலும் இன்று அந்த மகிழ்ச்சி உணர்வை நம்மில் புதுப்பித்துக்கொள்வோம்! நன்றாகச் சிரிப்போம்…நமக்கடுத்தவரையும் சிரிக்க வைப்போம்! ஏனெனில் ஒரு குழந்தை பிறந்துள்ளது!!!

    சோகம் நிறைந்த ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்தவரைப் பற்றியதொரு பதிவை மங்களகரமான வார்த்தைகளால் முடித்துள்ள தந்தைக்கு நன்றிகள்! திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete