Wednesday, June 9, 2021

சிறந்த நெறி

இன்றைய (10 ஜூன் 2021) நற்செய்தி (மத் 5:20-26)

சிறந்த நெறி

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தான் திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க அல்ல, மாறாக, நிறைவேற்ற வந்ததாகக் குறிப்பிடுகின்றார். இயேசு மூன்று நிலைகளில் திருச்சட்டத்தை நிறைவேற்றுகின்றார்: (அ) திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதன் வழியாக. எடுத்துக்காட்டாக, இயேசு குழந்தையாக இருந்தபோது அவரை அவருடைய பெற்றோர்கள் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கின்றனர். மேலும், இயேசு ஆண்டுதோறும் பாஸ்கா விழா கொண்டாட எருசலேமுக்குச் செல்கின்றார். இங்கே, இயேசு திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிபவராக இருக்கின்றார். (ஆ) திருச்சட்டத்தை மாற்றுகின்றார். 'முற்காலத்தில் சொல்லப்பட்டதைக் கேட்டீர்கள். ஆனால், நான் உனக்குச் சொல்கிறேன்' என்று சில பகுதிகளை மாற்றுகின்றார். (இ) திருச்சட்டத்தை நீட்டுகின்றார். 'இன்னும் கொஞ்ச தூரம் பயணம் செய்வது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவது' என்ற போதனைகளில், இயேசு கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றார்.

இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு, இயேசு எப்படி திருச்சட்டத்தை மாற்றுகின்றார் என்பதை வாசிக்கின்றோம். மாற்றுகின்றார் என்றால், திருச்சட்டத்தின் வேருக்குச் செல்கின்றார்.

'கொலை செய்யாதே! கொலை செய்கிறவர் எவரும் தண்டனைக்கு உள்ளாவர்' என்பது மோசேயின் சட்டம்.

இயேசு இதைச் சற்றே மாற்றி, 'சினம் கொள்ள வேண்டாம்! முட்டாளே என அழைக்க வேண்டாம்! அறிவிலியே எனச் சொல்ல வேண்டாம்!' என்கிறார்.

அதாவது, கொலை என்பது செயல். கோபம் என்பது உணர்வு.

உணர்வுதான் செயலாக வெளிப்படுகின்றது. ஆக, உணர்வைக் கட்டுப்படுத்திவிட்டால் செயலுக்கு இடமில்லை என்பது இயேசுவின் புதிய போதனை.

கொலை என்ற செயலுக்கு முன்னர் நடக்கும் மூன்று விடயங்களைத் தடுத்துவிடுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு:

(அ) கோபம் அகற்றுதல்

(ஆ) வசைச் சொல் அகற்றுதல்

(இ) மனத்தாங்கல் அகற்றுதல்

இம்மூன்றையும் அகற்றுவதில் நிறைய வேகம் வேண்டும் என்கிறார் இயேசு.

கொலை என்பது வேகமாக நடந்தேறக்கூடியது.

கொலை என்னும் கொடிய செயலில் காட்டும் வேகத்தை உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் காட்டுமாறு சொல்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 3), புனித பவுல், 'கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றுள்ளோம். ஆகையால், மனந்தளராமல் இருக்கிறோம்' என்கிறார்.

நாம் ஏமாற்றம் அடையும் போது நம் மனம் தளர்கிறது. அந்த ஏமாற்றம் கோபமாகவும் மாறுகிறது. புனித பவுல் தன் பணித்தளத்தில் நிறைய எதிர்ப்பைச் சந்திக்கின்றார். அந்த எதிர்ப்பு அவருக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் தருகின்றது. ஆனாலும் அவர் கடவுளின் இரக்கத்தால் தான் பெற்ற திருப்பணியை தன் கோபத்தைக் கொண்டு அழித்துவிடக் கூடாது என நினைக்கின்றார்.

இன்று நாம் அடுத்தவரைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவதில்லை என்றாலும், கோபம் நிறையவே கொள்கின்றோம்.

'அடுத்தவரின் தவற்றுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனையே கோபம். கோபத்திற்குத் தண்டனை எதுவும் இல்லை, ஏனெனில், ஒருவர் கொள்ளும் கோபமே அவருடைய தண்டனை' என்கிறார் புத்தர்.

கோபம் அகற்றுதல் நலம். கோபம் அகற்ற, எதிர்பார்ப்புகள் குறைத்தல் இன்னும் நலம்.


1 comment:

  1. “கொலை செய்யாதே!” பத்துக்கற்பனைகளில் 5வது கற்பனை/ கட்டளை.” கொலை” என்பது அத்தனை எளிதாக நடந்தேறும் ஒரு செயலல்ல. ஆனாலும் செயலால் நடந்தேறும் கொலையை விட, உணர்வால் நாம் கொள்ளும் ‘ கோபம்’ அதிகமான எதிர் விளைவுகளைத்தர வல்லது என்று உணர்த்துகிறது இன்றைய பதிவு.

    அடுத்தவரின் தவற்றுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனையே கோபம். உண்மைதான்! நம்மில் எதிர்மறைப் பாதிப்பை ஏற்படுத்தியவரை பதிலுக்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாதபோது நமக்கு ஏற்படும் “ இயலாமையே” கோபம். நம்மில் இந்த இயலாமையைத் தவிர்க்க எதிர்பார்ப்புகள் குறைத்தலே நலம் என்கிறார் தந்தை.

    நம் வாழ்வில் ஏமாற்றமும், கோபமும் படையெடுத்து வருகையில் பவுலின் வழியைத் தேர்ந்தெடுப்போம்.கடவுளின் இரக்கம் நமக்களித்த கொடைகளைக் கோபம் கொண்டு அழித்துவிடக்கூடாது என்பதை நம் வாழ்வியல் பாடமாக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதொரு அறச்செயலை அழகுறப்படைத்திருக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete