Monday, May 31, 2021

உமது குணம்

இன்றைய (1 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபித்து 2:9-14)

உமது குணம்

இந்த வாரத்திற்குரிய முதல் வாசகங்கள் நமக்கு தோபித்து நூலிலிருந்து தரப்பட்டுள்ளன. இது ஓர் இணைத்திருமுறை நூல். அதாவது, கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்ததால் முதல் ஏற்பாட்டுக்குள் நுழைய இயலாத நூல். பிரிந்த சகோதரர்கள் இந்நூலைத் தூண்டப்பட்ட நூல் என ஏற்றுக்கொள்வதில்லை. இந்நூல் மித்ராஷ் இலக்கிய வகையைச் சார்ந்தது. அதாவது, யூதச் சட்டங்களுக்கு எழுதப்பட்ட கதையாடல் வடிவ விளக்கவுரை வகையைச் சார்ந்தது. கடவுளுக்குப் பயந்து நீதிமானாக வாழ்க்கை நடத்தும் ஒருவர், பத்துக் கட்டளைகளையும் ஆண்டவரின் விதிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடிப்பவர் தன் வாழ்வில் துன்பம் அனுபவிப்பாரா? என்ற கேள்வி இஸ்ரயேல் மக்களுக்கு இருந்தது.

'கட்டளையைக் கடைப்பிடி. நீ நீடுழி வாழ்வாய்!' என ஆண்டவராகிய கடவுள் இணைச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்கின்றார். ஆனால், அசீரிய மற்றும் பாபிலோனியப் படையெடுப்பின்போது கட்டளைகளைக் கடைப்பிடித்த நல்லவர்களும் நாடுகடத்தப்படுகின்றனர். இச்சூழலில் ஆண்டவரின் வாக்குறுதி பொய்யாகிவிட்டது போல மக்கள் உணர்கின்றனர். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களின் வாழ்வில் துன்பம் வந்தாலும் அவர்களுடைய துன்பத்தை நீக்க இறைவன் உதவி செய்வார் என்ற நம்பிக்கையைத் தருவதற்காக எழுதப்பட்ட நூல் தோபித்து நூல்.

இறந்தவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து முற்றத்தில் தூங்குகிறார் தோபித்து. முற்றத்தில், 'குக்கூ, குக்கூ' எனப் பாடிக்கொண்டிருந்த குருவிகள் அவரின் கண்களில் எச்சம் போட்டுவிடுகின்றன. மருத்துவம் பலன் தரவில்லை. தோபித்தின் பார்வை குறைகின்றது. இதில் என்ன ஓர் அழகான இலக்கியக் கூறு என்றால், இறந்தவர்கள், 'ஒளி இழந்தவர்கள்' எனப் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அழைக்கப்பட்டனர். 'ஒளி இழந்த ஒருவரை' அடக்கம் செய்துவிட்டு வந்த தோபித்து 'ஒளி இழக்கின்றார்.' இது மிகப்பெரிய கொடுமை. இரண்டு நிலைகளில்: ஒன்று, அவர் செய்த நற்செயலுக்கு ஏற்ற கைம்மாறு இல்லை. மாறாக, 'தண்டனை' போன்ற ஒன்று நடக்கிறது. இரண்டு, அவர் இனி உயிரோடு இருந்தாலும் இறந்தவர்போலக் கருதப்படுவார். உடலின் மற்ற குறைகளைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், பார்வையின்மை மிகப் பெரிய இழப்பு. நான் அடிக்கடி நினைப்பதுண்டு. பொதுவிடங்களில், இரயில் போன்ற இடங்களில் உள்ள கழிவறைகளைப் பார்வையற்ற நபர்கள் எப்படி பயன்படுத்துவர் என்று. பல இடங்களில், பல நேரங்களில் நாம் திறன்குறையுடையவர்களின் அசௌகரியங்களை நினைப்பதில்லை. தோபித்து பல அசௌகரியங்களை அனுபவித்திருப்பார்.

தோபித்து தொடர்ந்து தன் மனைவி அன்னா பற்றிக் கூறுகின்றார். அன்னாவைப் பற்றிய விடயமும் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அன்னா கைவேலைப்பாடுகள் செய்து அதில் வரும் பணத்தை வைத்து வீட்டைப் பராமரிக்கிறார். இங்கே, மீண்டும் மிகவும் இரசிக்கத்தக்க ஒரு கூறு. தோபித்து கண்பார்வையை இழக்கின்ற நேரம், அன்னா தன் கண் பார்வையை மூலதனமாக்குகிறார். ஏனெனில், கைவேலைப்பாடுகள் செய்வதற்கு கண்பார்வை மிக அவசியம். அன்னாவின் உழைப்பு நமக்குப் பாடமாக இருக்கிறது. அன்னாவின் உழைப்புக்கு அன்பளிப்பாக உரிமையாளர் ஒருவர் ஆட்டுக்குட்டி தருகின்றார். தன் வீட்டுக்கு வெளியே ஆட்டுக்குட்டி கத்தக் கேட்டவுடன் சந்தேகம் வருகிறது தோபித்துக்கு. தன் மனைவி யாரிடமோ திருடிவிட்டதாக, அல்லது தன் வீட்டுக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த ஆடு ஒன்றை எடுத்துத் தன் வீட்டில் கட்டியதாக நினைக்கின்றார். ஏனெனில், அன்று நாடுகடத்தலின்போது மக்கள் அப்படி அப்படியே அனைத்தையும் - துணிகள், கால்நடைகள், பாத்திரங்கள், கோழிகள், நாய்க்குட்டிகள் - விட்டுவிட்டுச் சென்றனர். பல ஆடு, மாடுகள், கழுதைகள் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தன. ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பதையும் அபகரிக்க நினைக்காத தோபித்தின் குணம் பாராட்ட வேண்டியதாக இருந்தாலும், தன் மனைவியின் நற்பண்பை சந்தேகிப்பது நமக்கு வருத்தமாக இருக்கிறது.

அதிகம் நேர்மையாக இருப்பவர்களின் பிரச்சினையே இதுதான். தங்களைத் தவிர அனைவரும் அநீதியாளர்கள் அல்லது அயோக்கியர்கள் என அவர்கள் நினைப்பர்.

அன்னா உடனடியாகப் பதிலிறுக்கின்றார்: 'உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே? உம்முடைய குணம் இப்போது நன்றாகவே புலப்படுகிறது.'

நாம் நற்பண்புகள் கொண்டிருந்தாலும் மற்றவர்களின் நற்பண்புகளைக் கேள்விக்குட்படுத்துவது தவறு. ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் பேசுவது சால்பன்று.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:13-17), இயேசுவிடம் வருகின்ற ஏரோதியர்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கின்றது. தாங்களே சீசருக்குப் பிரமாணிக்கமாக இருந்துகொண்டு, வெளிவேடம் அணிந்துகொண்டு, 'சீசருக்கு வரி செலுத்துவது முறையா?' என்று கேள்வி கேட்கின்றனர்.

இயேசு அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், வெளிவேடத்தன்மையையும் சுட்டிக்காட்டுகின்றார்.

2 comments:

  1. “கட்டளைகளைக் கடைபிடிப்பவர்களின் வாழ்வில் துன்பம் வந்தாலும் அவர்களுடைய துன்பம் போக்க கடவுள் உதவி செய்வார்.” தோபித்தின் வாழ்வின் முற்பகுதி கொஞ்சம் அலங்கோலமாகத் தெரிந்திடினும் முடிவு சுபமே! இந்த தீபத்தின் ஒளியாக அன்னா மிளிருகிறாள். ஆனால் தோபித்தின் கெட்ட நேரம்... தன் மனைவியின் நற்பண்பை சந்தேகிக்கிறார்.

    நாம் நற்பண்புகளைக் கொண்டிருப்பினும் மற்றவர்களின் நற்பண்புகளைக் கேள்விக்குட்படுத்துவது தவறு.....அதுமட்டுமல்ல....உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும் தவறு.... இன்றைய வாழ்க்கைப்பாடங்கள்!

    அண்மை நாட்களில் வலைப்பதிவின் ஆரம்பத்தில் வரும் அந்த சதுரத்திற்குள் காணப்படும் விஷயங்கள் சிப்பிக்குள் முத்தாக ஒளிர்கின்றன. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete