Tuesday, June 8, 2021

எங்கள் தகுதி

இன்றைய (9 ஜூன் 2021) முதல் வாசகம் (2 கொரி 3:4-11)

எங்கள் தகுதி

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதுகின்ற இரண்டாம் திருமடலில் வருகின்ற ஒரு சொல்லாடல், 'புதிய உடன்படிக்கையின் பணியாளர்.' கற்களில் பொறிக்கப்பட்ட பழைய உடன்படிக்கையின் மாட்சியைவிட, இதயங்களில் பொறிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் மாட்சி மேன்மையாக இருக்கிறது என்பது பவுலின் கருதுகோள்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு சொல்லாடல்கள் நம்மைக் கவர்கின்றன:

(அ) எங்கள் தகுதி

பவுல் தன்னுடைய தகுதி கடவுளிடமிருந்து வருவதாக எழுதுகின்றார். இப்பகுதியின் தொடக்கத்தில், பல்வேறு தகுதிகள் பற்றி எழுதுகின்றார்: சிலருடைய தகுதி நற்சான்றுக் கடிதங்கள் வழியாக வருகின்றது, சிலருக்கு தங்களுடைய படிப்பு அல்லது பணியிலிருந்து வருகின்றது. இங்கே தன்னுடைய தகுதியைக் கடவுளின் கொடை எனக் காண்கின்றார் பவுல். அதாவது, தான் தகுதியற்ற நிலையில் இருந்தாலும் கடவுள் தன்னை அழைத்துத் தகுதிப்படுத்தியுள்ளார் என்பதே பவுலின் நம்பிக்கை.

(ஆ) மறையப்போவதும் நிலையாக இருப்பதும்

'மறையப்போவது மாட்சி உடையதாக இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாக இருக்கும்'. இக்கடிதத்தில் பவுல் இதையொத்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றார். 'காண்பவை – காணாதவை,' 'குறுகிய காலம் - நீண்ட காலம்' போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போதெல்லாம் அங்கே பவுலின் நம்பிக்கைப் பார்வை நமக்குத் தெரிகிறது.

ஒரு புத்தகத்தின் பின்பக்கத்தை, ஓர் இலையின் பின்பக்கத்தை, ஒரு சிற்பத்தின் பின்பக்கத்தை என நாம் காணாதவை நிறைய இருக்கின்றன. காணாதவையும் இருத்தலைக் கொண்டிருக்கின்றன. காணத் தொடங்கும் அந்த நொடி காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால், காணாதது எப்போதும் நிலையாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:17-19), தான் திருச்சட்டத்தை அழிக்க அல்ல, மாறாக நிறைவேற்றவே வந்தேன் என மொழிகிறார் இயேசு.

கற்களால் எழுதப்பட்ட சட்டத்தை, இதயத்தால் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்டு நிறைவுசெய்கிறார் இயேசு.


1 comment:

  1. “தகுதி”..... யாரொருவர் தன்னைக்க் கடைநிலை ஊழியராகக் கருதுகிறாரோ,அவரே இறைவனின் பார்வையில் மாட்சிமைக்குரியவர் என்கிறது வேதாகமம். தகுதி வரும் வழிகள் படிப்பு,பட்டம்,பதவி என எத்தனையோ இருப்பினும் அதைக் கொடுப்பவரும்....தன்னை அழைப்பவரும் இறைவனாக மட்டுமே இருக்க வேண்டுமென விழைகிறார் பவுல்.

    ஒரு விஷயம் நம் கண்களுக்கு மறைவாக இருக்கும் வரை தான் அது மாட்சிக்குரியது. நாம் அதை நம் கண்களால் கண்ட அடுத்த விநாடியே “ இவ்வளவு தானா!” எனும் நினைப்பு அதன் மாட்சியை மறைத்து விடுகிறது. உதாரணங்களாகத் தந்தை வைக்கும் இலை,புத்தகம்,சிற்பம் .....பொருள் செறிந்தவையாக உள்ளன.

    கற்களால் எழுதப்பட்ட சட்டமா? இல்லை இதயத்தால் எழுதப்பட்டதா? உயிரற்ற கற்களைவிட இரத்தமும்,சதையுமாக இருக்கும் இதயமே என்றும் வெல்லும் என்பது யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதை செய்யக்கூடியவரும் இயேசுவே என்பதில் மாற்றுக் கருத்துமில்லை என்பதைத் தெளிவாக எடுத்து வைத்துள்ள தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete