Friday, June 4, 2021

இளைஞருக்கு சம்பளம்

இன்றைய (5 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபி 12)

இளைஞருக்கு சம்பளம்

தோபியாவுடன் வழி நடந்தது யார் என்று வாசகருக்குத் தெரியும். ஆனால், கதைமாந்தர்களுக்குத் தெரியாது. நூலின் இறுதியில் அசரியா தன்னை யாரென்று அறிமுகம் செய்கின்றார். தோபித்தையும், தோபியாவையும் தனியாக அழைத்துச் சென்ற இரபேல் தன்னை வெளிப்படுத்துகின்றார்:

'நல்லதைச் செய்யுங்கள். தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. நீதியுடன் இணைந்த தர்மம் அதைவிடச் சிறந்தது ... தர்மம் சாவினின்று காப்பாற்றும், பாவத்திலிருந்து தூய்மையாக்கும்' என அறிவுரை பகர்கின்றார் தூதர். மேலும், அவர்களின் வாழ்வில் தான் உடனிருந்த பொழுதுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய அறநெறி, வானதூதர் பற்றிய நம்பிக்கை, கடவுளின் உடனிருப்பு ஆகிய கருத்துருக்களை நாம் இங்கே காண்கின்றோம்.

இன்று இந்நூலை வாசிக்கும்போது நமக்குள் சில கேள்விகள் எழலாம்: 'ஏன் கடவுள் இன்று தூதர்களை அனுப்புவதில்லை? ஏன் இன்று அறிகுறிகளும் வல்ல செயல்களும் நடந்தேறுவதில்லை? கடவுள் ஏன் தூரமாக நிற்கிறார்? நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது ஏன்?'

இக்கேள்விகளுக்கு விடையாக வருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய வாசகத்தில் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். காணிக்கைப் பெட்டியில் இவரே அதிகம் போட்டார் எனப் பாராட்டுகின்றார் இயேசு.

இக்கைம்பெண் இவ்வாறு தனக்குள்ளதையெல்லாம் காணிக்கையாகப் போடக் காரணம் என்ன?

தன்னிடம் இல்லாதவற்றைப் பார்க்கவில்லை இந்தப் பெண். மாறாக, தன்னிடம் இருப்பவற்றைப் பார்த்தார். தன் வாழ்வு, தன் உயிர், தன் இருத்தல், தன் இயக்கம் அனைத்தும் தனக்கு இன்று இருக்கக் காரணம் இருக்கின்றவராகிய இறைவனே என அவர் உணர்ந்துகொண்டார்.

'இல்லை' என்பவர்க்கு எதுவும் இல்லை தான்!

ஆனால், 'இருக்கிறது!' என்பவருக்கு வெறும் கையும் கூட இருக்கிறது தான்.

தங்கள் வெற்றுக் கைகளால் இறைவனைத் தவிர வேறெதையும் பிடிக்க விரும்பவில்லை தோபியாவும் ஏழைக் கைம்பெண்ணும்.


1 comment:

  1. அழகாக முடிந்த தோபியா- சாரா நிகழ்வைத்தொடர்ந்து நல்லதொரு வாழ்வியல் பாடத்தை வைக்கிறார் தந்தை.குறைவாகக் காணிக்கைப் பெட்டியில் போட்ட கைம்பெண்ணை நிறைவாகப் பாராட்டுகிறார் இயேசு.அதற்கான காரணத்தை தந்தை தந்திருக்கும் விதம் மனத்தை நிறைக்கிறது.தன்னிடம் என்ன இருக்கிறது...தன்னால் தன்னைப் படைத்தவருக்கு எதைத் தரமுடியும் என்ற எண்ணங்களின் பின்னே இருந்த அவருடைய வாழ்வு, உயிர்,இருத்தல்,இயக்கம் அனைத்திற்கும் பின்னே இருந்த காரணரை மட்டுமே அவர் நினைக்கிறார்; நிறைவு பெறுகிறார்; இருந்ததை இறைவனுக்குத் தருகிறார். நம் கைகள் வெற்றுப்பாத்திரங்களாய் இருந்தால் மட்டுமே இறைவனால் அதை நிரப்ப முடியும் என்ற பாடத்தைப் புகட்டுகிறது இன்றையப் பதிவு.

    “ எதை நான் தருவேன் இறைவா? உன் இதயத்தின் அன்பிற்கீடாக?” அவரின் அன்பை மட்டுமே திருப்பித்தருவோம்.....அதற்கு ஈடான பொருட்கள் இல்லா நிலையிலும். யோசிக்கவும்...நேசிக்கவும் தூண்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete