Sunday, June 27, 2021

சீடத்துவம்

இன்றைய (28 ஜூன் 2021) நற்செய்தி (மத்தேயு 8:18-22)

சீடத்துவம்

'முழுமையான இழப்பு,' 'முதன்மையான இலக்கு' - இவ்விரண்டும் சீடத்துவத்தின் இரு தூண்கள் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைப் பின்தொடர விரும்புகின்றார். இயேசுவின் சீடர்கள் குழாமில் மறைநூல் அறிஞர் ஒருவர் இருப்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். யூத சமூகத்தில் மறைநூல் அறிஞர்கள் நிறைய மொழிகள் கற்றவர்களாக இருந்தனர். யூதர்களின் தோரா, இறைவாக்கினர்கள், மற்றும் திருப்பாடல்கள் நூல்களை விரித்துரைக்கும் ஆற்றலும் அதிகாரமும் அவர்களுக்கே இருந்தது. அத்தகையோரில் ஒருவர் இயேசுவின் சீடராக இருந்தால், இயேசுவின் போதனைகளுக்கு மக்கள் நடுவே இன்னும் வரவேற்பு இருக்கும். ஆனால், அந்த மறைநூல் அறிஞர் தன்னைப் பின்பற்றுவதைத் தடைசெய்கின்றார் இயேசு: 'நரிகளுக்கு பதுங்கு குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை.'

இயேசுவின் சமகாலத்துப் போதகர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்திருந்தனர். அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப் படிப்பதுண்டு. அப்படி மாணவர்களாக வருகின்றவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் என எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் உண்டு. அந்தப் பின்புலத்தில் அவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியிருக்கலாம். எனவே, இயேசு சீடத்துவத்துக்கான விலையைத் தெளிவுபடுத்துகின்றார். மனிதத் தேவைகளில் முதன்மையானதாக உணவு இருந்தாலும், சமூகவியலில் இருப்பிடமே முதன்மையான தேவை என மொழியப்படுகிறது. ஏனெனில், சொந்தமாக ஒரு வீடு இருந்தால் அந்த வீட்டுக்குள் அவர் உணவின்றியோ, அல்லது ஆடையின்றியோ கூட தன்மானத்தோடு இருந்துவிடலாம். இருப்பிடமும் இல்லாத நிலையே சீடத்துவம் என்கிறார் இயேசு. இன்னொரு வகையில், இப்படி இருப்பதில் மிகப்பெரிய கட்டின்மை இருக்கிறது.

இரண்டாவதாக, இன்னொருவரிடம் இயேசு தன்னைப் பின்பற்றுமாறு சொல்ல, அவரோ, 'நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்' எனக் கேட்கின்றார். அவருடைய தந்தை இப்போது இறந்திருக்கலாம், அல்லது இறக்கும் நிலையில் இருக்கலாம். அல்லது யூத சமூக வழக்கத்தின்படி இறந்த ஓராண்டுக்குப் பின்னர் இறந்தவரின் எலும்புகளைச் சேகரிக்கும் சடங்கு ஒன்று உண்டு. அதை மனத்தில் வைத்து அவர் சொல்லியிருக்கலாம். ஆனால், இது சீடத்துவத்தின் கவனச்சிதறல் என எச்சரிக்கின்றார் இயேசு. மேலும், முதன்மையான இலக்காக சீடத்துவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை.

சீடத்துவம் என்பதை நாம் பல நேரங்களில் அருள்பணியாளர்கள் அல்லது துறவறத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பணி என நாம் நினைத்து ஒதுங்கிக்கொள்கிறோம்.

இயேசு விடுக்கும் சீடத்துவத்துக்கான அழைப்பு அனைவருக்கும் பொதுவானது.

முழுமையான இழப்பும், முதன்மையான இலக்குமே சீடத்துவத்தின் பாடம்.


1 comment:

  1. தன்னை நோக்கி வருபவரைத் தடுக்கிறார்; தன்னிடம் வருமாறு எதிர்பார்க்கும் ஒருவர் தன் தந்தைகுறித்த வேலைகளில் மூழ்கியிருப்பதைக் கவனச்சிதறல் என்கிறார் இயேசு. இவரின் இந்த செய்கைகள் “ நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்குத் தலைசாய்க்கக் கூட இடமில்லை” எனும் வரிகளை மெய்ப்பிக்கின்றன.தன்னிடம் வரவிரும்பும் ஒருவருக்கு “சீடத்துவம்” மட்டுமே தலையாய விஷயமாய் இருக்க வேண்டுமென்பதும், இந்த சீடத்துவத்துக்கான அழைப்பு அனைவருக்கும் பொதுவானது என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரதான விஷயங்கள் என்று உணர்த்தப்படுகிறோம்.

    “கிறித்தவனாய்” இருப்பது பெரிய விஷயமல்ல; “முழுமையான இழப்பும், முதன்மையான இலக்கும் கொண்ட சீடத்துவத்தைப்” பின்பற்றுவதே நம் பிறப்பின் பெருமை என்பதைப் புரிய வைக்க முயற்சி எடுத்திருக்கும் தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete