Tuesday, March 2, 2021

எருசலேம் நோக்கி

இன்றைய (3 மார்ச் 2021) நற்செய்தி (மத் 20:17-28)

எருசலேம் நோக்கி

'இப்பொழுது நாம் எருசலேம் நோக்கிச் செல்கிறோம்' என்று தொடங்குகின்ற இயேசு, தன் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பை மூன்றாவது முறையாக முன்னுரைக்கின்றார். முதல் இரண்டு முறைகளில் நடந்தது போலவே இம்முறையும் அவருடைய சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.

செபதேயுவின் மனைவி (மற்ற நற்செய்திகளில், செபதேயுவின் மக்கள்) ஒரு விண்ணப்பத்தோடு இயேசுவிடம் வருகின்றார். அரியணையின் வலப்புறமும் இடப்புறமும் இடம் கேட்கின்றார். அவர்கள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டதைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இயேசுவைப் பொருத்தவரையில் எருசலேம் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது:

(அ) அங்கே அவருடைய பணி நிறைவடைகிறது

(ஆ) அங்கே அவர் தன் வலுவின்மை, நொறுங்குநிலை, மற்றும் கையறுநிலையின் உச்சகட்டத்தை அனுபவிக்கின்றார்

(இ) அதுவே அவர் உயிர்த்து விண்ணேற்றம் அடையும் இடமாக இருக்கிறது

ஆனால், சீடர்களைப் பொருத்தவரையில் எருசலேம் என்பது அரசியல் மற்றும் சமயத்தின் அதிகார மையமாகத் தெரிந்தது. ஆகையால்தான், இயேசு எருசலேமில் உரோமை அரசைத் தகர்த்தெறிந்து அரியணை ஏறும்போது வலப்புறமும் இடப்புறமும் அமர விரும்புகின்றனர்.

இறப்பிலும் அவர்கள் தங்கள் தலைவரை ஒத்திருந்தனர் என்பது வரலாற்றில் நாம் காணும் உண்மை. 

இந்த நிகழ்வு மற்ற திருத்தூதர்கள் நடுவில் பொறாமை உணர்வையும் தூண்டி எழுப்புகிறது.

இதன் பின்புலத்தில், சீடத்துவத்தின் முக்கியமான ஒரு பாடமான தொண்டாற்றுதலை முன்வைக்கின்றார் இயேசு.

'பெரியவராக இருக்க விரும்புதல்' என்பது 'தொண்டாற்றுதல்' நிலையே என்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, தனக்கு எதிராகத் தன் மக்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சியைக் குறித்து ஆண்டவராகிய கடவுளிடம் முறையிடுகின்றார்.

இயேசுவின் முன்னறிவிப்பில் எந்தவொரு முறையீடும் இல்லை. அவர் தன் இறப்பை விரும்பி ஏற்றுக்கொள்கின்றார். 

நாம் இன்று கேட்க வேண்டிய கேள்விகள்:

(அ) தவக்காலத்தில் நம் முகம் இன்று எருசலேம் நோக்கி இருக்கின்றதா?

(ஆ) என் வாழ்வின் எருசலேம் எது?

(இ) இயேசுவின் தொண்டாற்றும் தலைமைத்துவத்தில் நான் இணைய விரும்புகிறேனா?

3 comments:

  1. 🙏
    நன்றி!

    இயேசுவின்,****தொண்டாற்றும் தலைமைத்துவத்தில், நான் இணைய *விரும்பவேண்டும்.
    * முயற்சிக்கவேண்டும்;
    * முழுமூச்சுடன் செயலாற்ற வேண்டும்.

    As you rightly mentioned yesterday.
    Thank you father.

    ReplyDelete
  2. I mean "கற்றுக்கொண்டதை நம் செயல்களால் கற்றுக்கொடுக்க வேண்டும்."

    ReplyDelete
  3. இயேசுவின் இறுதி மற்றும் உயிர்ப்பு நிலைகளின் முக்கியத்துவம் பெறும் இடமாக எருசலேம் இருக்க, சீடர்களோ அரசியல் மற்றும் சமயத்தின் மையப்புள்ளியாக நினைக்கின்றனர்.. எதையுமே தவறாகப் புரிந்து கொள்ளும் சீடர்கள் செபதேயுவின் மக்கள் விஷயத்திலும் அதே தவறைச் செய்கின்றனர். பொறாமை கொள்கின்றனர்.

    எரேமியா போன்ற இறைவாக்கினர் கூட தங்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் பற்றி முறையிட, இயேசுவோ தன் இறப்பை விரும்பி ஏற்கிறார் என்பது இந்த தவக்காலத்தின் சிறப்பான செய்தி.

    தவக்காலத்தில் என் முகம் எருசலேம் நோக்கி இருக்கவும், நான் சேர வேண்டிய விண்ணகத்தை என் எருசலேமாக நினைக்கவும், இயேசுவின் தொண்டாற்றும் தலைமைத்துவத்தில் இணையவும் மனதார விழைகிறேன். சில சமயங்களில் ஜெயிக்கிறேன்...பல சமயங்களில் தோற்கிறேன்..ஆனாலும் கலக்கமில்லை... ஏனெனில் மீண்டும் முயற்சி செய்ய என்னால் இயலும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இன்றையப் பதிவு. நம்தபிக்கையூட்டும் தந்தைக்கு கோடி நன்றிகள்!!!

    ReplyDelete