Friday, March 12, 2021

கடவுளை அறியும் அறிவு

இன்றைய (13 மார்ச் 2021) நற்செய்தி (லூக் 18:9-14)

கடவுளை அறியும் அறிவு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் இரண்டு பேரைச் சந்திக்கின்றோம். ஒருவர் ஆலயத்தின் உள்ளே இருக்கிறார். இன்னொருவர் ஆலயத்தின் வெளியே நிற்கிறார். ஆலயத்தின் உள்ளே நிற்பவர் பரிசேயர். வெளியே நிற்பவர் வரிதண்டுபவர். இருவருமே இறைவேண்டல் செய்கின்றனர். முதலாம் நபர் தன்னை மட்டும் அறிந்தவராக இருக்கின்றார். இரண்டாம் நபர் தன்னையும் இறைவனையும் அறிந்தவராக இருக்கிறார். இரண்டாம் நபர் கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகின்றார்.

முதலாம் நபர் தன்னுடைய செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவராக விரும்புகின்றார். இரண்டாம் நபரோ இறைவனின் இரக்கத்தால் அவருக்கு ஏற்புடையவராகின்றார். இறைவனின் இரக்கம் நம் செயல்களை விட மேலானது என்பதே இன்று நாம் கற்கும் பாடம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஓசேயா இறைவாக்கினர் தன் மக்களிடம், 'நம்மைக் காயப்படுத்தியவர் அவரே. அவரே நம்மைக் குணமாக்குவார்' என்று அழைத்து இறைவனை நோக்கி அழைக்கின்றார். 

'நான் விரும்புவது பலியை அல்ல. இரக்கத்தையே! எரிபலிகளை விட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகிறேன்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

கொரிந்தியருக்கு எழுதுகின்ற முதல் திருமடலில் புனித பவுல், 'நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும். ஆனால், அன்பு உறவை வளர்க்கும்' (காண். 1 கொரி 8:1) என்கிறார்.

புனித பவுலைப் பொருத்தவரையில் மனித அறிவு இறுமாப்புக்கு இட்டுச் செல்லும். இறுமாப்பு என்பது மிகைப்படுத்திப் பார்த்தல். நாம் இருப்பதை இருப்பது போல, நம் நிர்வாண நிலையில், நொறுங்குநிலையில், வலுவின்மையில் பார்ப்பது இறுமாப்பை அகற்றிவிடும். இறைவன் நம்மைப் பார்ப்பது போலப் பார்த்தலும் அறிவே. இந்த அறிவே இறைவனின் இரக்கத்தை நமக்கு உணர்த்துகிறது.
இன்றைய நாளில் நம் அறிதல் இறைவனின் கண்கள் வழியாக நடக்கட்டும். இறைவனின் கண்கள் நம் அடையாளங்களை நீக்கிவிட்டு, நம் செயல்களை நீக்கிவிட்டு, நம் மதிப்பீடுகளை நீக்கிவிட்டு நம்மை வெறுமையாகப் பார்க்கிறது. அந்த வெறுமையே தாழ்ச்சியின் தொடக்கம்.

அதுவே இறைவனுக்கு ஏற்புடையவராகும் நிலை.

1 comment:

  1. நிறைய நிறைய வாழ்க்கை சித்தாத்தங்களை எடுத்துவரும் ஒரு பதிவு.தன்னையும்,இறைவனையும் அறிந்தவர் மட்டுமே இறைவனுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகிறார் எனும் நற்செய்தியும்,”நம்மைக் காயப்படுத்துபவரும்,குணமளிப்பவரும் அவரே” எனும் முதல் வாசகமும் இறைவனை நினைப்பவருக்கு அவர் காட்டும் இரக்கத்தை எடுத்தியம்புகிறது.

    “இறுமாப்பு”..... இது எத்தனை கேடு விளைவிக்க க் கூடிய வியாதி என விளக்குகிறார் பவுலடியார். நம்மை மிகைப்படுத்திப்பார்க்காமல்...நம் நொறுங்கு நிலையில்..வலுவின்மையில் நம்மை நாம் பார்க்கும் போது மட்டுமே இறைவனும் தன் இரக்கம் நிறைந்த கண்களை நம்மை நோக்கித்திருப்புகிறார் என உணரச்செய்யும் வரிகள்.நம்மிடமுள்ள அத்தனையையும் நீக்கிவிட்டு நம்மை வெறுமையாகப் பார்க்கும் இறைவனின் கண்களை நாம் ஏறெடுப்போம். நாம் தாழ்ச்சி பெறும் அந்த நொடியே நாம் இறைவனுக்கு ஏற்புடையவராவோம்!

    தவக்காலத்தின் வெள்ளி. நம் வெறுமையை உணரவும்...இறைவனின் இரக்கத்தை அறியவும்...அந்த சிலுவை மரத்தை நோக்கி எம்மை இட்டுச்சென்ற தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete