Saturday, March 27, 2021

நம்மோடு துன்பத்தில்

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

(பவனியில்) மாற்கு 11:1-10
(திருப்பலியில்) I. எசாயா 50:4-7 II. பிலிப்பியர் 2:6-11 III. மாற்கு 14:1-15:47

நம்மோடு துன்பத்தில்

'அவர் அடிமையின் உருவை ஏற்றி தம்மையே வெறுமையாக்கினார்' (காண். பிலி 2:7) என்னும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் நம் உள்ளத்தில் ஒலிக்கட்டும். இன்று இயேசுவோடு இணைந்து நாமும் எருசலேமுக்குள் நுழைகிறோம். எருசலேம் என்பது இயேசுவின் வாழ்வில் அவருடைய நொறுங்குநிலையின் உச்சகட்ட இயங்குதளமாகவும், அவருடைய பணி வாழ்வின் இலக்காகவும், உயிர்ப்பு என்னும் மாற்றத்தின் தளமாகவும் இருந்தது. 

இயேசு ஓர் அடிமை போல நம்முன் நிற்கிறார். பெரிய வியாழன் அன்று தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் பணியாளர் அல்லது அடிமை போலவும், புனித வெள்ளி அன்று, துன்புறும் மற்றும் வெற்றிபெறும் பணியாளனாகவும் இருக்கின்றார். நமக்குப் பணிபுரிவதன் வழியாகக் கடவுள் நம்மை மீட்டுக்கொண்டார். நாம்தான் இறைவனுக்குப் பணிபுரிகிறோம் எனப் பல நேரங்களில் நினைக்கிறோம். இல்லை! அவரே தாமாக முன்வந்து நமக்குப் பணிபுரிகிறார். ஏனெனில், அவரே நம்மை முதலில் அன்பு செய்தார். பதிலன்பு பெறாமல் அன்பு செய்வது என்பது கடினம். கடவுள் நமக்குப் பணிபுரியமாறு நாம் அனுமதிக்கவில்லை என்றால் அது இன்னும் கடினம்.

கடவுள் நமக்கு எப்படிப் பணி செய்தார்? தன் உயிரை நமக்காகக் கொடுப்பதன் வழியாக. நாம் அவருக்கு மிகவும் பிரியமானவர்கள், நெருக்கமானவர்கள். அவர் நம்மேல் கொண்ட அன்பினால் தன் உயிரை நமக்காகப் பலியாக்கினார், நம் பாவங்களைத் தன்மேல் ஏற்றுக்கொண்டார். எந்தவொரு முணுமுணுப்பும் இன்றி, தாழ்ச்சியோடும், பொறுமையோடும், அடிமையின் கீழ்ப்படிதலோடும், அன்போடும் ஏற்றுக்கொண்டார். தந்தை அவருடைய பணியில் அவரை உயர்த்தினார். அவர்மேல் விழுந்த கொடிய தீமையை தந்தை விலக்கவில்லை. மாறாக, தன் மகனை உறுதிப்படுத்தினார். இதன் வழியாக, நன்மையால் தீமையை வென்றார் கடவுள். அன்பினால் அவர் அப்படிச் செய்தார். அந்த அன்பே இறுதிவரை நீடிக்கிறது.

அன்பு செய்பவர்கள் அனுபவிக்கும்  இரண்டு கொடிய துன்பநிலைகளை ஏற்கும் அளவுக்கு ஆண்டவர் நம்மை அன்பு செய்தார். அவை எவை? துரோகமும் கைவிடப்பட்ட நிலையும்.

(அ) துரோகம். தன்னோடு இருந்த சீடர்களில் ஒருவரே தன்னைப் பணத்திற்கு விற்கும் நிலையில் துரோகம் அனுபவித்தார் இயேசு. 'ஓசன்னா!' என்று பாடிய மக்கள் கூட்டம், 'சிலுவையில் அறையும்' என்று முழங்கி அவருக்குத் துரோகம் இழைத்தது. அநீதியாக அவருக்குத் தீர்ப்பிட்ட அன்றைய சமய அமைப்பு அவருக்குத் துரோகம் செய்தது. அவர்மேல் கைகளைக் கழுவிய அரசியல் அமைப்பு அவருக்குத் துரோகம் செய்தது. சிறிய மற்றும் பெரிய நிலைகளில் நாம் அனுபவித்த துரோகங்களும் இன்று நம் நினைவில் நிற்கலாம். நம் ஆழ்மனத்திலிருந்து எழுகின்ற ஒரு வகையான ஏமாற்றம் வாழ்வின் பொருளையே சில நேரங்களில் கேள்விக்குள்ளாக்குகிறது. நாம் அன்பு செய்யப்படவும், அன்பு செய்யவும் படைக்கப்பட்டுள்ளோம். ஆகையால், நமக்கு அருகில் இருக்கும், நம்மை அன்பு செய்யும், நமக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் ஒருவரால் ஏமாற்றப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அன்பே உருவான கடவுளுக்கு ஏமாற்றம் எவ்வளவு கொடியதாக இருந்திருக்கும்!

நம்மை நாமே உற்றுப் பார்ப்போம். நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் நம்முடைய பிரமாணிக்கமின்மை நமக்கத் தெரியும். எவ்வளவு பொய்மை, வெளிவேடம், இரட்டைத் தன்மை!  நாம் மறுதலித்த நன்மைத்தனங்கள் எத்தனை! நாம் உடைத்த வாக்குறுதிகள் எத்தனை! நாம் நிறைவேற்றாத முடிவுகள் எத்தனை! நம்மை விட நம் இதயத்தை நன்கு அறிந்தவர் நம் ஆண்டவர். நாம் எவ்வளவு வலுவற்றவர்கள் என்பதும், எவ்வளவு இருமனம் கொண்டவர்கள் என்பதும், எத்தனை முறை தவறி விழுகிறோம் என்பதையும், எழுந்து நிற்பது எத்தனை கடினம் என்பதையும், சில காயங்களை நாம் குணமாக்கவே இயலாது என்பதையும் அறிந்தவர் அவர். இறைவாக்கினர் ஓசேயா வழியாக அவர் நமக்குச் சொல்கிறார்: 'அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன். அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன்' (ஓசே 14:4). நம் பிரமாணிக்கமின்மையையும் துரோகங்களையும் அவர் தன்மேல் சுமந்துகொண்டு நம்மைக் குணமாக்குகிறார். பயம் மற்றும் ஏமாற்றத்தால் நாம் நழுவிச் செல்வதற்குப் பதிலாக, சிலுவையின்மேல் நம் கண்களை நாம் பதிய வைக்கலாம். அவரை நோக்கி நாம் சொல்வோம்: 'இதோ! என் பிரமாணிக்கமின்மை! நீர் அதை எடுத்துக்கொண்டீர் இயேசுவே! உம் கரங்களை விரித்து அன்பினால் நீர் எனக்குப் பணி புரிகிறீர். நீர் எனக்குத் தொடர்ந்து உறுதியளிக்கிறீர். உம் உடனிருப்பால் நான் தொடர்ந்து முன்னேறுவேன்!

(ஆ) கைவிடப்படுதல். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு சிலுவையிலிருந்து ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றார்: 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?' (மாற் 15:34. மேலும் காண். மத் 27:46). இவை மிகவும் வலிமையான வார்த்தைகள். இயேசுவோடு உடனிருந்தவர்கள் அவரைக் கைவிட்டு ஓடினர். ஆனால், தந்தை அவரோடு இருந்தார். இப்போது தனிமையில் முதல் முறையாக, 'இறைவனே!' 'கடவுளே!' எனப் பொதுப்படையாக அழைக்கிறார் இயேசு. 'ஏன்?' என்ற வாழ்வியல் கேள்வியைத் தொடுக்கின்றார். 'ஏன் என்னைக் கைவிட்டீர்?' எனக் கேட்கின்றார். 'நீரும் என்னைக் கைவிட்டது ஏன்?' என்று கேட்பது போல இருக்கிறது இக்கேள்வி. இவ்வார்த்தைகள் திருப்பாடலின் வார்த்தைகள் (திபா 22:1). இயேசு தன் விவரிக்க இயலாத துன்பத்தை இறைவேண்டலுக்கு எடுத்துச் செல்கிறார். இருந்தாலும், அவர் வறண்ட நிலையை அவர் உணர்ந்தார் என்பதே எதார்த்தம். கைவிடப்பட்ட நிலையின் உச்சத்தை உணர்கின்றார் இயேசு.

இது ஏன் நடந்தது? நமக்காகவே இது நடந்தது. நமக்குப் பணிபுரியவே இப்படி நடந்தது. நம் கண்முன் பெரிய சுவர் எழும்பி, பாதைகள் அடைக்கப்படும்போது, வெளிச்சம் இல்லா வழியில் நாம் நின்று தப்பிக்கும் வழியறியாமல் நிற்கும்போது, கடவுளும் நமக்கு மறுமொழி தராத போது நாம் தனியாய் இல்லை என்று நமக்கு நினைவூட்டவே இது நிகழ்ந்தது. அனைத்திலும் நம்மைப் போல இருக்க வேண்டும் என்பதற்காகவே, தான் அனுபவித்திராத இந்த உணர்வையும் அனுபவிக்கிறார் இயேசு. நமக்கமாகவே இதை அனுபவித்த அவர் நம்மிடம் சொல்கிறார்: 'அஞ்சாதே! நீ தனியாக இல்லை. உன் வறண்ட நிலையை, தனிமையை நானும் அனுபவித்துள்ளேன்!' இந்த அளவுக்கு அவர் நமக்குப் பணிவிடை புரிந்தார். துரோகம் மற்றும் கைவிடப்பட்ட நிலையின் உச்சத்தை அறியும் அளவுக்கு நம் துன்பத்துக்குள் அவர் தன்னையே ஆழ்த்தினார். இன்று, பெருந்தொற்று நம்மை விட்டு அகலாத நிலையில், தேர்தல் என்ற பெயரில் போலி வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் நிலையில், அரசு என்ற நிலையில் மக்கள் துன்பங்கள் பல அனுபவிக்கும் நிலையில், நாமும் துரோகம் மற்றும் கைவிடப்பட்ட நிலை சூழ்ந்து செய்வதறியாது நிற்கின்றோம். இயேசு இன்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்: 'துணிவோடிரு! உன் இதயத்தை என் அன்பிற்குத் திற! உனக்கு வலுவூட்டும் கடவுளின் ஆறுதலை நீ கண்டுகொள்வாய்!' 

துரோகத்திற்கு ஆளாகி, கைவிடப்பட்ட நிலையை ஏற்று நமக்குப் பணிபுரிய ஓர் அடிமையான நம் கடவுளோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்ய முடியும்? நாம் அவரை இனியும் காட்டிக்கொடுக்க வேண்டாம். பிரமாணிக்கமில்லாமல் இருக்க வேண்டாம். வாழ்வின் முக்கியமானவற்றை நாம் புறந்தள்ளிவிட வேண்டாம். நாம் அவரை அன்பு செய்யவும் அயலாரை அன்பு செய்யவும் படைக்கபட்டோம். மற்றதெல்லாம் மறைந்துவிடும். இது ஒன்றே நிலைத்து நிற்கும். வாழ்வின் முக்கியமானவற்றையும் முதன்மையானவற்றையும் கைக்கொண்டு, மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவோம். அடுத்தவர்களுக்காகப் பணிபுரியாத வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை என்பதை மீண்டும் கண்டறிவோம். ஏனெனில், அன்பினாலேயே வாழ்க்கை அளக்கப்படுகிறது. ஆகவே, இந்த நாள்களில், நம் இல்லங்களிலும் ஆலயத்திலும் சிலுவையில் அறையுண்ட நம் ஆண்டவர் முன் நிற்போம். சிலுவையில் அறையப்படும் அன்புக்குத் தன்னையே தாழ்த்தி அவர் நம்மை அன்பு செய்தார். பணிபுரிவதற்காகவே நான் வாழ வேண்டும் என்னும் வரத்தை அவரிடம் கேட்போம். துன்புறுகின்ற அனைவருக்கும் நம் கரம் நீட்டுவோம். நம்மிடம் என்ன குறைவாக இருக்கிறது என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். நாம் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதைப் பற்றிக் கவலைப்படுவோம்.

'இதோ! நான் பற்றிப் பிடித்துப் பாதுகாக்கும் என் ஊழியன்!' என்று தன் மகனுடைய துன்பத்தில் உடனிருந்த தந்தை, நம்மோடு உடனிருந்து பணிபுரிவதற்கான நம் முயற்சிகளில் துணைசெய்கின்றார். அன்பு செய்தல், இறைவேண்டல் செய்தல், மன்னித்தல், அக்கறை காட்டுதல் என்பவை நம் குடும்பத்தில் தொடங்கி எங்கும் தொடரட்டும். இவை உண்மையாகவே கடினமானவை. இவை சிலுவைப் பாதையாக நமக்கு இருக்கலாம். பணிவிடையின் பாதை வெற்றியானது, வாழ்வு தருவது. அதன் வழியாகவே நாம் மீட்கப்படுகிறோம். இன்றைய நாள் இளைஞர்களின் நாள் என்று திருஅவை கொண்டாடுகிறது. வாழ்க்கை உங்களை அழைக்கிறது. இறைவன் உங்களை அழைக்கிறார் என்பதை உணருங்கள். உங்கள் வாழ்வைக் கடவுளுக்காகவும் ஒருவர் மற்றவருக்காகவும் பயப்பட வேண்டாம். நாம் நம்மையே மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை என்பது ஒரு கொடை என்பதை நாம் உணர முடியும். 

நிபந்தனைகள் இல்லாமல் அன்பிற்கு ஆம் என்று சொல்லும்போது மட்டுமே ஆழ்ந்த மகிழ்ச்சி நமக்குச் சொந்தமாகும். அப்படிப்பட்ட 'ஆம்!' என்பதுதான் இயேசுவின் வார்த்தையாக இருந்தது.

இறுதியாக,

நம்மோடு துன்பத்தில் அவரோடு நிற்பதால் துன்பத்தில் நாம் தனிமையில் இல்லை!

புனித வாரம் நமக்கு அருளின் காலமாக இருப்பதாக!

(மேற்காணும் மறையுரை, கடந்த ஆண்டு திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு அன்று நம் மதிப்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் மொழிபெயர்ப்பும் தழுவலும் ஆகும். நன்றி!)

2 comments:

  1. அன்பு செய்பவர்கள் அனுபவிக்கும் இரண்டு கொடிய துன்பநிலைகளை ஏற்கும் அளவுக்கு ஆண்டவர் நம்மை அன்பு செய்தார்.

    துன்பத்தில் நம்மோடு "அவர்"நிற்பதால் துன்பத்தில் நாம் தனிமையில் இல்லை!

    புனித வாரம் நமக்கு அருளின் காலமாக இருப்பதாக!


    மதிப்பிற்குரிய திருத்தந்தை அவர்களுக்கும், அருட்பணி.யேசு கருணாநிதி அவர்களுக்கும்,நன்றிகள்.🙏

    ReplyDelete
  2. மனத்தை உருக்கும் ஒரு மறையுரை! ஒவ்வொரு வரியுமே மனத்தைப்பிழிவதாய் உள்ளது.
    “ அவர் அடிமையின் உருவை ஏற்றி தம்மையே வெறுமையாக்கினார்”.... பொருள் பொதிந்த இந்த சொற்கள் மறையுரையின் இறுதிவரை ரீங்காரமாய் ஒலிக்கிறது.அன்பு செய்பவர்கள் அனுபவிக்கும் கொடிய நிலைகளான ‘துரோகம்’ மற்றும் ‘கைவிடப்படும் நிலைகளை’ இறைவனும்,மனிதனுமான அவரே ஏற்றுக்கொண்டார் என்பதை அழகாக உணர்த்துகின்றன தந்தையின் வரிகள்.

    இது ஏன் நிகழந்தது? “எனக்காகவே நிகழ்ந்தது” என்பதை விளக்கும் தந்தையின் வரிகள் இமைகளை நனைக்கின்றன.நம் கண்முன் பெரிய சுவர் எழுப்பிப் பாதைகள் அடைக்கப்படும் பொழுது, வெளிச்சம் இல்லா வழியில், தப்பிக்கும் வழி தெரியாதபோது நாம் “ தனியாய் இல்லை” என்று நினைவூட்டவே இது நிகழ்ந்தது...அருமை! துரோகமும்,கைவிடலும் நம்மைக் கைதிகளாக்கி வேடிக்கை பார்க்கையில் “ “துணிவோடிரு! உன் இதயத்தை என் அன்பிற்குத் திற “ என்று அவர் சொல்வது நம் செவிகளில் விழவே இது நிகழ்ந்தது. பரமனே படைத்தவரைப்ரபார்த்து “ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்டாரெனில் நமக்கும் அந்த நிலை வருகையில் அதை ஏற்றுக்கொள்ள நம்மைத் தயார் செய்யவும் நம்மை அழைக்கிறது இந்த மறையுரை.

    தன் மகனோடு உடனிருந்த தந்தை நம்முடைய பிரகாசமான மற்றும் அந்தகாரமான சூழ்நிலைகளில் நமக்கும் ஒளியாய் ...வழியாய் இருப்பாரென நம்புவோம். நிபந்தனையின்றி நம் அயலானை நம்பவும்,நம் வாழ்வைப் பிறருக்குக் கொடையாக கொடுக்கவும் கூட நம்மைத்தயார் செய்வோம்.

    “நம் துன்பத்தில் நாம் அவரோடு இருப்பதால் நமக்குத் தனிமை இல்லை” எனும் தந்தையின் இறுதிவரிகள் இந்தப் புனித வாரத்தை மட்டுமின்றி நாம் வாழவிருக்கும் வாழ்க்கையையும் “ அருளின்” காலமாக மாற்றட்டும்!

    அழகான இந்த மறையுரையின் இறுதியில் “ இந்த மறையுரை என்னுடையதல்ல...அது திருத்தந்தை ஃ பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் மொழிபெயர்ப்பும்,தழுவலும் ஆகும் “ எனும் வரிகள் தந்தையின் எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. அவர் உயரங்களை எட்டுவதன் சூட்சுமம் இதுவாக க் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்! இந்த வாரம் அருளின் வாரமாக இருக்கத் தந்தைக்கும்...அனைவருக்கும் என் செங்களை உரித்தாக்குகிறேன்.

    “ இதோ! நான் பற்றிப்பிடித்துப் பாதுகாக்கும் என் ஊழியன்!” என அவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து சொல்ல நம்மைத் தகுதியுள்ளவராக்குவோம்....அன்புடன்....

    ReplyDelete