Tuesday, March 9, 2021

திருச்சட்டத்தின் நிறைவு

இன்றைய (10 மார்ச் 2021) நற்செய்தி (மத் 5:17-19)

திருச்சட்டத்தின் நிறைவு

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. விண்ணரசின் மக்கள் யார் என்பதை இதுவரை வரையறுத்த இயேசு (காண். மத் 5:3-16). இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இயேசு புதிய வகை அறநெறி அல்லது நெறியை வழங்குகின்றார்.

இந்த இடத்தில், தனக்கும் யூத சமயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அல்லது வேறுபாட்டை உணர்த்த விழைகின்றார். இயேசுவின் சம காலத்தில் யூத விவிலியம் என்று சொல்லப்படுகின்ற 'தனாக்' முழுமை பெற்றிருக்க வாய்ப்பில்லை. 'தோரா' ('சட்டம்') மற்றும் 'நவிம்' ('இறைவாக்குகள்') என்று சொல்லப்படுகின்ற  இரண்டு பகுதிகள்தாம் வழக்கத்தில் இருந்தன. 'கெத்துவிம்' ('எழுத்துகள்') என்னும் நூல்கள் நிறைவு பெற்றிருந்தன. அவற்றில் திருப்பாடல்கள் தவிர மற்ற புத்தகங்கள் பின்னாளில்தான் ('ஜாம்னியா சங்கம்') அவர்களது விவிலியமாக முழுமை பெறுகின்றன. 

இயேசுவின் சம காலத்தில் மக்களிடையே சில கேள்விகள் இருந்தன: 'இயேசு யார்? இவருக்கும் மோசேக்கும் இறைவாக்கினர்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களின் நீட்சியாக இவர் வருகிறாரா? நீட்சியாக வந்தால் இவரிடம் என்ன புதுமை இருக்கிறது? இவர் புதியவராக இருந்தால் மோசே மற்றும் இறைவாக்கினர்களிடமிருந்து இவர் முரண்படுவாரா?'

மக்களின் இந்தக் கேள்விகளுக்கு விடையாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த வாசகத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில், தான் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்க அல்ல, மாறாக, நிறைவேற்ற வந்தேன் என்கிறார் இயேசு. இரண்டாம் பகுதியில், கட்டளைகளைக் கடைப்பிடித்தலும் கற்பித்தலும் பற்றிச் சொல்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக, இஸ்ரயேல் மக்களின் பெரும் பேற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்: 'ஆண்டவரின் கட்டளைகளும் நியமங்களும் விதிமுறைகளும் அவர்களுடைய ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுற்ற மக்கள் அனைவரும் உண்மையில் இப்பேரினம் ஞானமும் கொண்ட மக்களால் ஆனது என்பர் ... மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாவது உண்டா என்பர்'. ஆக, திருச்சட்டம் என்பது இஸ்ரயேல் மக்களுக்கு மூன்று நிலைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது: (அ) அது அவர்களுக்கு அடையாளம் தந்தது, (ஆ) கடவுளுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாக இருந்தது, (இ) மற்ற இனத்தார் பார்வையில் அவர்களுக்குப் பெருமையும் பெருமிதம் தந்தது. இத்தகைய மேன்மை பொருந்திய திருச்சட்டத்தை இயேசு ஒரு போதும் அழிக்க மாட்டார். மாறாக, அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று அதை நிறைவு செய்கின்றார்.

இதை ஓர் உருவகமாகப் புரிந்துகொள்வோம். நாம் புதிதாக ஒரு மொபைல் ஃபோன் வாங்குகிறோம். அதன் நினைவு அளவு 32 ஜிபி என வைத்துக்கொள்வோம். நாம் பயன்படுத்தும் செயலிகள் நிறைய இடத்தை எடுத்துக்கொள்வதால் நாம் நினைவு அளவை 128 ஜிபி அல்லது 256 ஜபி எனக் கூட்டுகிறோம். இப்போது மொபைலின் திறன் கூடுவதோடு அது வேகமாகவும் இயங்குகிறது. இந்தச் சேர்க்கையினால் நாம் பழைய மொபைலை அழிக்கவில்லை. மாறாக, அதை இன்னும் நிறைவுபடுத்தியுள்ளோம். இயேசுவும் திருச்சட்டத்தை அவ்வாறே செய்கின்றார்.

'கொலை செய்யாதே' என்ற மோசேயின் சட்டத்தை எடுத்து, 'கோபம் கொள்ளாதே!' என்கிறார்.

'விபசாரம் செய்யாதே' என்ற சட்டத்தை எடுத்து, 'இச்சையுடன் நோக்காதே!' என்கிறார்.

'ஆணையிடாதே!' என்ற சட்டத்தை எடுத்து, 'அளவுடன் பேசு!' என்கிறார்.

'கண்ணுக்குக் கண்! பல்லுக்குப் பல்!' என்ற சட்டத்தை எடுத்து, 'மன்னியுங்கள்!' என்கிறார்.

'அயலானுக்கு அன்பு!' என்ற கட்டளையை எடுத்து, 'இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எல்லாரையும் அன்பு செய்!' எனச் சொல்கின்றார்.

இவ்வாறாக, இயேசு திருச்சட்டத்தை நிறைவு செய்கிறார்.

மேலும், 

இறைவாக்குகள் மெசியாவை முன்னறிவித்தன (காண். எசா 53:1-12). இயேசு மெசியாவாக வந்தார். விண்ணரசை அவை முன்னறிவித்தன (காண். தானி 2:44). இயேசு அதை அறிவித்தார். அவை புதிய உடன்படிக்கையை முன்னுரைத்தன (காண். எரே 31:31-34). இயேசு அதை நிறைவுக்குக் கொண்டு வருகிறார் (காண். எபி 8:6-13). 

ஆக, தன் போதனை வழியாகவும், தன் இருத்தல் மற்றும் இயக்கம் வழியாகவும் இயேசு தன்னைத் திருச்சட்டத்தின் நிறைவு என முன்மொழிகிறார்.

தொடர்ந்து, கடைப்பிடித்தல் மற்றும் கற்பித்தல் பற்றிப் பேசுகின்றார் இயேசு. 

அறிதல், கடைப்பிடித்தல், கற்பித்தல் என திருச்சட்டம் வளர்கிறது. 

அறியும் ஒன்று கடைப்பிடிக்கும்போது நிறைவு பெறுகிறது. கடைப்பிடிக்கும் ஒருவர் அதைக் கற்பிக்கும்போது அது இன்னொருவரால் அறியவும் கடைப்பிடிக்கவும் படுகிறது. இப்படியாக நிறைவிலிருந்து நிறைவு வழிந்தோடுகிறது.

சிந்தனைக்கு

இந்த வாசகம் தவக்காலத்தில் நமக்குத் தரும் செய்தி என்ன?

'திருச்சட்டத்தின் நிறைவு அன்பே' என உரோமை நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல் (காண். உரோ 13:8-13).

புனித அகுஸ்தினாரும் இதையே முன்மொழிகின்றார். அன்பு என்ற ஒற்றைச் சொல்லே திருச்சட்டத்தின் இலக்காகவும் நோக்கமாகவும் முன்மொழிதலாகவும் இருக்கிறது. இந்த அன்பை நாம் வாழ்வாக்கும்போது திருச்சட்டத்தை அறிபவராகவும் கடைப்பிடிப்பவராகவும் கற்பிப்பவராகவும் மாறுகிறோம்.

அன்பு செய்தல் நலம். அதுவே திருச்சட்டத்தின் நிறைவு.

நாம் சந்திக்கும் எந்தப் புள்ளியும் எந்தச் சிற்றெழுத்தும் அழிந்துவிட வேண்டாம். அன்பு அனைத்தையும் ஆக்கும். ஒன்றையும் அழிக்காது.

2 comments:

  1. அறியும் ஒன்று கடைப்பிடிக்கும்போது நிறைவு பெறுகிறது. கடைப்பிடிக்கும் ஒருவர் அதைக் கற்பிக்கும்போது அது இன்னொருவரால் அறியவும் கடைப்பிடிக்கவும் படுகிறது. இப்படியாக நிறைவிலிருந்து நிறைவு வழிந்தோடுகிறது.

    'திருச்சட்டத்தின் நிறைவு அன்பே'

    அன்பை நாம் வாழ்வாக்கும்போது திருச்சட்டத்தை அறிபவராகவும் கடைப்பிடிப்பவராகவும் கற்பிப்பவராகவும் மாறுகிறோம்.
    நாம் சந்திக்கும் எந்தப் புள்ளியும் எந்தச் சிற்றெழுத்தும் அழிந்துவிட வேண்டாம். அன்பு அனைத்தையும் ஆக்கும். ஒன்றையும் அழிக்காது.

    நன்றி🙏

    Just "LOVE"-----Am I right?



    ReplyDelete
  2. நமக்குப் புரிந்த...புரியாத பல விஷயங்களை விளக்கிய தந்தை நமக்குப் புரியும் படிக் கூறியது “ அன்பைப்” பற்றித்தான்.’திருச்சட்டத்தை அழிக்க அல்ல...நிறைவேற்றவே வந்தேன்’ என்ற இயேசு தான் சொன்னதை மெய்ப்பித்துக் காட்டியும் விட்டார்.தந்தை தரும் தவக்காலச் செய்தியும் இயேசுவுக்கும்....பவுலடியாருக்கும்....புனித அகுஸ்தினாருக்கும் நெருக்கமான ‘அன்பு’ தான்.

    இந்த அன்பை நாம் வாழ்வாக்கும்போது திருச்சட்டத்தை அறிபவராகவும்,கடைபிடிப்பவராகவும், கற்பிப்பவராகவும் மாறுகிறோம் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய வேதம்.அன்பு செய்தல் நலம்.அதுவே திருச்சட்டத்தின் நிறைவு.

    அன்பு அனைத்தையும் ஆக்கும்.ஒன்றையும் அழிக்காது. ஆம்! எதையுமே அழித்துவிடாமல் ‘ஆக்குவது’ ஒன்றையே தன் நிறைவாக க் கொண்ட “ அன்பு” குறித்த பதிவு அருமை! அன்பை ஆராதிப்போம்!! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete