Friday, March 5, 2021

நான் அடிமை போன்று

இன்றைய (6 மார்ச் 2021) நற்செய்தி (லூக் 15:1-3,11-32)

நான் அடிமை போன்று

'சொந்த வீட்டிலேயே அடிமையாக இருந்த மூத்த மகனும் தன் தந்தையின் இல்லத்திலிருந்து தூரமாகவே இருந்தான்!'

- இப்படித்தான் தோன்றுகிறது இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிக்கும்போது.

தங்கள் வேலையைச் சரியாகச் செய்பவர்கள்,

தனக்கும் தன் தந்தைக்கும் உள்ள உறவைச் சரியாகப் பேணுபவர்கள்,

வாழ்வில் அனைத்தும் அவரவருடைய உழைப்புக்கு ஏற்றாற் போலக் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள்,

அடுத்தவர்களை நீதியுடன் நடத்த விரும்புபவர்கள்,

இவர்கள் யாவரும் பல நேரங்களில் தங்கள் சொந்த வீட்டிலேயே அடிமை போல வாழ்கின்றனர்.

தன் தந்தையின் சொத்துக்களை அழித்த இளைய மகன், இப்போது தன் சொத்தையும் பங்குபோடு வந்துவிட்டான் என்று உள்ளுக்குள் பதறுகிறான் மூத்த மகன்.

ஒருவேளை இவனும் இளைய மகன் போலச் சொத்துகளைப் பிரித்துச் சென்று, தானும் ஊதாரியாகச் செலவழித்துத் திரும்பி வந்தால், தந்தையும் தெருவில் அல்லவா நிற்க வேண்டும்?

இளைய மகனின் வருகையை நாம் கேள்விக்குட்படுத்தவில்லை. அவன் அறிவு தெளிந்தான்.

தந்தையின் இரக்கத்தையும் நாம் கேள்விக்குட்படுத்தவில்லை. அவர் இரக்கம் காட்டினார்.

அது போலவே, மூத்த மகன் மேலும் நமக்குக் கோபம் வேண்டாம். அவன் தன் இயலாமையில், தன் உடன்பிறப்பு, 'உம் மகன்' என்று தள்ளி வைக்கிறான்.

பாவம் அவன்! சொந்த வீட்டிலேயே அடிமையாக வாழ்ந்துவிட்டான்!.

'நல்லது செய்தால் நல்லது நடக்கும்' என்று எண்ணி ஏமாந்துவிட்டான்.

நல்லது செய்தால் நல்லது நடக்கலாம், நடக்காமல் இருக்கலாம்.

நல்லது செய்யாவிட்டாலும் அள்ளி அணைக்கப்படலாம்.

இதை இறை இரக்கம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். விதி என்றும் எடுத்துக்கொள்ளலாம் (காண். சஉ 9)

மூத்த மகன் நமக்குத் தரும் செய்தி இதுதான்: 'வாழ்வில் மிகவும் நல்லவனாக இருந்தால் நீ சொந்த வீட்டிலேயே அந்நியன் ஆவாய். மேலும், வாழ்க்கையை வெறும் செய்ய வேண்டிய வேலைகள் என நினைத்து வாழாமல் கொஞ்சம் விளையாட்டுத்தனத்தோடும் வாழக் கற்றுக்கொள்!'

4 comments:

  1. “ ஊதாரி மகன்” உவமையில் இதுவரை இளையமகனே கதாநாயகனாகச் சித்தரிக்கப்பட்ட நிலையில் இன்று தந்தை மூத்த மகனுக்கு அந்த அந்தஸ்தைக் கொடுக்கிறார். வித்தியாசமாக இருப்பினும் ஒத்துக்கொள்ளவும் காரணங்கள் இருக்கின்றன.” வாழ்வில் மிகவும் நல்லவனாக இருந்தால் நீ சொந்த வீட்டிலேயே அந்நியனாவாய். மேலும் வாழ்க்கையை வெறும் செய்ய வேண்டிய வேலைகள் என நினைத்து வாழாமல் கொஞ்சம் விளையாட்டுத்தனத்தோடும் வாழக்கற்றுக்கொள்!”
    எதையுமே கொஞ்சம் வித்தியாசக்கண்கொண்டு பாரக்கும் தந்தை இதையும் அவ்விதமே பார்க்கிறார். உண்மைதான்......நல்லவனுக்கு மறுபெயர் “ பைத்தியக்காரன்” நம் ஊரில். ஒரு விஷயத்தை எப்படிப்பார்த்திடினும் அதில் ஒரு பாடம் படிக்கலாம். சொல்லும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. “இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுவின்” செயலராக இன்று மாலை பொறுப்பேற்றுக் கொண்ட பாசமிக்க தந்தை யேசு கருணாநிதி அவர்களுக்கு அனைத்து வாசகர்களின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். தந்தையின் தோள்களில் ஏற்றப்பட்ட இந்தப்பணி அவரைப் பெற்றவர்களுக்கும்.....அவர் சார்ந்திருக்கும் மதுரை மறைமாவட்டத்திற்கும்.....அகில இந்தியத் திருச்சபைக்கும்....என்னைப்போன்று அவரைக் கொஞ்சம் அறிந்து,தெரிந்து வைத்திருப்பவர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக!
    தூய ஆவியின் துணை கொண்டு அவர் பெற்ற இந்த அனுபவம் இறைவனின் உண்மை சாட்சியாக விளங்கும் துணிவை அவருக்குத்தருவதாக! இறைவனின் கரங்களிலிருந்து சுரக்கும் வரங்களின் ஊற்று அவருக்கு வாழ்வின் வரமாய் அமைவதாக! திருஅவையைக் கட்டிக்காக்கும் ஒரு தூணாக....ஒரு அகுஸ்தினாராக வாழ எங்களின் செபம் உங்களுக்குத் துணை நிற்கும்! மீண்டும் வாழ்த்துகிறோம் தந்தையே! அன்புடனும்.......ஆசீருடனும்.....

    ReplyDelete
  3. In one of the homilies I have listened to, the priest said, ' the elder son felt he worked like a servant while the younger one wanted to work as a servant when he planned to return. '

    "நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்" (லூக். 17:10)

    ReplyDelete