Saturday, March 6, 2021

பொன்னினும் தேனினும்

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

விடுதலைப் பயணம் 20:1-17 1 கொரிந்தியர் 1:22-25 யோவான் 2:13-25

பொன்னினும் தேனினும்

ஆண்டவரின் நெறிமுறைகளின் மேன்மை பற்றி இன்றைய பதிலுரைப்பாடலில் பாடுகின்ற திருப்பாடல் ஆசிரியர், 'அவை பொன்னினும் பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை. தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை' (காண். திபா 19) என்கிறார்.

பொன்னும் தேனும் விவிலியத்தில் அடிக்கடி வரும் வார்த்தைப் படங்கள். இவ்விரு வார்த்தைப் படங்களும் இன்றைய வாசகங்கள் முன்வைக்கும் இருபெரும் இணைப்புகளை நமக்கு உருவகப்படுத்துகின்றன: நமக்கும் இறைவனுக்கும் உள்ள இணைப்பு பொன் போலவும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும் உள்ள இணைப்பு தேன் போலவும் இருக்க வேண்டும்.

மேல்நோக்கிய நம் உறவு பொன் போல ஒளிர்வதும், சமநோக்கிய நம் உறவு தேன் போல இனிப்பதும் எப்படி?

விடுதலைப் பயண நூலில் அழகானதொரு பதிவு உண்டு. இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் செங்கடலைக் கடந்து பாலைவனத்தில் சீனாய் மலை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகின்றனர். அங்கே அவர்கள் சந்திக்கின்ற முதல் எதிரிகள் அமலேக்கியர். அமலேக்கியரோடு நடக்கின்ற அந்தப் போர் இரு தளங்களில் நடக்கிறது. மோசே ஒரு குன்றின்மேல் ஏறி நின்று தன் கைகளை உயர்த்திக்கொள்கின்றார். கீழே யோசுவாவின் தலைமையில் வீரர்கள் போரிடுகின்றனர். மோசேயின் கை கீழே தாழும்போதெல்லாம் அமலகே;கியரின் கை போரில் ஓங்குகிறது. இதைக் காணுகின்ற ஆரோனும் கூரும் மோசேயின் கைகளை உயர்த்திப் பிடிக்க, யோசுவாவின் படை அமலேக்கியரை வெல்கின்றது. இங்கே இஸ்ரயேல் மக்கள் பெற்றது ஒரு பெரிய வெற்றி மட்டுமல்ல. மாறாக, அவர்கள் பெரிய மற்றும் முதன்மையான ஒரு வாழ்க்கைப் பாடமும் அதுவே. அது என்ன வாழ்க்கைப் பாடம்? அவர்களின் கரங்கள் இறைவனை நோக்கி மேல் நோக்கியும், ஒருவர் மற்றவரை நோக்கிச் சம நிலையிலும் இணைந்திருந்தால் அவர்கள் வெற்றியும், வளமும், நலமும் பெறுவர்.

அவர்களின் பயணம் பாலைவனத்தில் தொடர்கிறது. சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். இப்பத்துக் கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் இறைவனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை மையப்படுத்தியதாகவும், மற்ற ஏழு கட்டளைகள் மக்களுக்கு இடையேயுள்ள உறவை மையப்படுத்தியதாகவும் அமைந்துள்ளன. அல்லது, முதல் மூன்று கட்டளைகள் மேல்நோக்கிய உறவை நெறிப்படுத்தவும், மற்ற ஏழு கட்டளைகள் சமநோக்கிய உறவை நெறிப்படுத்தவும் துணை செய்கின்றன.

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற பத்துக்கட்டளைகளை தங்களுடைய மிகப் பெரிய அடையாளமாகக் கருதினர். கடவுள் நேருக்கு நேர் பேசியதாக வேறெந்த மக்களும் இல்லை என்று பெருமை கொண்டனர்.

ஆனால், காலப்போக்கில், தங்கள் இறைவனுக்கும் தங்களுக்கும், தங்களுக்கும் தங்கள் இனத்தாருக்கும் உள்ள உறவை மறந்துவிட்டு, வெளிப்புற அடையாளங்களைப் பற்றிக்கொள்கின்றனர்.

அதன் விளைவு இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் காட்சி. எருசலேம் ஆலயத்துக்குள் நுழைகின்ற இயேசு அந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகிறார். இறைவனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவின் அடையாளமாக இருக்க வேண்டிய ஆலயம், ஒருவர் மற்றவரை அந்நியப்படுத்தும், அடிமைப்படுத்தும், வேறுபடுத்தும் அடையாளமாக மாறிவிட்டதை அறிந்த இயேசு, தலைகீழ் புரட்டிப் போடுதலைக் கொண்டுவருகின்றார். மேலும், நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில் மனிதர் உள்ளத்தை அறிந்தவராக இயேசு இருந்தார் என்று பதிவு செய்கின்றார் யோவான். இடம் சார்ந்த பிரசன்னம் என்று இருந்த ஆலயத்தை நபர் சார்ந்த பிரசன்னம் என்று மாற்றுகிறார் இயேசு. இவ்வாறாக, தன்னில் மேல்நோக்கிய உறவும் சமநோக்கிய உறவும் சந்திக்கின்றன என்பதை எடுத்துரைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், சிலுவை என்ற அடையாளத்தைக் கையில் எடுக்கின்ற பவுல், அது இடறலான அடையாளமாக கிரேக்கருக்குத் தெரிந்தாலும், அதில் இறைவல்லமை வெளிப்பட்டது என முன்மொழிகின்றார். 

ஆக, மேல்நோக்கிய மற்றும் சமம்நோக்கிய உறவுநிலை இணைப்பு பொன் போலவும் தேன் போலவும் இருத்தல் நலம். பொன் போல அரிதாகவும், தேன் போல இனிமையாகவும் இருத்தல் நலம்.

1 comment:

  1. இறைமாட்சியின் மேன்மை “பசும் பொன்னிலும்,தெளிதேனிலும் இனிமையானது” என்று தெளிவாக்க வரும் மறையுரை. அனைத்து வாசகங்களிலும் இதுவே பேசுபொருளாக இருக்கிறது.

    ‘விடுதலைப்பயணம்’..எனக்குப் பிடித்த பகுதி. இஸ்ரவேலருக்கும்,அமலேக்கியருக்கும் இடையே நடந்த போரில் இஸ்ரேலர் பெற்ற வெற்றி அவர்களின் புஜங்களின் பலத்தினால் அல்ல. வானத்தை நோக்கி குவித்த மேசேயின் ‘ வேண்டும் கரங்களால்’ தான்!

    சிலுவை அடையாளம் இடறலாக முதலில் பட்டாலும் பின் அது வல்லமையின் சின்னம் என்ற புரிதலைத் தர புனித பவுல் வேண்டாம்.நம் அனுபவமே போதும்.காலை முதல் மாலைவரை நாம் தூக்கும் நம் முதுகு கொள்ளா சிலுவைகள் நேரம் ஆக..ஆக இனிமை தருவதை நாம் அனுபவித்ததில்லையா?

    ‘ஆலயத்தின் புனிதம்’ பற்றிக்கூறும் நற்செய்தி.மனிதர் உள்ளமறிந்த இயேசு மனித உறவு மலர வேண்டிய இடமே ஆலயம் என்கிறார். இடம் சார்ந்த பிரசன்னத்தை நபர் சார்ந்த பிரசன்னமாக மாற்றுகிறார்.

    மேற்கூறிய அத்தனையும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம் உறவுகள் பசும் பொன்போலவும், தெளி தேன் போலவும் இருக்கும் என திருப்பாடலாசிரியரோடு சேர்ந்து நம்மாலும் பட முடியும் என்பதை இலகுவாக கூறும் தந்தைக்கு நன்றிகள்! தந்தைக்கு ஞாயிறு வணக்கங்களும் கூட...

    ReplyDelete