Thursday, March 25, 2021

நெருக்கடி

இன்றைய (26 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 10:31-42)

நெருக்கடி

விவிலியத்தில், 'நெருக்கடி' பற்றிய உருவகங்கள் திருப்பாடல்களில் அதிகம் காணக்கிடக்கின்றன. 'குறுகிய வழியில் நான் நடந்தேன். ஆனால், ஆண்டவர் என் பாதையை அகலமாக்கினார்', 'சறுக்கும் வழிகளில் நான் நடந்தேன். என் அடிகள் சறுக்காமல் நீர் பார்த்துக்கொண்டீர்', 'சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் நீர் என்னோடு இருக்கிறீர்' என்று திருப்பாடல்கள் மனித வாழ்வின் நெருக்கடிகளை உருவகங்களாகப் பதிவு செய்கின்றன. மேற்காணும் உருவகங்களை நாம் வாசிக்கும் இடங்களில் ஒன்று நமக்குத் தெளிவாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தன் வாழ்வில் எப்பொழுதெல்லாம் நெருக்கடி நிலையை அனுபவிக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவரின் உடனிருப்பைக் காண்கின்றார். 

நெருக்கடி இருக்கும் நேரத்தில் எல்லாம் இறைத்துணை இருக்கும் என்பதே விவிலியம் தரும் பாடமாக இருக்கின்றது.

இன்றைய வாசகங்கள் தங்கள் வாழ்வில் நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டு இரு மாந்தர்களை நம்முன் நிறுத்துகின்றன.

முதல் வாசகத்தில், எரேமியா ஆண்டவராகிய கடவுள்முன் சரணடைகின்றார். 'ஆண்டவரே! நீரோ என்னை ஏமாற்றிவிட்டீர்! நானோ ஏமாந்து போனேன்!' என்கிறார். தன் சொந்த ஊராரும் இனத்தாரும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நிற்க, தன் இறைவாக்குரைக்கும் பணி தோல்வியாகிவிட்டதை உணர்ந்து பின்வாங்க விழைகின்றார். அந்த நெருக்கடி நிலையில், அவர் உரைக்கும் அழகான வார்த்தைகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன: 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்.'

நிர்கதியாக நிற்கும் ஒருவரின் அருகில், அவரைக் காப்பாற்ற வாளேந்திய ஒரு வீரர் இருந்தால் அவர் துள்ளிக்குதிப்பார். அவருடைய தன்னம்பிக்கை உயரும், பயம் அகலும். எரேமியாவும் அப்படித்தான் உணர்கின்றார். 
நெருக்கடியான நிலையில் எரேமியாவால் எப்படி இறைத்துணையை உணர முடிந்தது?

அனைத்தும் இறைவனிடமிருந்து ஊற்றெடுக்கின்றன என உணர்பவர்கள் நெருக்கடி நேரத்தில் இறைவனின் உடனிருப்பை எளிதாக உணர்ந்துகொள்வர்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் யூதர்களுக்கும் எதிரான வாக்குவாதம் ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வருகின்றது. இயேசு, கடவுளைத் தன் தந்தை என அழைப்பதைப் பொறுத்துக்கொள்ளாத யூதர்கள் அவர்மேல் கல் எறிய முயற்சி செய்கின்றனர். அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்பதை அந்த நேரத்தில் இயேசு அவர்களுக்கு நினைவூட்ட முயல்கின்றார். அவருடைய முயற்சி தோற்றுப் போகிறது. 

தனக்கென்று யாருமற்ற அந்த நேரத்தில், 'என் தந்தை என்னுள்ளும் நான் என் தந்தையினுள்ளும் இருப்பதை ...' என்று இயேசு சொல்வது, அவர் பெற்ற இறைத்துணையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இன்று நாம் நம் வாழ்வில் நிறைய நெருக்கடிகளை நாம் சந்திக்கிறோம். வறுமை, முதுமை, தனிமை, நோய், இறப்பு, இழப்பு என நாம் எந்த எதார்த்தத்தை எதிர்கொண்டாலும் அங்கே இறைத்துணை நம்மோடு இருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்வோம்.

2 comments:

  1. நெருக்கடி இருக்கும் நேரத்தில் எல்லாம் இறைத்துணை இருக்கும் என்பதே விவிலியம் தரும் பாடமாக இருக்கின்றது.

    அனைத்தும் இறைவனிடமிருந்து ஊற்றெடுக்கின்றன என உணர்பவர்கள் நெருக்கடி நேரத்தில் இறைவனின் உடனிருப்பை எளிதாக உணர்ந்துகொள்வர்.


    இன்று நாம் நம் வாழ்வில் நிறைய நெருக்கடிகளை நாம் சந்திக்கிறோம்.
    எந்த எதார்த்தத்தை எதிர்கொண்டாலும் அங்கே இறைத்துணை நம்மோடு இருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்வோம்.

    நன்றி🙏

    ReplyDelete
  2. “ நெருக்கடி” நேரத்தில் நம் நெருடல் போக்கவரும் வரிகள், திருப்பாடலின் ஆசிரியருக்கும் இறைவனின் உடனிருப்பைக் உண்மையென உணர்த்தியிருக்கும்.ஆண்டவர் என்னைவிட்டு தூரமாக இருக்கிறார் என உணரவேண்டிய பொழுதுகளில் கூட “ ஆண்டவர் வலிமை வாய்ந்த வீர்ரைப்போல் என்னோடு இருக்கிறார்” என்று சொல்லும் எரேமியா போன்றவர்கள் “அனைத்தும் இறைவனிடமிருந்தே ஊற்றெடுக்கின்றன” என நமக்குச் சொல்பவர்கள்.

    தன்னுடைய முயற்சி தோல்வியுறும் நேரத்திலும் “ என் தந்தை என்னுள்ளும்,நான் என் தந்தையுள்ளும் இருப்பதை” என்று சொல்லும் இயேசுவாக நான் மாற போதுமான இறைத்துணை என்னுள் ஊற்றெடுக்கிறதா? அப்படி அந்த இறைத்துணை என்னுள் தடையின்றி சுரக்கும் பட்சத்தில் “என்னாலும் என் தனிமை,வறுமை,முதுமை,நோய்,இறப்பு, இழப்பு இவைகளை இருகரம் நீட்டி வரவேற்க இயலும்; எனக்கு தெம்பு அளிக்கும் இறைவன் என் கூடவே பயணிக்கிறார் என்ற எண்ணம் என்னைத்தாங்கி நிற்கும்” என்கின்றன தந்தையின் ஆறுதலின் வரிகள்.

    “அந்தரத்தில் நான் மிதந்திடினும் மேல் காணும் படத்தில் காண்பதுபோல் ஆகாயத்தில் உறையும் இறைவன் தன் கைகளை நீட்டி என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்.””௶இந்த எண்ணம் நம்மிடமிருப்பின் நமக்கு ஆழமான கடலும் புல்வெளியே!” என்ற எண்ணத்தை என்னுள் விதைக்கும் வரிகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete