Saturday, March 13, 2021

தூரமும் இனிமையே!

தவக்காலம் 4ஆம் ஞாயிறு (மகிழ்ச்சி ஞாயிறு)

I. 2 குறிப்பேடு 36:14-16,19-23 II. எபேசியர் 2:4-10 III. யோவான் 3:14-21

தூரமும் இனிமையே!

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு, 'மகிழ்ச்சி ஞாயிறு' என அழைக்கப்படுகின்றது. 'மகிழ்ச்சியின் ஞாயிறான' இன்றைய பதிலுரைப் பாடல், அதற்கு நேர் எதிரான உணர்வைப் பதிவு செய்வது போல உள்ளது: 'பாபிலோனின் ஆறுகள் அருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம் ... எருசலேமே நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப் போவதாக!' (காண். திபா 137). 'நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல்' என அழைக்கப்படும் இத்திருப்பாடலில் இஸ்ரயேல் மக்களின் சோகம், விரக்தி, தவிப்பு, எருசலேமுக்கான ஏக்கம், அந்நிய நாட்டின் வலி, அந்நிய நாட்டின்மேல் கோபம், தங்களின் கையறு நிலை என எல்லாம் தெரிந்தாலும், இவற்றை எல்லாம் தாண்டி, 'எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர்' என்னும் அவர்களுடைய வார்த்தைகளில், 'மகிழ்ச்சி' இன்னும் மறைந்துவிடவில்லை என்பது தெளிவாகிறது.

இந்தப் பாடலின் பின்புலம் என்ன என்பதை விளக்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். 2 குறி 36:14-16,19-23). குறிப்பேடுகள் ஆசிரியர் வரலாறு என்பது இணைச்சட்டவியலாளர் வரலாற்றின் (யோசுவா முதல் 2 அரசர்கள் வரை உள்ள நூல்கள்) தொடர்ச்சியாக இருந்தாலும், குறிப்பேடுகள் நூல் ஆசிரியர் இறைவனின் இரக்கத்தையும், பரிவையும் முதன்மைப்படுத்தி, அவரின் அருள்கரம் எப்படி வரலாற்றில் செயலாற்றியது என்பதை எடுத்துரைக்கின்றார். குறிப்பேடுகள் 2ஆம் நூலின் இறுதிப் பகுதியே இன்றைய முதல் வாசகம். இங்கே, ஆதாம் முதல் சைரசு அரசன் வரை நடந்த நிகழ்வுகளை ஒரே மூச்சில் நினைவுகூரும் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களைச் சுட்டிக்காட்டுவதோடு, மனித பிரமாணிக்கமின்மையையும் கடந்த கடவுளின் பிரமாணிக்கமும் நம்பகத்தன்மையும் மேலோங்கி நிற்பதை உறுதிபடக் கூறுகின்றார்.

இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த மூவகைத் தூரங்களை எடுத்துரைக்கின்றது: (அ) குருக்களும் தலைவர்களும் உண்மையற்றவர்களாக நடந்து இறைவனை விட்டுத் தூரமாகப் போயினர். இங்கே, குருக்கள் என்பவர்கள் லேவி குலத்தைச் சார்ந்தவர்கள், தலைவர்கள் என்பவர்கள் யூதா குலத்தில் தாவீதின் வழி வந்த அரசர்கள். இவர்கள் தங்களின் உடன்படிக்கை பிரமாணிக்கத்தை மறந்துவிட்டனர். இவர்களது தவறு யூதா மக்களின் அழிவுக்கும் வழி வகுக்கின்றது. (ஆ) இறைவாக்கினர்களின் குரலுக்குச் செவிகொடுக்க மறுத்து தூரமாயினர். குருக்கள் மற்றும் அரசர்களின் பிரமாணிக்கமின்மையை எரேமியா போன்ற இறைவாக்கினர்கள் வழியாகக் கண்டிக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆனால், அவர்கள் இறைவாக்கினர்களின் குரலுக்குச் செவிகொடுக்க மறுக்கின்றனர். (இ) பாபிலோனியாவுக்கு (கல்தேயாவுக்கு) நாடுகடத்தப்படுகின்றனர். நெபுகத்னேசர் அரசர் தலைமையில் படையெடுத்து வருகின்ற பாபிலோனியர்கள் எருசலேம் நகரத்தையும் ஆலயத்தையும் தீக்கிரையாக்கியதோடு  மக்களையும் அடிமைகளாகத் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

தங்களுடைய பிரமாணிக்கமின்மையால், செவிட்டுத்தன்மையால், நாடுகடத்தப்பட்டதால் இஸ்ரயேல் மக்கள் தூரமாக இருந்தாலும், ஆண்டவராகிய கடவுள் அத்தூரத்திலும் செயலாற்றுகின்றார். பாரசீக மன்னன் சைரசு வழியாக அவர்களை மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார். இதுவும் இறைவனின் செயலே. இறைவன் புறவினத்து அரசர் வழியாகச் செயலாற்றி, தன் சொந்த மக்களைத் தன்னோடு மீண்டும் அணைத்துக்கொள்கின்றார்.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களுடைய வாழ்வில் தூரமும் இனிமையாக மாறுகிறது இறைவனின் உடன்படிக்கைப் பிரமாணிக்கத்தால்!

இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 2:4-10), 'நீங்கள் மீட்கப்பட்டிருப்பது கடவுளின் அருளாலேயே' என எபேசு நகர இறைமக்களைப் பார்த்து மொழிகின்றார் புனித பவுல். இந்த வாசகத்திற்கு முந்தைய பகுதியில், 'உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள்' என அவர்களுடைய பழைய மற்றும் கடந்த கால வாழ்வை நினைவுறுத்துகின்றார். அதாவது, தங்களுடைய பாவச் செயல்களாலும், தீய நாட்டங்களாலும், உடல் மற்றும் மனத்தின் ஆசைகளாலும் கடவுளிடமிருந்து தூரமாக இருந்த எபேசு நகர இறைமக்கள், தூரமாக இருந்த நிலையில் கடவுளின் அருளைக் கண்டுகொள்கின்றனர்.

இவ்வாறாக, எபேசு நகர மக்கள் அனுபவித்த தூரமும் இனிமையாக மாறுகிறது இறைவனின் அருள்கொடையால்!

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 3:14-21), இயேசு-நிக்கதேம் உரையாடலின் பிற்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உரையாடல் போன்று தொடங்குகின்ற வாசகப்பகுதி இறுதியில் உரைவீச்சாக முடிகின்றது. இந்த உரைவீச்சில் முரண்சொற்களை மிகுதியாகக் கையாளுகின்றார் யோவான்: 'அழிவு -  நிலைவாழ்வு,' 'உலகு - கடவுள்,' 'தண்டனைத் தீர்ப்பு - மீட்பு,' 'நம்பிக்கை கொள்ளாதோர் - நம்பிக்கை கொள்வோர்,' 'தீச்செயல்கள் செய்வோர் - உண்மைக்கேற்ப வாழ்வோர்'. இம்முரண் சொற்களில் முதன்மையாக வரும் சொற்கள் அனைத்தும் தூரத்தைக் குறிப்பனவாக உள்ளன. ஒவ்வொரு பகுதியாக இந்த வாசகத்தைப் புரிந்துகொள்வோம். 'மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்' என்கிறார் இயேசு. இங்கே உயர்த்தப்படுதல் என்பது, நேரிடையாக, 'இயேசுவின் சிலுவைச் சாவையும்,' மறைமுகமாக, 'அவரின் உயிர்ப்பையும்' குறிக்கின்றது. 'நிலைவாழ்வு' என்பது மறுவாழ்வு அல்லது இறப்புக்குப் பின் வாழ்வு என்றும் புரிந்துகொள்ளப்படலாம். இவ்வுலகிலேயே ஒருவர் பெறுகின்ற 'நிறைவாழ்வு' என்றும் எடுத்துக்கொள்ளலாம். பிந்தைய பொருளே மிகவும் பொருத்தமானது. 'உலகு' என்பது யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், 'கடவுளின் இயங்குதளம்,' 'மனிதர்களின் வாழ்விடம்,' மற்றும் 'கடவுளுக்கு எதிரான மனநிலை.' இங்கே 'உலகு' என்பது கடவுளின் இயங்குதளமாக இருக்கிறது. ஆனால், கடவுளை விட்டுத் தூரமாக இருக்கிறது. 

கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள தூரம் மூன்று நிலைகளில் முன்மொழியப்படுகிறது: ஒன்று, உலகு நம்பிக்கை கொள்ளவில்லை. அதாவது, கடவுளின் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொள்ளவில்லை. இரண்டு, உலகு இருளால் நிறைந்திருந்தது. இருள் என்பது பாவம் அல்லது தீமையைக் குறிக்கிறது. மூன்று, தீய செயல்கள் செய்வோரின் உறைவிடமாக அல்லது தீய செயல்கள் நிறைந்த இடமாக இருந்தது. 

இவ்வாறாக, உலகு கடவுளைவிட்டுத் தூரமாக இருந்தாலும், 'தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்கின்றார்.' கடவுள் இவ்வுலகை அன்புகூர்ந்ததால் உலகு இனிமையை அனுபவிக்கின்றது.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றில், நாம் உயிர்ப்பு விழாவுக்கு 'அருகில்' வந்துவிட்டோம். ஆனால், நம் உடலும் உள்ளமும் இன்னும் இறைவனை விட்டுத் தூரமாக இருக்கலாம். ஆனால், தூரமும் இனிமை என்பதே நாம் இன்று கற்கும் பாடம். தங்கள் பாவத்தால் கடவுளிடமிருந்து நம் முதற்பெற்றோர் தூரமாகிப் போனதால்தான், நாம் மீட்பர் கிடைக்கப் பெற்றோம். இதையே, நாம் பாஸ்காப் புகழுரையில் 'பாக்கியம் பெற்ற குற்றமே!' என்று பாடுகிறோம். காணாமற் போன இளைய மகன் தன் இல்லத்தின் தூரத்தில்தான் தன்நிலை உணர்கின்றார். அருகிலேயே இருந்த மூத்த மகனோ வாழ்வைக் கசப்பாக வாழ்கின்றார். தன் கண்கள் பிடுங்கப்பட்டு எதிரியின் அரண்மனையில் கேலிப் பொருளாய் தூரத்தில் நின்ற சிம்சோன் இறைவனை நோக்கிக் குரல் எழுப்ப இறைவன் அவருக்குச் செவிகொடுக்கின்றார். புனித அகுஸ்தினார் தன் வாழ்வின் தூரத்தில்தான் இறைவனின் இனிமையைக் கண்டு, 'அழகே, இனிமையே, இறைவனே!' என்று சரணாகதி அடைகின்றார். இன்று நம் வாழ்விலும் நாம் இஸ்ரயேல் மக்கள் போல, எபேசு நகர மக்கள் போல, இந்த உலகம் போல இறைவனிடமிருந்து தூரமாகி நிற்கலாம். ஆனால், தூரமும் இனிமையே என உணர்தல் இறைவன்தரும் செய்தி.

தூரமும் இனிமையே என்பதை நாம் எப்படி நம் வாழ்வில் உணர்வது?

1. எல்லாவற்றிலும் இறைவனின் கரத்தைக் காண்பது

பாரசீக நாட்டு அரசர் சைரசு புறவினத்தாராக இருந்தாலும், தாங்கள் இருக்கும் மண் புறவினத்து மண்ணாக இருந்தாலும், அங்கே கடவுளின் கரத்தைக் காண்கின்றார் குறிப்பேடுகள் நூல் ஆசிரியர். எல்லாவற்றிலும் இறைவன் கரத்தைக் காண்பவர்கள் இறைவனின் கரம் எத்துனை தூரம் என்பதை உணர முடியும். புனித மோனிக்கா தன் அடக்க நிகழ்வு பற்றிச் சொல்கின்ற பகுதியில், 'என்னை எங்கே வேண்டுமானாலும் அடக்கம் செய்யுங்கள். இறைவனின் கரம் எப்போதும் எனக்கு அருகில். எவ்வளவு தூரமாக நான் இருந்தாலும் என்னை அள்ளிக்கொள்வதில் அவர் வல்லவர்' என்று சொன்னதாக புனித அகுஸ்தினார் எழுதுகின்றார். 

2. நற்செயல்கள் செய்வது

நாம் தூரத்தில் இருந்தாலும் நம் செயல்கள் நற்செயல்களாக இருக்க வேண்டும். நம்பிக்கை கொண்ட எபேசு நகர இறைமக்கள் தங்கள் நம்பிக்கைக்கேற்ற நற்செயல்கள் செய்ய வேண்டும். தூரமாய் இருந்த இளைய மகன் தன் தந்தையின் இல்லம் பற்றி எண்ணிப் பார்த்ததே அவர் செய்த நற்செயல். எந்த இடத்தில், எந்த நிலையில் நாம் இருந்தாலும் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை நற்செயல்களுக்கு நம்மைத் தூண்டி எழுப்பினால் தூரம் இனிமையே.

3. ஒளியைத் தெரிவு செய்வது

நான் எதை விரும்புகிறேனோ அதையே தெரிவு செய்கிறேன். அல்லது எனது தெரிவில் என் விருப்பம் வெளிப்படுகிறது. உலகில் இருக்கும் ஒருவர் முன் இருளும் ஒளியும் இருக்கிறது. ஒளியைத் தெரிந்துகொள்ளும் ஒருவர் தான் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்து செய்பவர் ஆகிறார். கடவுளோடு இணைந்து செய்யப்படும் அனைத்தின் இறுதியும் இனிமையே.

தூரத்திலிருந்து அடிக்கப்படும் பந்து மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது!

தூரமாக ஓங்கி அடிக்கப்படும் ஆணி ஆழமாகப் பதிகிறது!

அறுத்து அறுத்துக் கட்டப்படும் கயிற்றின் இரு முனைகளும் வேகமாக அருகில் வருகின்றன.

கடவுளைவிட்டுத் தூரமாக நாம் நின்றாலும் அவருடைய மகிழ்ச்சிப் பா நம் உதடுகளில் இருந்தால் நலம். இல்லையென்றால், 'நம் நா மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக!' (திபா 137). 

1 comment:

  1. “ தூரமும் இனிமையே” என்ற அழகான சொற்றொடரோடு ஆரம்பிக்கிறது இவ்வார மறையுரை. தூரம் செல்லும் ஒருவரால் தான், திரும்பி வருதலின் வெற்றியைக்கொண்டாட முடியும்....எபேசு நகர மக்கள் போல்....இளைய மகன் போல்.... தூரத்தில் நின்ற சிம்சோன் போல்....புனித அகுஸ்தினார் போல். தங்களின் பிரமாணிக்கமின்மையால் இறைவனை விட்டுத் தள்ளி நின்ற இஸ்ரேல் மக்களை அணைத்துக்கொண்ட இறைவன்.... தங்களின் இறந்து போன தன்மையால் இறைவனிடமிருந்த தூரநின்ற எபேசு நகரமக்களைத் தன்னவராக அள்ளிக்கொண்ட இறைவன் நம் பாவத்தால் நாம் அவரை விட்டுத் தூரநின்றிடினும் அதைப்பொருட்படுத்துவதில்லை என்று சொல்ல வருகின்றன இன்றைய வாசகங்கள்.

    தூரத்தில் நாம் நின்றிடினும் நம்மை நோக்கிக் கரங்களை நீட்டும் இறைவனின் கரங்களைக் கண்டு கொள்ள எல்லாவற்றிலும் இறைவனின் கரத்தைக்காண்பதும்,நற்செயல்களைச் செய்வதும், இருளைப்புறந்தள்ளி ஒளியைத்தெரிவு செய்து கொள்வதுமே நாம் செய்ய வேண்டியது என்கிறார் தந்தை.

    இறைவனின் கரங்களைத் தேடுபவர்களுக்கு மட்டுமே அவை எத்தனை தூரத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியும் என்பதை எடுத்துச்சொல்லும் புனித மோனிக்காவின் “ என்னை எங்கே வேண்டுமானாலும் அடக்கம் செய்யுங்கள்.இறைவனின் கரம் எப்பொழுதும் எனக்கருகில்.எவ்வளவு தூரமாக நான் இருந்தாலும் என்னை அள்ளிக்கொள்வதில் அவர் வல்லவர்”....... நமக்கருகிலும் அவர் இருக்கமுடியும் எனும் நம்பிக்கையைத்தருகின்றன.

    வேகமாகக் கடந்து செல்லும் இந்த தவக்கால நாட்களில் எத்தனை தூரத்தில் இறைவனை விட்டு நாமிருப்பினும், நம்பிக்கையோடு அவரது நீட்டிய கரங்களை நோக்கி நாம் நகர்ந்தால் நமக்கும் அந்த தூரத்தைக்கடப்பது இனிமையே! என்ற செய்தியைத தரும் தந்தைக்கு என் நன்றியும்! ஞாயிறு வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete