Thursday, March 11, 2021

அறிவுத்திறனோடு

இன்றைய (12 மார்ச் 2021) நற்செய்தி (மாற் 12:28-34)

அறிவுத்திறனோடு

காணாமற் போன இளைய மகன் எடுத்துக்காட்டில், 'அறிவுத் தெளிந்தவராய்' என்ற ஒரு சொல்லாடல் கதையின் திருப்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. மேலும், கதையின் தொடர்ச்சியில், தந்தையை விட்டுத் தூரத்தில் இருந்த இளைய மகன் அறிவு தெளிகின்றார். தந்தைக்கு அருகிலேயே இருக்கும் மூத்த மகன் அறிவுத் தெளிவின்றி செயலாற்றுகின்றார்.

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள், மனமாற்றம் அல்லது இறைவனை நோக்கிய திருப்பம் என்பது வெறும் உணர்வு வெளிப்பாடு (emotional outcome) அல்ல, மாறாக, அறிவின் வெளிப்பாடு (rational action) எனச் சொல்கின்றன.

எப்படி?

நம் வாழ்வில் நாம் இரு தளங்களில் செயலாற்றுகின்றோம். ஒன்று, உணர்வுத் தளம். இரண்டு, அறிவுத் தளம். உணர்வுத் தளத்தில் நாம் பெரும்பாலும் நம் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகின்றோம். ஆனால், அறிவுத் தளத்தில், நாம் நல்லது எது, அல்லது எது எனத் தேர்ந்து தெளிந்து அதற்கேற்ப செயலாற்றுகிறோம். நம் அன்றாட மானுட உறவுகளில் பிறழ்வுகளும் விரிசல்களும் ஏற்படக் காரணம், நாம் உணர்வுத் தளத்திலேயே நின்று செயலாற்றுவது தான்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஓசே 14:1-9), இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய உணர்வுகளால் உந்தப்பட்டு வேற்றுத் தெய்வங்கள் பக்கம் திரும்பினார்கள், அசீரியர்களோடு உறவு கொண்டார்கள், குதிரை மீது ஏறி எகிப்து சென்றார்கள் எனச் சுட்டிக்காட்டும் ஆண்டவராகிய கடவுள், 'ஞானம் நிறைந்தவன் எவனோ அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும். பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்' என்கிறார். 

இஸ்ரயேல் மக்கள் பகுத்தறிய வேண்டியது எதை? 

இறைவனின் பரிவை.

அதாவது, தாங்கள் தங்களின் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், ஆண்டவராகிய கடவுள் தங்கள்மேல் பரிவு காட்டுகின்றார் என்பதை இஸ்ரயேல் மக்கள் பகுத்தறிய வேண்டும். அப்படி அவர்கள் பகுத்தறியும்போது நேர்மையானதைச் செய்யத் தொடங்குவர்.

நற்செய்தி வாசகத்தில், 'முதன்மையான கட்டளை எது?' என்ற கேள்வியை மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேட்க, இயேசுவும், 'இறையன்பு' மற்றும் 'பிறரன்பு' என்னும் இரு கட்டளைகளை முன்மொழிகின்றார். இயேசுவின் வார்த்தைகளைத் தனதாக்கும் மறைநூல் அறிஞர், 'இவ்விரு கட்டளைகளையும் கடைப்பிடிப்பது - அதாவது, இறைவனையும் அடுத்திருப்பவரையும் அன்பு செய்வது - எரிபலிகளையும் பிற பலிகளையும் விட மேலானவை என்கிறார்.

'இவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததாக' மொழிகின்றார் இயேசு.

ஒன்று, திருச்சட்டத்தில் உள்ள அறிவையும் ஞானத்தையும் இவர் கண்டுகொள்கின்றார்.

இரண்டு, அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது பலி போன்ற ஒரு செயல் என்பதை அவர் உணர்கிறார்.

ஆக, 

இன்றைய நாளில், உணர்வுசார் தளத்திலிருந்து அறிவுசார் தளத்திற்கு நம்மை அழைக்கின்றது இறைவார்த்தை வழிபாடு.

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவில், நாம் உணர்வுசார் தளத்தில் செயல்படும்போது, அச்சம் கொள்கிறோம், நம்பிக்கை இழக்கிறோம், விரக்தி அடைகிறோம், பிரமாணிக்கத்தில் தவறுகிறோம்.

நமக்கும் பிறருக்கும் உள்ள உறவில், நாம் உணர்வுசார் தளத்தில் இயங்கும்போது, எரிச்சல் கொள்கிறோம், தேவையற்ற எதிர்பார்ப்புகளைத் திணிக்கிறோம், அடுத்தவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.

உறவுசார் தளத்திலிருந்து அறிவுசார் தளத்திற்குச் செல்வது நமக்கு எளிது.

கொஞ்சம் மௌனம் - இது இருந்தால் போதும்.

ஒரு நொடி நாம் மேற்கொள்கின்ற அமைதி, நம் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அறிவு செயல்பட அனுமதி அளிக்கும்.

அறிவுத்திறன் கொண்டவரே அன்பு செய்ய முடியும். ஏனெனில், அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு தெரிவு.

1 comment:

  1. அருமை! மீண்டும் ‘அன்பு’ முன்மொழியப்படும் ஒரு பதிவு.“இறைவனையும்,அடுத்திருப்பவரையும் அன்பு செய்வது எரிபலிகளையும்,பிறபலிகளையும் மேலானவை” என்கிறார் இயேசு. உறவு சார் தளத்திலிருந்து அறிவு சார் தளத்திற்குச் செல்ல முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்கிறார் தந்தை.உறவுசார்.....அறிவு சார்...எல்லாமே புதுசு.

    இந்த முயற்சி நாம் நினைக்குமளவிற்குக் கடினமல்ல.... கொஞ்சம் மௌனம் இருந்தால் போதும் என்கிறது ஒரு ஆறுதலின் வார்த்தை.நம் ஒருநொடி அமைதி அறிவு செயல்பட அனுமதிக்க...அறிவுத்திறன் கொண்டவரை அன்பு செய்யத் தூண்ட முடியும்.ஏனெனில் “அன்பு” என்பது வெறும் உணர்வு அல்ல...மாறாக அது ஒரு தெரிவு எனும் தந்தையின் வார்த்தைகள் நம்மையும் யாரையும்..... எவரையும் அன்பு செய்ய அறைகூவல் விடுகின்றன. நான் “ அன்பின் தூதுவனாய்ப்” பார்க்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete