இன்றைய (16 மார்ச் 2021) நற்செய்தி (யோவான் 5:1-3,5-16)
அம்மனிதர் நலமடைந்தார்
யோவான் நற்செய்தியில் இயேசு நிகழ்த்திய மூன்றாவது அறிகுறியை இன்று வாசிக்கின்றோம். இயேசுவின் முதல் மற்றும் இரண்டாம் அரும் அடையாளங்களுக்குப் பின்னர் சீடர்களும் மக்களும் அவர்மேல் நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால், மூன்றாவது முதல் ஏழாவது வரை உள்ள அரும் அடையாளங்கள் முந்தையவற்றை விட இரண்டு நிலைகளில் வேறுபடுகின்றன: ஒன்று, இனி வரும் ஒவ்வொரு அரும் அடையாளத்திற்குப் பின்னரும் இயேசு ஒரு நீண்ட உரை ஆற்றுவார். இரண்டு, அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவர்மேல் நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுவர்.
இயேசுவின் மூன்றாவது வல்ல செயல் எருசலேமில் நடக்கிறது. பெத்சதா குளம் அருகே வருகின்ற இயேசு முப்பத்து எட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை அங்கு கண்டு அவருக்கு நலம் தருகின்றார். அந்தச் செயல் ஓய்வு நாளில் நடந்தேறியதால் யூதர்கள் இயேசுவைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேலின் இறுதிக் காட்சியை வாசிக்கின்றோம். ஆண்டவரின் மாட்சி எருசலேமை விட்டு நீங்கியிருந்தது. ஆனால், பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்னர் மீண்டும் ஆண்டவரின் மாட்சி எருசலேமை நிரப்புகிறது. தண்ணீர் உருவகத்தின் வழியாக ஆண்டவரின் மாட்சி அந்த நகருக்கு நலமும், வளமும், உயிரும் தந்தது என்பதைக் காட்சியாகக் காண்கிறார் இறைவாக்கினர்.
எருசலேமில் ஊற்றெடுக்கும் தண்ணீர் நலமும் வளமும் உயிரும் தருகிறது.
வானதூதர் இறங்கி கலக்கிவிடும் பெத்சதா குளத்துத் தண்ணீரும் நலம் தருகிறது.
வானதூதர் இறங்கிக் கலக்குமுன், இறைமகனே அங்கு வருகிறார். வாழ்வு தரும் தண்ணீராக சமாரியப் பெண்ணுக்குத் தன்னை முன்வைத்தவர், நலம் தரும் தண்ணீராக இங்கே மாறி நிற்கிறார். இயேசுவின் வருகையினால் தண்ணீர் பெத்சதா குளத்தின் ஐந்து மண்டபங்களிலும் பாய்ந்தோடியது.
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் படிகளில் கிடந்தவர் நலம் பெறுகிறார்.
ஆனால், தங்களுடைய ஓய்வுநாள் சட்டங்கள் என்னும் படிகளில் கிடந்த யூதர்கள் நலம் பெறாமல் நிற்கின்றனர்.
இங்கே, 'யூதர்கள்' என்னும் வார்த்தை, ஓர் இனத்தை அல்ல, மாறாக, இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறிக்கிறது. மேலும், 'பாவம்' என்பது இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைக் குறிக்கிறது. ஆக, தன்மேல் நம்பிக்கை கொள்ளுமாறு அந்த மனிதரை அழைக்கிறார் இயேசு.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) பாழாய்க் கிடந்த எருசலேம் நகரம் தண்ணீர் நிரம்பிய நகரமாக மாறும். பாழாய்க் கிடக்கும் நம் வாழ்வும் ஒரு நாள் புத்துயிர் பெறும்.
(ஆ) முப்பத்தெட்டு ஆண்டுகளாய் அந்த நபருக்கு அந்த வாழ்க்கை பழகிப் போய்விட்டது. இன்று நான் என் வாழ்வில் பழகிப்போய்விட்ட நிலைகள் எவை?
(இ) என் கண்முன் ஒருவர் நலம் பெறும்போது, அதைக் கொண்டாடுகிறேனா? அல்லது அவர் நலம் பெற்றது குறித்து - அன்றைய யூதர்கள் போல - நான் இடறல் படுகிறேனா?
"ஆனால், தங்களுடைய ஓய்வுநாள் சட்டங்கள் என்னும் படிகளில் கிடந்த யூதர்கள் நலம் பெறாமல் நிற்கின்றனர்."
ReplyDeleteநான் இன்று,எந்நிலையில் இருக்கிறேன்...?🤔
நன்றி.🙏
நாம் நம் பொது வாழ்வில் “ தண்ணீர்” எனப் போகிற போக்கில் சொல்லும் ஒரு வார்த்தை புனிதம் பெறுகிறது இன்றையப் பதிவில்.
ReplyDelete“ எருசலேமில் ஊற்றெடுக்கும் தண்ணீர் நலமும்,வளமும்,உயிரும் தருகிறது”.. மற்றும்...
வானதூதர் இறங்கிக் கலக்கி விடும் பெத்சதா குளத்து நீரும் நலம் தருகிறது.” ...எனும் வரிகள் பாழாய்க் கிடக்கும் நம் வாழ்வும் ஒரு நாள் புத்துயிர் பெறும்” எனும் நம்பிக்கையை முன் வைப்பதாகச் சொல்கிறார் தந்தை.
என் வாழ்வின்...என் தேகத்தின் முடக்குவாதம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும்.... என் கண்முன் ஒருவர் நலம் பெறுகையில் நான் உணர்வது கொண்டாட்டமா இல்லை இடறலா என்பதைத் தேடிப்பார்க்கவும் அழைக்கிறது இன்றையப் பதிவு.அழைப்பு விடுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!
Good Reflection Yesu. God bless us
ReplyDelete